under review

கரிகாலன்

From Tamil Wiki
கரிகாலன்

கரிகாலன் (பிறப்பு: ஜூலை 28, 1965) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தத்துவப் பின்புலத்தில் செயல்படுபவர். களம் புதிது என்ற அமைப்பின் மூலம் இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

கரிகாலன் கடலூர் மாவட்டம் மருங்கூரில் இரத்தினசபாபதி, இராசலட்சுமி இணையருக்கு ஜூலை 28, 1965-ல் பிறந்தார். விருத்தாசலம் பெரியார் நகரில் வசிக்கிறார். கரிகாலன் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கரிகாலன் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார்.

கரிகாலன் மே 9, 1993-ல் ஆசிரியரும், எழுத்தாளருமான சு.தமிழ்ச்செல்வியை மணந்தார். மகள்கள் சிந்து, சுடர். மகன் கார்க்கி.

அமைப்புப் பணிகள்

  • கரிகாலன் எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வியோடு இணைந்து உலகத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பங்கேற்ற 'பெண்கள் சந்திப்பு' நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
  • திருமுதுகுன்றம் எழுத்தாளர் கூட்டமைப்பின் வழி தமிழ்க் கலாச்சார மீட்புக்கான போராட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை நடத்தினார்.
  • தமிழ் ஈழ ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.
களம் புதிது

'களம் புதிது' இலக்கிய அமைப்பின் வழி, இலக்கிய அரங்குக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பின் நவீனத்துவ தொடர் சொற்பொழிவுகளை ஒருங்கிணைத்தார். சிறந்த கவிஞர்களுக்கு களம்புதிது விருது வழங்கினார்.

இதழியல்

கரிகாலன் 'களம் புதிது' இதழின் ஆசிரியர். 12 இதழ்கள் வந்தன. தற்போது இதழ் வெளியாகவில்லை.

இலக்கிய வாழ்க்கை

கரிகாலன் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தத்துவப் பின்புலத்தில் செயல்படுபவர். கரிகாலனின் முதல் கவிதைத் தொகுப்பு “புகைப்பட மனிதர்கள்” 1992-ல் களம் புதிது வெளியீடாக வந்தது. களம் புதிது, நிகழ், காலச்சுவடு, உயிர் எழுத்து, தமிழ் இந்து, ஆனந்த விகடன், குமுதம், ஜூனியர் விகடன், குங்குமம், சுபமங்களா, தீராநதி ஆகிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. இலக்கியக் கூட்டங்கள், பண்பாடு சார்ந்த கருத்தரங்குகள், கல்விப் புலம் சார்ந்த அரங்குகளில் உரையாற்றினார்.

இவரது 'ஊராகாலி' எனும் சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஜெ.என்.யு பல்கலைக் கழகத்தின் மொழிபெயர்ப்புத்துறையின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றது. இவரது சில கவிதைகள், ஆங்கிலம், மலையாளம், இந்தி, வங்க மொழிகளில் வெளியாகியுள்ளன. பண்பாடு, கலை, நுண் அரசியல் வெளிகளில் தொடர்ந்து இயங்கிவருபவர். தாஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், சாதத் ஹசன் மண்ட்டோ, வைக்கம் முகம்மதுபஷீர், எஸ்.கெ. பொற்றேகாட் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

தொண்ணூறுகளில் உருவான தனித்துவமிக்க கவி ஆளுமைகளுள் ஒருவரான கரிகாலனின் கவிதைகள் அதிகார எதிர்ப்பை மையச் சரடாகக் கொண்டவை. தொன்மமும், புனைவும், மர்மமும் மிகுந்த இவரது கவிதைகள் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியும், மேலைத்தேயக் கவிதைகளின் புதுமையும் இணையப் பெற்றவை.

விருதுகள்

  • கதா விருது
  • ஏலாதி இலக்கிய விருது
  • ஜெயந்தன் நினைவு விருது

நூல் பட்டியல்

நாவல்
  • எக்ஸ் (வேரல்)
குறுங்கதை
  • எக்ஸிசம் (படைப்பு)
கவிதைத் தொகுப்பு
  • புகைப்பட மனிதர்கள் (களம் புதிது)
  • அப்போதிருந்த இடைவெளியில் (களம் புதிது)
  • புலன் வேட்டை (ஸ்நேகா)
  • இழப்பில் அறிவது (ஸ்நேகா)
  • தேவதூதர்களின் காலடிச்சத்தம் (மருதா)
  • ஆறாவது நிலம் (மருதா)
  • அபத்தங்களின் சிம்பொனி (புதுமைப்பித்தன்)
  • கரிகாலன் கவிதைகள் (உயிர் எழுத்து)
  • பாம்பாட்டி தேசம் (சால்ட்)
  • மெய்ந்நிகர் கனவு (டிஸ்கவரி)
  • தாமரை மழை (நான்காவது கோணம்)
  • செயலிகளின் காலம் (டிஸ்கவரி)
  • உயிர் நன்று, சாதல் இனிது (படைப்பு)
  • மகள் வீடு திரும்பும் பாதை (வேரல்)
  • கிரின்ஞ் (வேரல்)
  • பிக்காஸோ ஏன் அழுகிறார் (வேரல்)
சினிமா
  • திரையும் வாழ்வும் (வாசகசாலை)
  • திரையும் வாழ்வும் - பாகம் 2 (படைப்பு)
  • தெய்வத்திண்டே திர (படைப்பு)
  • சமகால மலையாள சினிமா(படைப்பு)
சங்க இலக்கியம்
  • என்மனார் புலவர் (படைப்பு)
  • நோம் என் நெஞ்சே (படைப்பு)
  • அகத்தொற்று (படைப்பு)
பண்பாட்டுக் கட்டுரைகள்
  • தையலைப் போற்றுதும் (உயிர் எழுத்து)
  • துயில் கலைதல் (படைப்பு)
  • இடர் ஆழி நீங்குக (வேரல்)

உசாத்துணை


✅Finalised Page