under review

கரசூர் பத்மபாரதி

From Tamil Wiki
Revision as of 15:35, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)
கரசூர் பத்மபாரதி
கரசூர்

To read the article in English: Karasur Padmabharathi. ‎

நரிக்குறவர் இனவரைவியல்
கரசூர் பத்மபாரதி
கரசூர் பத்மபாரதி

கரசூர் பத்மபாரதி (பிறப்பு: ஜூலை 15, 1975) மானுடவியல், நாட்டாரியல் ஆய்வாளர். நரிக்குறவர்களை பற்றியும் திருநங்கைகளைப் பற்றியும் விரிவான கள ஆய்வு செய்து நூல்களை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

கரசூர் பத்மபாரதியின் இயற்பெயர் சி. பத்மாவதி. பாண்டிச்சேரி வில்லியனூர் அருகே கரசூரில் ஜூலை 15, 1975-ல் குப்புசாமி - ராஜேஸ்வரி இணையருக்குப் பிறந்தார். விலியனூர் கண்ணகி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார்.

கரசூர் பத்மபாரதியின் கல்வித்தகுதிகள் மிக விரிவானவை. புதுவை பல்கலைக்கழகத்தில் இளநிலை (BA) பட்டம் பெற்றபின் 1999-ல் புதுவை பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த இலக்கியம் கல்வியியலில் முதுகலை (MA) பட்டம் பெற்றார். 2000-த்தில் புதுவை பல்கலையில் இளமுனைவர் (M.Phil) பட்டம் பெற்றார். இமாக்குலேட் கல்வியியல் கல்லூரியில் கல்வியியலில் 2004-ல் இளங்கலை (B.Ed) பட்டம் பெற்றபின் 2006-ல் அண்ணாமலைப் பல்கலையில் முதுநிலை கல்வியியல் (M.Ed) பட்டம் பெற்றார். அதன்பின் 2008-ல் அழகப்பா பல்கலையில் கல்வியியலில் இளமுனைவர் பட்டமும் 2011-ல் தஞ்சை தமிழ்ப் பல்கலையில் கல்வியியலில் முனைவர் (PhD) பட்டமும் பெற்றார்.

கரசூர் பத்மபாரதி 2005-ல் புதுச்சேரி மொழியியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் மானுடவியல் மற்றும் மொழியியலில் சான்றிதழ் படிப்பையும், 2006-ல் பட்டயப்படிப்பையும் முடித்தார். கணிப்பொறி கல்வியில் PGDCA படிப்பையும் முடித்தார்.

கல்வித்துறை ஆய்வேடுகள்

கரசூர் பத்மபாரதி முதுகலைப் படிப்புக்காக 'நரிக்குறவர் சடங்குகள் ஓர் ஆய்வு’ என்னும் ஆய்வேட்டை முடித்தார். இளமுனைவர் படிப்புக்காக சிறுபத்திரிகை வரலாற்றில் கசடதபற இதழின் பங்களிப்பு என்னும் ஆய்வேட்டை எழுதினார். முதுகலை கல்வியியலில் அரசின் பன்னிரண்டாவது வகுப்பு பாடநூல்களை ஆராய்ச்சி செய்து ஆய்வேட்டை எழுதினார். இளமுனைவர் கல்வியியலுக்காக கல்வியியல் மாணவர்களின் உணர்வுமுதிர்ச்சி மற்றும் பயிற்றுத்திறன் ( A Study of Emotional Maturity and Teaching Competency of BEd students) என்னும் தலைப்பில் ஆய்வேட்டை எழுதினார்.

முனைவர் பட்டத்துக்காக 'அடித்தளச் சாதியினரின் மரபுவழி இனப்பெருக்க மருத்துவம்’ என்னும் ஆய்வேட்டை நிறைவுசெய்தார். மானுடவியல் பட்டயப்படிப்புக்காக 'கூத்தாண்டவர் திருவிழா, இனவரைவியல் நோக்கு’ என்னும் தலைப்பில் ஆய்வேட்டை உருவாக்கினார்.

ஆசிரியப் பணிகள்

கரசூர் பத்மபாரதி 2006 முதல் 2012 வரை லோயோலா கல்வியியல் கல்லூரியில் தொகுப்பூதிய விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன்பின் தனியார் நிறுவனமாகிய ஆதித்யா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 2013 முதல் 2015 வரை தமிழாசிரியையாக பணியாற்றினார். 2015-க்குப் பின் பணிகளில் இல்லை.

தனிவாழ்க்கை

கரசூர் பத்மபாரதி மணமானவர்.

திருநங்கையர்

விருதுகள்

  • 2004-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருது (நரிக்குறவர் இனவரைவியல்)
  • 2013-ஆம் ஆண்டுக்கான எழுத்தாளர் சு.சமுத்திரம் விருது (முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
  • 2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி- தூரன் விருது[1]

நரிக்குறவர்கள் ஆய்வு

கரசூர் பத்மபாரதியின் நரிக்குறவர் இனவரைவியல் என்னும் நூல் 2004-ல் தமிழினி பதிப்பக வெளியீடாக வந்தது. மானுடவியல் முறைமைப்படி ஆய்வு செய்யப்பட்ட இனவரைவியல் நூல். 1999-ல் கரசூர் பத்மபாரதி முனைவர் பட்ட ஆய்வுக்காக நரிக்குறவர்களின் சடங்குகள் என்னும் தலைப்பில் செய்த ஆய்வேட்டின் விரிவாக்கமாக எழுதப்பட்டது. முனைவர் பக்தவத்சல பாரதி இதற்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். நரிக்குறவர்களுடன் தங்கி விரிவான கள ஆய்வுக்குப்பின் எழுதப்பட்ட நூல் இது.

திருநங்கையர் ஆய்வு

கரசூர் பத்மபாரதி திருநங்கையர் பற்றி கள ஆய்வு செய்து திருநங்கையர் சமூக வரைவியல் என்னும் நூலை எழுதினார். தமிழினி வெளியீடாக இந்நூல் 2013-ல் வெளிவந்தது. திருநங்கையர் என்னும் தனிச்சமூகத்தில் உருவாகி வந்துள்ள சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்க்கைக்கூறுகளை விரிவாகப் பதிவு செய்யும் நூல் இது. 2005-ஆம் ஆண்டு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மானுடவியல் பட்டயப்படிப்புக்காக 'கூத்தாண்டவர் திருவிழா - இனவரைவியல் நோக்கு’ என்னும் தலைப்பில் எழுதிய ஆய்வேட்டின் விரிவாக்கம்.

பார்க்க: கூத்தாண்டவர் திருவிழா

அறிவியக்க இடம்

தமிழில் ஓர் களஆய்வு எவ்வண்ணம் நிகழ்த்தப்படவேண்டும், ஓர் ஆய்வேடு எவ்வண்ணம் எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணமான நூல்களாக கரசூர் பத்மபாரதியின் இரு ஆய்வுநூல்களும் குறிப்பிடப்படுகின்றன. மிகமிகக் குறைவான நிதியாதாரத்துடன் செய்யப்பட்ட ஆய்வுகள் அவை. முற்றிலும் மூடுண்ட சமூகங்களான நரிக்குறவர்கள், திருநங்கையர் ஆகியோரின் உலகங்களுக்குள் நிகழ்ந்த முதன்மையான ஊடுருவல்கள் என்று அவற்றைச் சொல்லலாம். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களுடன் தங்கி, நீண்டநாட்கள் உரையாடி, உருவாக்கப்பட்டவை. அந்தத் தனிச்சமூகங்களின் வெளியே தெரியாத நம்பிக்கைகள், அச்சங்கள், சடங்குகள் ஆகியவற்றுடன் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்கு உருவாக்கிக்கொண்டிருக்கும் தனிமொழியின் சொற்கள் வரை முறையாக ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வுகள் அவை. ’தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர்’ எனும் நிலையில் முதன்மையிடம் பெறத்தக்கவர்களில் ஒருவராகவும், மிகச்சிறந்த கல்வித்தகுதிகள் கொண்டவராகவும் இருந்தபோதிலும் கூட கரசூர் பத்மபாரதி தமிழக உயர்கல்வித்துறைக்குள் இடம்பெறாது போனது தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்திற்குப் பேரிழப்பு" என்று அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதைகள்
  • இளமை நதியில் முதுமை ஓடங்கள்
  • சிறகிருந்தும்
  • சிசு
ஆய்வுகள்
  • நரிக்குறவர் இனவரைவியல் (தமிழினி, 2004, 2020)
  • திருநங்கையர் சமூக வரைவியல் (தமிழினி, 2013, 2021)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page