under review

ஏ.கே. வேலன்

From Tamil Wiki
ஏ.கே. வேலன்

ஏ.கே. வேலன் (ஏ. குழந்தைவேலன்; அ. குழந்தைவேலன்; அருணாசலம் குழந்தைவேலன்) (அக்டோபர் 24, 1921 - நவம்பர் 7, 2006) எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர். நாடக ஆசிரியர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், கதை-வசன ஆசிரியர், இயக்குநர். சென்னையில் அருணாசலம் ஸ்டூடியோவை நிறுவினார். திராவிட இயக்கம் சார்ந்த அரசியல்வாதி. பிற்காலத்தில் ஆன்மிகவாதியாகப் பரிணமித்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது.

ஏ.கே. வேலன் - இளமைக் காலத்துப் படம்

பிறப்பு, கல்வி

அ. குழந்தைவேலன் என்னும் ஏ.கே. வேலன், அக்டோபர் 24, 1921 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில், அருணாசலம் பிள்ளை - ராமாமிர்தம் அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். தொடக்கக் கல்வியை பாபநாசத்தில் உள்ள பள்ளியில் படித்தார். உயர்நிலைக் கல்வியை கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். தஞ்சாவூர் சிவகங்கைப் பூங்காவிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். கரந்தைப் புலவர் கல்லூரியில் மாலை நேரக் கல்வியில் புலவர் பட்ட வகுப்புப் பயின்றார்.

தனி வாழ்க்கை

ஏ.கே. வேலன், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள பெத்தாச்சி புகழ் நிலையத்தில் மதிப்பியல் காப்பாளராகப் பணியாற்றினார். கரந்தைத் தமிழ்ச் சங்த்தின் இராதாகிருட்டினத் தொடக்க பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தஞ்சாவூரில் உள்ள வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மனைவி: செயலக்குமி. மகள்கள்: செந்தமிழ் செல்வி , வண்டார்குழலி, செந்தாமரை, அருணா, பவானி, மீனாட்சி. மகன்கள்: விஞ்ஞானி, சிவஞானி, கலைஞானி.

கலைமாமணி விருது

இலக்கிய வாழ்க்கை

ஏ.கே. வேலன், தனது தாத்தாவும் தமிழறிஞருமான சிவசாமிச் சேர்வை மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு மு. வேங்கடாசலம் பிள்ளை, வித்துவான் மு. சடகோப ராமானுஜன், நீ. கந்தசாமிப் பிள்ளை போன்றோரிடம் தமிழ் பயின்று தனது தமிழறிவை வளர்த்துக் கொண்டார். தமிழறிஞர்கள் நாவலர் சோமசுந்தரபாரதியார், பண்டிதமணி மு. கதிரேச செட்டியார், ரா.பி. சேதுப்பிள்ளை, வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், சுவாமி விபுலானந்தர் போன்றோரின் அன்பைப் பெற்றார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் மூலம் வெளி வந்த 'தமிழ்ப் பொழில்' திங்கள் இதழில் 'உழவன்' என்ற புனைபெயரிலும், 'அ .குழந்தைவேலன்' என்ற பெயரிலும் பல கட்டுரைகளை, கவிதைகளை எழுதினார். தொடர்ந்து பல நூல்களை எழுதினார்.

நாடகம்

ஏ.கே. வேலன், ‘சூறாவளி' என்னும் நாடகத்தை எழுதினார். அந்நாடகம் கும்பகோணத்தில் தேவி நாடக சபையினரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதில் உள்ள கருத்துக்களும், வசனங்களும் புரட்சியைத் தூண்டுவதாகக் கருதிய அரசு, அந்நாடகத்தை நடத்த எதிர்ப்புத் தெரிவித்தது. வேலன் பணி புரிந்த பள்ளிக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக வந்த மிரட்டலால், ஏ.கே. வேலன் தனது பணியிலிருந்து விலகினார். தொடர்ந்து ‘இராவணன்’ என்ற நாடகத்தை எழுதினார். அது எதிர்ப்பைச் சந்தித்தது. ‘காவிரிக் கரையினிலே’, ‘மீனாட்சி நாடகத் தமிழ்’, ‘கங்கைக்கு அப்பால்’ எனப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.

ஏ.கே. வேலன், 1948-ல் சென்னைக்கு வந்தார். ‘சிலம்பு’ என்ற நாடகத்தை எழுதி மேடையேற்றினார். கே. ஆர். ராமசாமி அதில் நாயகனாக நடித்தார். தொடர்ந்து ‘கைதி’ என்ற நாடகத்தை எழுதி அரங்காற்றுகை செய்தார். எஸ்.எஸ். ராஜேந்திரன் அதில் நாயகனாக நடித்தார். எம்.ஜி. ராமச்சந்திரனுக்காக, ‘பகைவனின் காதலி' என்ற நாடகத்தை எழுதினார்.

காமராஜருடன் ஏ.கே. வேலன்.

அரசியல்

ஏ.கே. வேலன், ஈ.வெ.ரா. பெரியாரின் அழைப்பை ஏற்று தான் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார். திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். திராவிடக் கழக கொள்கையைப் பரப்பும் வகையில் பல ஊர்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார். பல கூட்டங்களைப் பொறுப்பேற்று நடத்தினார். அண்ணா, திராவிடர் கழகத்தில் இருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது ஏ.கே. வேலன் அதில் இணைந்தார். ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிற்குத் தலைமை தாங்கி நடத்தினார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1962-ல் நிகழ்ந்த விலைவாசி உயர்வுப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். மு. கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம் ஆகியோருடன் சிறைவாசம் அனுபவித்தார். எம்.ஜி. ராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது, எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று, ஏ.கே. வேலன் அதன் உறுப்பினரானார். பின் அரசியலிருந்து ஒதுங்கி வாழ்ந்தார்.

இதழியல்

ஏ.கே. வேலன், திராவிடக் கழக கொள்கையைப் பரப்பும் வகையில் 'எரிமலை' எனும் இதழை நடத்தினார். அவ்விதழ் தீவிரவாத ஏடாக அப்போதைய அரசால் கருதப்பட்டது. இதழுக்கு ஜாமீன் தொகை கட்டுமாறு வேலன் நிர்ப்பந்திக்கப்பட்டார். அத்தொகையைக் கட்ட இயலாத காரணத்தால், அதனை ‘ஞாயிறு’ எனும் இலக்கிய ஏடாக மாற்றி நடத்தினார். அதற்காக ‘ஞாயிறு அச்சகம்’ என்பதனை நிறுவி அதன் மூலம் இதழை வெளியிட்டார். டி.கே. சீனிவாசன் ’தாமரை செல்வன்’ என்ற புனை பெயரில் அவ்விதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். ஆர். எம். வீரப்பன் அவ்விதழின் பொறுப்பாளராகப் பணிபுரிந்தார். ஏ.கே. வேலன், தென்னக ரயில்வே யூனியன் சார்பில் வெளிவந்த ‘தொழிலாளி' என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பதிப்பு

ஏ.கே. வேலன், 1982-ல், தனது அருணாசலம் ஸ்டூடியோவில், ஏ.கே. வேலன் அண்டு சன்ஸ் என்ற அச்சகத்தை நிறுவி அதன் மூலம் சில நூல்களை வெளியிட்டார்.

திரைப்படம்

ஏ.கே. வேலன், ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகளை எழுதும் வாய்ப்பைப் பெற்றார். பல பட நிறுவனங்களின் கதை இலாகாவில், கதை, வசனம் எழுதுபவராகப் பணியாற்றினார். 'சுகம் எங்கே?', 'வணங்காமுடி', 'லவகுசா', 'அரிச்சந்திரா', 'கண்ணன் கருணை', 'நீதிபதி', 'நல்லதங்காள்', 'சதாரம்' போன்ற படங்களுக்குக் கதை, வசனம் எழுதினார். வேலன் எழுதிய ‘இருளும் ஒளியும்’ என்ற நாடகம் 1954-ல், கே.ராம்நாத் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற பெயரில் வெளி வந்தது. 1955-ல் வெளிவந்த டாக்டர் சாவித்திரி படத்திற்கு வேலன் கதை எழுதினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த 'குறத்தி மகன்' படத்தின் கதை, ஏ.கே. வேலனுடையதே.

ஏ.கே. வேலன், கே. பாலசந்தரை, தான் இயக்கிய ‘நீர்க்குமிழி’ படத்தின் மூலம் இயக்குநர் ஆக அறிமுகப்படுத்தினார். வி.குமாரை அப்படத்தின் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். எம்.ஜி.ஆர். நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின் கதை. மற்றொரு கதையான ‘பவானி’, ‘அரசக்கட்டளை’ என்ற தலைப்பில் வெளிவந்தது.

ஏ.கே. வேலன் கதை, வசனம், எழுதி, இயக்கித் தயாரித்த முதல் படம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. அப்படத்தின் மூலம் பெரும் செல்வம் ஈட்டிய வேலன், ‘அருணாசலம் ஸ்டூடியோஸ்’ என்ற படப்பிடிப்பு அரங்கத்தைச் சென்னையில் நிறுவினார். ‘அருணாசலம் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார். தொடர்ந்து கதை, வசனம் எழுதி, இயக்கி, கீழ்காணும் படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

  • வழி பிறந்தது
  • பொன்னி திருநாள்
  • பெரிய கோயில்
  • கைதியின் காதலி
  • காவேரியின் கணவன்
  • மங்கள சூத்திரம் (தெலுங்கு)
  • கண் திறந்த நூடு (கன்னடம்)
  • தேவி
  • நீர்க்குமிழி
  • நீர்க்குமிழி (தெலுங்கு)
  • உறங்காத கண்கள்

அமைப்புப் பணிகள்

ஏ.கே. வேலன், சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சிச் சங்கத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

ஏ.கே. வேலன், தனது தந்தையின் நினைவாக, ‘அருணாசல நிலையம்’ என்னும் கட்டிடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கட்டி அளித்தார்.

சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயில் பரமாரிப்புப் பணிகளை மேற்கொண்டார்.

தனது தந்தையின் நினைவாக, தான் வசித்த சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு சாலைக்கு, ‘அருணாசலம் சாலை’ என்ற பெயர் சூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வென்றார்.

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • சிறந்த தயாரிப்பாளர் விருது
  • சிறந்த கதை, வசன ஆசிரியர் விருது

மறைவு

ஏ.கே. வேலன், நவம்பர் 7, 2006 அன்று, தனது 85 -ஆம் வயதில் காலமானார்.

நாட்டுடைமை

ஏ.கே. வேலனின் நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

ஏ.கே. வேலனின் வாழ்வும் பணிகளும்

ஆவணம்

ஏ.கே. வேலனின் நூல்களில் சில தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் மின்னூலாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. ‘கலைமாமணி ஏ .கே.வேலனின் வாழ்வும் பணிகளும்' என்ற தலைப்பில், ஏ.கே. வேலனின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டு, கரந்தை தமிழச்சங்கத்தாரால் நூலாக வெளியிடப்பட்டது. ‘ஏ.கே.வேலன் நாடகங்கள்- ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் அ. நடராசன் ஆய்வியல் நிறைஞர் பட்டத்துக்கான ஆய்வு செய்துள்ளார்.

மதிப்பீடு

ஏ.கே. வேலன் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், அரசியல்வாதி எனப் பல களங்களில் இயங்கினார். பிற்காலத்தில் திராவிடக் கொள்கைகளிலிருந்து விலகி ஆன்மிக வாழ்க்கையை ஏற்றார். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திரரின் பக்தரானார். பல ஆன்மிக நூல்களை, கவிதை, கட்டுரை நூல்களை எழுதினார். தமிழ்த் திரையுலகின் வெற்றிப் படக் கதாசிரியராகவும், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தளித்தவராகவும் ஏ.கே. வேலன் இன்றும் நினைவுகூரப்படுகிறார்.

நூல்கள்

கவிதை மற்றும் கவிதை நாடக நூல்கள்
  • சிலம்பு
  • சாம்பாஜி
  • சரிந்த கோட்டை
  • இராவணன்
  • கைதி
  • கங்கைக்கு அப்பால்
  • இறைவன் சிரிக்கின்றான்
  • அனுமார் அனுபூதி
  • கண்ணன் கருணை
  • காவியக் கம்பன்
  • மேரியின் திருமகன்
  • வரலாற்றுக் காப்பியம்
  • ஏ.கே. வேலனின் எழுத்துக்கள்
நாடகங்கள்
  • ஏ.கே. வேலனின் நாடகங்கள்
  • சூறாவளி
  • கைதி
  • கும்பகர்ணன்
  • சிலம்பு
  • மேகலை
  • மாவீரன்
  • கம்சன்
  • பகைவனின் காதலி
  • எரிமலை

உசாத்துணை


✅Finalised Page