எம்.கே.குமார்

From Tamil Wiki
Revision as of 13:46, 18 May 2022 by Shana (talk | contribs) (Page created and content filling is on progress)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எம்.கே.குமார்  

எம்.கே.குமார் (1977) சிங்கப்பூர் எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் ஆகிய தளங்களில் எழுதி வருகிறார். குறும்படத்திலும் ஆர்வம் உள்ளவர்.  

பிறப்பு, கல்வி

எம்.கே.குமார் 16 செப்டம்பர் 1977 (ஆவணி 31) அன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகில் தீயத்தூரில் ம.காளிமுத்து – கா.அஞ்சம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பாதிரக்குடி ரோமன் கத்தோலிக்க நடுநிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி மற்றும் நடுநிலைக்கல்வியைக் கற்றார். திருப்புனவாசல் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் படித்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் மூன்று மதிப்பெண்களில் பரிசு பெற்றவர். சென்னை தரமணியிலுள்ள வேதியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயப்படிப்பை முடித்தார். 2010இல் ஆஸ்திரேலியாவின் நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற சூழலியலில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பட்டயப்படிப்பிற்குப் பின், தூத்துக்குடி அல்கலைன் கெமிக்கல் (TAC) நிறுவனத்தில் ஆறாண்டுகள் பணியாற்றினார்.  2001  ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். தற்போது சிங்கப்பூரில் பாதுகாப்பு, உடல்நலம், சுற்றுப்புற துறையில் மேலாளராகப் பணி புரிந்து வருகிறார்.  பாதுகாப்புத்துறையில் பயிற்றுவிப்பாளராகவும், ஆடிட்டராகவும் இருந்துவருகிறார்.  சொந்த நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

ஆதித்யா, புவிமகாதேவி, தனவந்திகா என மூன்று பிள்ளைகள்.

இலக்கிய வாழ்க்கை

பள்ளிக்காலத்தில் பேச்சு, கட்டுரை மற்றும் நாடகப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றதனாலும் பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள் மூலமும் தமிழின்மீது பிடிப்பு ஏற்பட்டது.

உயர்நிலைப்பள்ளி படிக்கும்போது கையெழுத்துப்பத்திரிகை நடத்தியுள்ளார். மேலும் தூத்துக்குடியில் பணியாற்றியபோது நிறுவனத்தின் நூலகத்தின் மூலம் நிறைய வாசிக்க முடிந்ததும் எழுதத் தூண்டுகோலாய் அமைந்தன. ஆரம்ப நாட்களில், தினமலர் உள்ளிட்ட பத்திரிகைகளில் எம்.கே.காந்திகுமார் என்ற பெயரில் வாசகர் கடிதங்கள் எழுதியுள்ளார்.

முதல் சிறுகதை ”நேவா” 2003 ஆம் ஆண்டு “திண்ணை” இணைய இதழில் வெளியானது. காலச்சுவடு, வார்த்தை, தி சிராங்கூன் டைம்ஸ், நாம் போன்ற அச்சிதழ்களிலும் வல்லினம் போன்ற இணைய இதழ்களிலும் எம்.கே.குமாரின் படைப்புகள் அவர் பெயரிலும் வெண்ணிலாப்ரியன் என்ற புனைப்பெயரிலும்  வெளியாகி உள்ளன. தமிழோவியம் மின்னிதழில் ‘மாஜுலா சிங்கப்பூரா’ என்ற சிங்கப்பூர் வரலாறு குறித்த தொடரை எழுதியுள்ளார்.

‘பசுமரத்தாணி’ முதல் குறும்படம் ஆகும்.

இவரது சிறுகதையான "அலுமினியப்பறவைகள்" திரு.உதயகண்ணன் தொகுத்த "உலகத் தமிழ்ச்சிறுகதைகள் - 25" தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சாகித்ய அகாடெமிக்கென திரு மாலன் தொகுத்த உலகச்சிறுகதைகளில் இவரது கதை சிங்கப்பூரைப் பிரதிபலித்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அவர்களை ஒரு விரிவான  நேர்காணல் செய்துள்ளார்.

எழுத்து பொழுதுபோக்கும் இல்லை. அதற்குக்  கனமான ஒரு நோக்கமும் இல்லை என்று சொல்லும் எம்.கே.குமார் எழுத்தைத் தன் ‘அகத்துடனான கலவி’ என்று குறிப்பிடுகிறார்.    

சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்யும் நவீன இலக்கியச் செயல்பாடுகளை வழிநடத்தியும் பங்கெடுத்தும் வருகிறார். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராக இருக்கிறார்.

இலக்கிய இடம், மதிப்பீடு

நாஞ்சில் நாடன் ’மருதம்’ நூலுக்கு எழுதிய முன்னுரையில்,  சிறுகதை வடிவம் கூடிவருகிறது. செய்நேர்த்தி தெரிகிறது. சமூக அக்கறை புலப்படுகிறது, மொழி கைவசம் இருக்கிறது. விதேச வாழ்க்கையைச் சொல்வதில் அ.முத்துலிங்கம் நல்ல முன்னோடி அவரின் திசையில் குமார் ஊக்கமுடன் பயணம் செய்யலாம் என்கிறார்.

சு.வேணுகோபால் “பிறந்த கிராமம் உருவாக்கிய உலக நெருக்கம், பெருநகரின் அசைவுகளை ஒருவித துல்லியத்தன்மையுடன் கிரகித்துக்கொள்ளும் மனம் ஆகியவற்றால் எம்.கே.குமார் எழுதும் கதைகள் தனித்துவமும் புதிய திறப்புகளையும் கொண்டவையாக இருக்கின்றன. ஒருவகையில் சிங்கப்பூர் நவீன இலக்கிய உலகிற்குச் சிறப்பான ஒரு பங்களிப்பைச் செய்கின்றன” என்று குறிப்பிடுகிறார்.  

ம.நவீன் “சிங்கப்பூர் எனும் பெரு நகரத்தில் எங்கோ ஒளிந்திருக்கும் சற்று வித்தியாசமான மனிதர்களையும் அவர்களுடைய சிக்கல்களையும் அணுகுகின்றன” என்று எம்.கே.குமாரின் கதைகளைப் பற்றி குறிப்பிடுகிறார்.  

கே.பாலமுருகன் “நிலம், பெருநகர் சிதைவுகள், சுய அழிப்பு ஆகியவற்றை மையமாக கொண்டுள்ள எம்.கே.குமாரின் கவிதைகள் திட்டமிடல்களைக் கடந்து இரைச்சல்களுக்குள்ளிருந்து சமூக அக்கறையுடன் ஒலிக்கின்றன” என்று குறிப்பிடுகிறார்.  

விருதுகள்

யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்திய க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டியின் வெற்றியாளர், 2020  

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (தகுதிச்சுற்று), 2020 – ஓந்தி சிறுகதை தொகுப்பிற்கு

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (மெரிட்), 2018 – 5:12 P.M. சிறுகதை தொகுப்பிற்கு

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கண்ணதாசன் விருது2017  

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத்தமிழ் இலக்கிய விருது, 2017      

காலச்சுவடு இதழ் நடத்திய ‘சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி’ முதல் பரிசு, 2008    

சிங்கப்பூர்ப் பாதுகாப்பு மன்றம் (Workplace Safety & Health Council) நடத்திய சிறுகதைப் போட்டி, முதல் பரிசு  

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசுகள்

நூல்கள்

மருதம் (2006, சிறுகதைத் தொகுப்பு)

சூரியன் ஒளிந்தணையும் பெண் (2013, கவிதைத் தொகுப்பு)

நதிமிசை நகரும் கூழாங்கற்கள் (2015, சிங்கப்பூர்ப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு, தொகுப்பாசிரியர்)

5:12 P.M. (2017, சிறுகதைத் தொகுப்பு)

ஓந்தி (2019, சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை

நெஞ்சின் அலைகள் (yemkaykumar.blogspot.com)

இணைப்புகள்

தமிழ்ச் சிறுகதையின் புதிய முகங்கள்! – எஸ். ராமகிருஷ்ணன் (sramakrishnan.com)

எம்.கே குமார் சிறுகதைகள் – வல்லினம் (vallinam.com.my)

ஓந்தி : புதிரான நனவிலியும் ஃபூகு மீனின் நஞ்சும் – வல்லினம் (vallinam.com.my)

ஓர் எழுத்தாளர் பேசுகிறார் -01 - எம்.கே.குமார் - YouTube

https://old.thinnai.com/?p=60705176

https://serangoontimes.com/author/mkkumar/

https://serangoontimes.com/2021/12/06/rama-kannapiran-interview/