எம்.எஸ். மணியம்
எம்.எஸ். மணியம் (செப்டெம்பர் 2, 1939) மலேசிய மேடை நாடக இயக்குனர். 'மலேசிய தமிழர் கலைமன்றம்' வழியாக மலேசிய மேடை நாடகக் கலை தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க பங்காற்றியவர்.
பிறப்பு, கல்வி
எம்.எஸ். மணியம், செப்டம்பர் 2, 1939 அன்று சுங்கை சிப்புட்டில் பிறந்தார். அப்பாவின் பெயர் முருகேசு. அம்மாவின் பெயர் பழனியம்மாள். இருவரும் சுங்கை சிப்புட் தோட்டத்தில் பால்வெட்டுத் தொழிலாளிகள். குடும்பத்தில் மூத்த மகனான இவரது இயற்பெயர் சுப்ரமணியம். இவருக்கு ஏழு சகோதரர்கள் இரு சகோதரிகள். மலாயாவில் ஜப்பானியர் ஆட்சி தொடங்கியபோது பெற்றோருக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டதால் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்ய குடும்பத்துடன் பத்து ஆராங்கிற்குப் புலம்பெயர்ந்தார்கள்.
எம். எஸ். மணியம் 1945-ல் ஆரம்பக்கல்வியைத் தொடங்கினார். 1952-ல் ஆறாம் வகுப்பு முடித்து ரவாங் நகருக்கு ஏழாம் வகுப்புக்குச் சென்றார். வறுமையான சூழல் காரணமாக கல்வியைத் தொடராமல் கைவிட்டார். நிலக்கரி சுரங்கத்தை நிர்வகித்து வந்த ‘மலேயன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிட்டட்’ நிறுவனத்தின் அலுவலகத்தில் அலுவலகப் பையனாக 1952 - 1959 வரை வேலை செய்தார். இரவு நேரத்தில் பத்து அராங் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜெகந்நாதனிடம் ஆங்கிலம் கற்றார்.
தனிவாழ்க்கை
1959-ல் எம். எஸ். மணியம் வேலை செய்த நிலக்கரி நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தபோது அவரும் வேலையில் இருந்து விலக்கப்பட்டார். எனவே 1959-ல் வேலை தேடி கோலாலம்பூர் புறப்பட்டார். 1963 - 1967 ஆண்டுகளில் அரச மலேசிய விமானப் படைத்தளத்தில் வேலை செய்தார். பின்னர் 1968 - 1969 ஆண்டுகளில் பத்து கேவ்ஸ் அருகே உள்ள கென்னிசன் பிரதர்ஸ் கல்லுடைப்பு நிறுவனத்தில் வேலை செய்தார். 1969-ல் மீண்டும் வேலை இழந்தார். பல நிறுவனங்களில் பாதுகாவலர் பணி செய்தார். பின்னர் 1978-ல் நகராண்மைக் கழகத்தில் அரசு வேலை கிடைத்தது. 2000 வரை அப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
மணியம் பிப்ரவரி 9, 1963-ல் எம். எஸ். மணியம் திருமணம் செய்துகொண்டார். இவர் மனைவியின் பெயர் தனலெட்சுமி. இவருக்கு ஐந்து குழந்தைகள்.
நாடகவாழ்க்கை
பத்துமலை
எம். எஸ். மணியம் பள்ளியில் படிக்கும்போது பன்னிரெண்டு வயதில் ஆசிரியர் செபாஸ்டியன் ஊக்குவிப்பால் 'சகுந்தலை' எனும் நாடகத்தில் துஷ்யந்தனாக நடித்தார். ஆங்கில டியூசன் பயின்றபோது ஆசிரியர் ஜெகந்நாதன் அவருக்கு ஷேக்ஸ்பியர் நாடகங்களை அறிமுகப்படுத்தினார். ஷேக்ஸ்பியரின் 'ஹெம்லெட்' நாடகம் அவரைக் கவரவே அதை தமிழில் நடிக்க ஆர்வம் கொண்டார். ஆசிரியர் ஜெகந்நாதன் வழிகாட்டலில் 'ஹெம்லெட்டை' சிறிய அளவில் நாடகமாகத் தயாரித்து நடித்தனர். ஆசிரியர் ஜெகந்நாதன் அவர்களிடம் நடன, நடிப்பு பயிற்சி பெற்றார் எம். எஸ். மணியம்.
1955-ல் ஆசிரியர் ஆறுமுகம், குழந்தைவேலு, நடராஜன் போன்றவர்களுடன் இணைந்து 'பத்து ஆராங் இளைஞர்கள்' எனும் குழுவை உருவாக்கினார். 'ஹெம்லெட்' நாடகத்தை 'தந்தையின் குரல்' எனப் பெயர் மாற்றி தோட்டத்தில் நாடகம் போட்டார். அது வெள்ளையர்கள் ஆட்சி காலம் என்பதால் ஆங்கிலேய தலைமை நிர்வாகியின் ஆதரவு கிடைத்தது. எம்.எஸ்.மணியம் அதில் தூதர் கதாபாத்திரத்தில் மிகச்சிறிய வேடமேற்று நடித்தார். இக்குழு அக்காலக்கட்டத்தில் பிரபலமானது.
தொடர்ந்து 'பத்து ஆராங் இளைஞர்கள் குழு' வழியாக பல தோட்டங்களுக்குச் சென்று நாடகங்களை அரங்கேற்றினார். தமிழர் திருநாள், பாரதியர் விழா, பாரதிதாசன் விழா போன்ற கொண்டாட்டங்கள் அதற்கு வாய்ப்பை வழங்கின.
கொலாலம்பூர்
1959-ல் வேலை தேடி கோலாலம்பூர் சென்ற எம். எஸ். மணியத்திற்கு ஹார்மோனிய வித்வான் எஸ் சுந்தர்ராஜ் அறிமுகம் கிடைத்தது. அங்குதான் முதன்மையான மேடை நாடகக் கலைஞர்களாக இருந்த பரஞ்சோதி, அன்பானந்தன், ஆழி அருள்தாஸ் ஆகியோரின் நட்பு கிடைத்தது. அவர்கள் வழி வேடம் கிடைத்து மீண்டும் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 'மலாய் மாநில கூட்டரசு தமிழர் கலைமன்றத்தில்' உறுப்பினராக இணைந்தார். இடையில் வேறு நாடகக் குழுவிற்கு பயிற்சி வழங்கினார் என்று கலை மன்றத்தின் தலைவர் ஆழி அருள்தாசன் அவர்களால் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். உறுப்பியம் இழந்தாலும் 'தந்தையின் குரல்' எனும் நாடகத்தை வேறு குழுவுக்கு இயக்கிக்கொடுத்தார். அதில் முன்னாள் ம இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ சாமிவேலு, இயக்குனர் விஜயசிங்கம், தங்கராஜ், சொக்கநாதன் போன்றவர்கள் நடித்தனர். அந்நாடகம் எம். எஸ். மணியத்திற்கு அழுத்தமான அடையாளத்தைக் கொடுத்தது.
1966-ல் 'கோலாலம்பூர் வளரும் கலைமன்றம்' எனும் பெயரில் டத்தோ ஶ்ரீ சாமிவேலு, துணைத் தலைவர் டத்தோ கோவிந்தராஜு போன்றவர்கள் இணைந்து உருவாக்கினர். அதில் சில காலம் உதவி இயக்குனராகச் செயல்பட்டார். தலைவர் மற்றும் துணைத்தலைவரின் அரசியல் ஆர்வத்தால் அந்த மன்றம் செயலிழந்து போனது.
தொலைக்காட்சி
எம். எஸ். மணியத்திற்கு தொலைகாட்சி நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரிச்சர்ட் ஜாப் மற்றும் திரு தோமஸ் மேத்தியூஸ் இயக்கிய தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார்.
எம்.எஸ். மணியத்தின் திறமை பலராலும் பாராட்டப்பட்டதால் 'மலேசிய தமிழர் கலைமன்றம்' என பெயர் மாற்றம் கண்ட 'மலாய் மாநில கூட்டரசு தமிழர் கலைமன்றத்தில்' 1980-ல் மீண்டும் வரவேற்கப்பட்டார். விரைவிலேயே மலேசிய தமிழர் கலைமன்றத்தின் துணைத் தலைவர் ஆனார். 2011-ல் அம்மன்றத்தின் தலைவர் ஆனார்.
எம்.எஸ். மணியம் இடைவிடாது நாடகத்தில் ஆர்வம் கொண்டு முப்பது மேடை நாடகங்கள் வரை இயக்கினார்.
அமைப்புப் பணிகள்.
1971 முதல் 1980 வரை கம்போங் துங்கு ம.இ.கா கிளையில் துணைச் செயலாளராக பங்காற்றியுள்ளார்.
விருதுகள்
- சிலாங்கூர் சுல்தான் பி.ஜே.கே பட்டம் வழங்கினார்.
- 'நடிகமணி’ விருது - கலைஜோதி ஆர்ட்ஸ் (1966)
- ம.இ.காவின் 50-ம் ஆண்டு பொன்விழாவில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அவர்கள் தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.
கலைப்பங்களிப்பு
மலாய பண்பாட்டுச்சூழலில் தமிழிலக்கியம், தமிழ்மரபு சார்ந்த தொடர்ச்சியை வெகுஜனச் சூழலில் நிலைநிறுத்துவதற்கு நாடகங்கள் பெரும்பங்காற்றின. எம்.எஸ்.மணியம் மலேசிய நாடகச்சூழலில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடிகர், நாடக இயக்குநர், நாடக ஒருங்கிணைப்பாளர் என பங்களிப்பாற்றியிருக்கிறார்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:05 IST