ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

From Tamil Wiki
Revision as of 12:20, 19 February 2022 by Subhasrees (talk | contribs) (ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (ஊத்துக்காடு வேங்கடகவி / ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்) (1715 - 1775) 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர். தமிழிலும் வடமொழியிலும் பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும்[1] ஜாவளி, தில்லானா, காவடிச்சிந்து போன்ற பல்வகை இசைவடிவங்களையும் இயற்றியவர் (வாக்கியகாரர்).

பிறப்பு, கல்வி

இவர் மன்னார்குடியில் ராமசந்திர ஐயர்-கமலநயனி(கமலநாராயணி என்றும் குறிப்பிடப்படுகிறது) இணையருக்கு 1715-ல் பங்குனி மாதம் மக நட்சத்திரத்தில் பிறந்தார்[2]. மன்னார்குடிக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ள ஊத்துக்காடு என்னும் ஊரில் வாழ்ந்தார். இவ்வூரில் காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு கோவில் இருக்கிறது. இங்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாகவதமேளா நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்தக் கிருஷ்ணன் மீது பாடல்கள் இயற்றியிருக்கிறார்.

வேங்கடகவி தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றிருந்தார். நீடாமங்கலத்தில் வாழ்ந்து வந்த ராஜா பாகவதர் (நடேச பாகவதர்) என்பவரிடம் முறையாக இசை பயின்றார். தாயின் அறிவுரைப்படி கிருஷ்ணனை குருவாகக் கொண்டு உபாசனையில் ஈடுபட்டிருந்தார்.

தனிவாழ்க்கை

வேங்கட சுப்பையர் திருமணம் செய்துகொள்ளாமல் இறுதி வரை துறவு வாழ்வே வாழ்ந்தார். இவருடைய சகோதரர் காட்டுக்(ஊத்துக்காட்டு) கிருஷ்ணய்யர் இவருடைய பாடல்களை ஒலைச்சுவடிகளில் எழுதி வைத்தார்.

காலம்

பொதுவாக இவரது காலம் 1700-1765 என்றும் கூறப்படுகிறது. வேங்கட கவியின் தமையனார் காட்டுக் கிருஷ்ணய்யர் தஞ்சை பிரதாப சிம்மன் என்ற மன்னரின்(1739-1763) அவைப்புலவராக இருந்தார். எனவே இவரது காலம் 1710-1780 ஆக இருக்கக்கூடும். இது சார்ந்த தகவல்களைக் கொண்டே வேங்கடசுப்பையர் காலம் 1715-1775 ஆக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது[2]. அவ்வகையில் இவர் மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரின் சமகாலத்தவராக இருந்திருப்பார்.

இசைப்பணி

”இது ஒரு திறமாமோ” என்ற இசைப்பாடல் இவர் இயற்றிய முதல் கீர்த்தனை. நவாவரண கீர்த்தனம் என்ற பெயரில் 11 வடமொழி கீர்த்தனங்கள் இயற்றியிருக்கிறார். இவர் இயற்றிய கீர்த்தனைகளில் 289 அட்டவணைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இவற்றுள் 3 தில்லானாக்கள், 106 வடமொழிப் பாடல்கள். 180 தமிழ்ப் பாடல்கள். மத்திம காலத்தில் பல கிருதிகளை இயற்றியிருக்கிறார்.

வேங்கட சுப்பையர் கண்ணனின் மீது பல பாடல்களை(246 பாடல்கள்) இயற்றினார். பிற கடவுளர் மீது இவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை:

  • ஷண்முகர் - 7
  • விநாயகர் - 6
  • சிவன் - 5
  • அம்பிகை - 12
  • ராமன் - 5
  • ராதா - 4
  • அனுமன் - 1
  • சரஸ்வதி - 1

தியாகையர் முதலான மும்மூர்த்திகள் காலகட்டத்துக்குப் பிறகு தெலுங்குக் கீர்த்தனைகளே இசை மேடைகளில் புகழ்பெற்றிருந்த காரணத்தால் இவர் இயற்றிய பாடல்கள் அதிகம் அறியப்படாதிருந்தது. தஞ்சை நாதஸ்வர கலைஞர் ருத்ரபசுபதி என்பவர் இவர் கீர்த்தனைகளைப் பயின்று வாசித்து வந்தார்.

வேங்கடகவியின் சகோதரர் காட்டுக் கிருஷ்ணய்யருடைய மகள் வழியே 6வது தலைமுறையில் வந்த நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர்(கதாகாலட்சேபங்கள் நிகழ்த்துபவர்), வேங்கட சுப்பையரின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளைக் கண்டடைந்து, அவற்றைப் பாடியும், தொகுத்தும், வெளியிட்டும் பணியாற்றினார். காட்டுக் கிருஷ்ணய்யர் பெண் வழியே இன்னொரு கிளை வழியில் தோன்றிய கல்யாணசுந்தரம், இராஜகோபாலன், முத்துக்கிருஷ்ணன் என்ற மூவரும் ஊத்துக்காடு சோதரர் என்ற பெயரில் வேங்கட சுப்பையரின் பாடல்களைப் பிரபலப்படுத்தி வருகிறனர். 70 கீர்த்தனைகள் வரை ஸ்வரப்படுத்தி வெளியிடப்பட்டன.

தற்போது பெரிய இசைக்கலைஞர்கள் முதல் இளங்கலைஞர்கள் வரை அனைவரும் இவரது பாடல்களைப் பயின்று மேடைகளிலும் பாடி வருகின்றனர்.

இவர் இயற்றிய ”அலைபாயுதே கண்ணா”, “தாயே யசோதா உன்றன்”, ”பால்வடியும் முகம்” போன்ற பல கீர்த்தனைகள் புகழ்பெற்றவை.

சில பாடல்கள்

இவரது கவித்திறமைக்கு உதாரணமாக சில இசைப்பாடல்கள்:

ராகம்: ரீதிகௌளை, தாளம் - மிஸ்ரசாபு

பல்லவி:                                                                                                                                           

என்ன புண்ணியம் செய்தேனோ - சத்குருநாதா

எத்தனை தவம் செய்தேனோ நின் அருள் பெறவே

அனுபல்லவி

பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும்

உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது                                                             

தின்னத் தெவிட்டாத தெள்ளமுதே குரு

தேவா--தேவா--தேவா உன்னருள் பெறவே  (என்ன)

சரணம்

வாடிய பயிருக்கு பெய்யும் மழையைப் போலே

படர்முல்லை கொடிக்கொரு கொழு கிடைத்தாற் போல

தேடியும் காணாத த்ரவ்யமே சத்குரு

தேவா தேவா சத்குரு நின் அருள் பெறவே (என்ன)

ராகங்களின் பயன்பாடு

இனிமையான ராகங்கள் எனப்படும் ரக்தி ராகங்களிலேயே(நாதநாமக்கிரியை, ஹிந்தோளம், ஆரபி, பாலஹம்சா போன்றவை) அதிகம் இயற்றியிருக்கிறார். புறநீர்மைப்பண்(நீலாம்பரி) என்று ஒரு பாடலில் பண் குறிப்பிட்டிருகிறார். சங்கீர்ண மட்டிய தாளம் என்னும் அபூர்வ தாளத்தில் பாடல் அமைத்திருக்கிறார். தமிழில் 7 ராகமாலிகைகள் இயற்றியிருக்கிறார். இவற்றுள் மூன்று கீர்த்தனைகள் 3 ராகங்களில் அமைந்தது, நான்கு 4 ராகங்களில் அமைந்தது, 5 கீர்த்தனைகள் ஏழு ராகங்களில் அமைந்தது.

அக்டோபர் 29, 1959 அன்று இவரது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பாடல்களின் பட்டியல்

எண் பாடல் இராகம் தாளம்
1 தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதிர்த்த ஹம்சத்வனி ஆதி
2 புல்லாய் பிறவி செஞ்சுருட்டி
3 காயம்பூ வண்ணனே
4 ராஸவிலாஸ...
5 பிருந்தாவன நிலையே...
6 அலைபாயுதே.. கண்ணா... கானடா ஆதி
7 பால்வடியும் முகம்...
8 பார்வை ஒன்றெ போதுமே...
9 எந்த விதமாகிலும்...
10 ஆடாது அசங்காது வா கண்ணா... மத்யமாவதி ஆதி
11 ஸ்ரீ விக்ன ராஜம் பஜே...
12 ஸ்வாகதம் கிருஷ்ணா...
13 மரகத மணி மாய...
14 நீரத சமனிய...
15 என்ன புண்ணியம் செய்தேனோ ரீதிகௌளை மிஸ்ர சாபு
16 உய்ந்தது வுய்ந்தது என் மனமே தேவமனோஹரி  ஆதி
17 இன்னும் என்ன வேணும் சொல்லடி காம்போஜி ஆதி
18 கண் கண்ட தெய்வமே பேகடா ஆதி
19 தேடிக் கண்டேனே மலயமாருதம் ஆதி
20 சொல்லித் தெரிவதில்லையே ஸ்ரீரஞ்சனி ஆதி

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. கீர்த்தனை - கிருதி, இசைப்பாடல்கள்
  2. 2.0 2.1 தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்