first review completed

உமர் தம்பி

From Tamil Wiki
Revision as of 19:56, 2 June 2023 by Tamizhkalai (talk | contribs)
உமர் தம்பி

உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006) கணினித்தமிழ் அறிஞர். கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்த செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் உருவாக்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

உமர் தம்பி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அ. அப்துல் அமீது, ரொக்கையா இணையருக்கு மகனாக ஜூன் 15, 1953-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியை அதிராம்பட்டிணத்தில் பயின்றார். அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இலத்திரனியலில்(Electronics) டிப்ளோமா பட்டம் பெற்றார். மாணவராக இருந்தபோது காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பினார்.

தனிவாழ்க்கை

உமர் தம்பி பெளஷியாவை 1977-ல் மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள். 1983-ல் அதிராம்பட்டினத்தில் வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்தார். 1984-ல் துபாயில் உள்ள Al Futtaim Group of Companies-ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்து பணியாற்றினார்.

தன்னார்வத்தால் துபாயில் இருக்கும் போது கணினி தொழில்நுட்பங்களை கற்றார். துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network Administrator, SAP Implementation Team Head, Kiosk Programmer எனக் கணினித் துறையில் பணியாற்றினார். 2001இல் விருப்ப ஓய்வுபெற்றார். தஞ்சாவூரில் தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்தார்.

அமைப்புப் பணி

உமர் தம்பி அதிரை பைத்துல்மால் எனும் சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து சேவை செய்தார்.

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

தேனீ இயங்கு எழுத்துரு
  • தமிழில் அதற்கான எழுத்துரு கணினியில் நிறுவப்பட்டிருந்தால் மட்டுமே தமிழ் இணையப்பக்கங்களைக் காண முடியும் என்ற நிலை இருந்தது. மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் (WEFT) என்ற தொழிநுட்பத்தை தமிழில் அறிமுகம் செய்தார். தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை வழங்கினார்.
  • தேனீ எனப்படும் எழுத்துருவை உருவாக்கினார். அதை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) ஆக மாற்றி பல்வேறு இணைய முகவரிகளில், தளங்களில் இலவசமாக பயன்படுமாறு மாற்றி வெளியிட்டார். தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தியே வலைபதிவு இடுகின்றனர்.
தமிழ் இணைய அகராதி

உமர் தம்பி மஞ்சுவுடன் இணைந்து கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்கினார்.

பிற

தமிழ்மணம், தமிழ் உலக குழுமம், ஈ உதவி குழுமம், ஒருங்கு குறி குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் போன்ற பல தமிழ் இணையக் குழுமங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

உருவாக்கிய செயலிகள் கருவிகள்

  • AWC Phonetic Unicode Writer
  • Online RSS creator - can be used in offline as well
  • RSS செய்தியோடை உருவாக்கி
  • எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
  • தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
  • எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
  • ஒருங்குறி மாற்றி
  • க்னூ பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள்
  • தேனீ ஒருங்குறி எழுத்துரு
  • வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
  • வைகை இயங்கு எழுத்துரு
  • தமிழ் மின்னஞ்சல்
  • தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
  • Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
  • தமிழா-எ-கலப்பை உருவாக்கத்தில் பங்காற்றி உள்ளார்.

மறைவு

உமர்தம்பி ஜூலை 12, 2006-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • எழுதப்பழகுவோம் எச்.ரி.எம்.எல்
  • யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்
  • யுனிகோடும் தமிழ் இணையமும்
  • யுனிகோடின் பன்முகங்கள்
  • RSS ஓடை-ஒரு அறிமுகம்
  • தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு
  • முத்தமிழ்மன்றம்
கட்டுரைகள்
  • குழம்பி நிற்கும் குமுகாயம்
  • நமக்கு கண்கள்
  • செவிகள் இரண்டிரண்டு ஏன்?
  • தவிடுபொடியாகிறது டார்வின் கொள்கை
  • காரியம் சிறிது
  • காரணம் பெரிது 3
  • காரியம் சிறிது காரணம் பெரிது -2
  • காரியம் சிறிது
  • காரணம் பெரிது

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.