இனிசந்த நாகனார்

From Tamil Wiki
Revision as of 15:49, 5 December 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

இனிசந்த நாகனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க  இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இனிசந்த நாகனாரின் இயற்பெயர் நாகன். இனிய சந்தம் கொண்டு பாடல் புனையவல்லவர் என்பதால் இனியசந்த நாகனார் என அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இனிய என்ற சொல் இனி என குறுகியுள்ளது.

இலக்கிய வாழ்க்கை

இனிசந்த நாகனார் இயற்றிய ஒரு பாடல் சங்க  இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 66- வது பாடலாக  இடம் பெற்றுள்ளது. இப்பாடல்,    காதலனுடன் சென்றிருக்கும் மகளின் மலர் போன்ற கண், இப்போது, வழியில்  தூசி, மண் பட்டுக் கலங்கிக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்குமோ என வருந்தும் தாயின் கூற்றாக அமைந்துள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

நற்றிணை 66
  • பாலைத் திணை
  • துறை : மனை மருட்சி
  • மிளகினை ஒத்த காரச் சுவை கொண்ட உகாய்க் காயைச் சிதைத்து உண்ட புறா தனித்து விரிந்திருக்கும் மரக்கிளை ஒன்றில் அமர்ந்து அதன் காரம் போக, வெறி கொண்ட துடிப்போடு தன் கழுத்துச் சிறகுகளைக் கோதிக்கொண்டிருக்கும்.
  • கோடையால் புழுதி பறக்கும்  அந்தக் காட்டில் தான் விரும்பிய காதலனுடன் அவள் சென்றுகொண்டிருக்கும் அவள் கண், கலங்கி அழுமோ? காற்றுப் புழுதி பட்டுக் கலங்கி அழுமோ?
  • என்னுடன் இருக்கும்போது, அவள் அணிந்திருக்கும் மாலை வாடினாலும், கையிலிருக்கும் வளையல் நழுவினாலும், இடுப்புப் பகுதியில் அணிந்திருக்கும் காசு எனும் அணிகலன் இடம் மாறினாலும் தன் அழகெல்லாம் சிதையும்படி கலங்கி அழும் கண்கள் ஆயிற்றே அவை. அந்தக் கண்கள் இப்போது தூசி பட்டால் கண்ணீர் விடுமல்லவா

பாடல் நடை

நற்றிணை 66

மிளகு பெய்தனைய சுவைய புன் காய்

உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட

புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்

பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,

புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,

நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,

சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ-

கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும்,

காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,

மாண் நலம் கையறக் கலுழும் என்

மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

நற்றிணை 66 , தமிழ்த் துளி இணையதளம்

தமிழ் இணையக் கல்விக் கழகம்