under review

இசைநுணுக்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Added category)
No edit summary
Line 88: Line 88:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இசை இலக்கண நூல்கள்]]
[[Category:இசை நூல்கள்]]

Revision as of 12:29, 12 December 2022

இசைநுணுக்கம் : இசை இலக்கணம் குறித்த பழந்தமிழ் நூல். இசைநுணுக்கம் என்ற பெயரில் இரண்டு நூல்கள் இருந்திருக்கலாம் என்று மு. அருணாசலம் தமிழ் இசை இலக்கண வரலாற்றில் விளக்கியிருக்கிறார்[1].

இந்நூல்கள் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை; பிற நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சில பாடல்களே கிடைக்கின்றன.

காலவரையறை

இடைச்சங்க காலம் என்னும் பார்வை

இசைநுணுக்கம் என்ற நூல் ஒன்று இருந்தது குறித்து இறையனார் களவியலுரைப் பாயிரத்தில் குறிப்பு வருகிறது: “அவர்க்கு[2] நூல்‌ அகத்தியமும்‌ தொல்காப்பியமும்‌ மாபுராணமும்‌, இசைநுணுக்கமும்‌ பூத புராணமும் என இவை என்ப” -- இறையனார் களவியலுரைப் பாயிரம்

சிலப்பதிகார உரை ஒன்றில் ”வல்லிதின் உணர்ந்த நல்லிசை நுணுக்கம்” என்ற வரி கிடைக்கிறது.

இவற்றில் இருந்து இசைநுணுக்கம் இடைச்சங்க காலத்தில்‌ இருந்த ஓர்‌ இசைநூல்‌ என்பதை அறியலாம்.

இசைநுணுக்கம் என்னும் நூலை சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரைப்பாயிரமும் குறிப்பிடுகிறது. அடியார்க்கு நல்லார் உரையில் இசைநுணுக்கத்தை இடைச்சங்ககாலத்தை சேர்ந்ததாகவே குறிப்பிட்டு உரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

”இனித் தேவவிருடியாகிய குறுமுனி பாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டி என்னும் அருந்தவ முனி, இடைச்சங்கத்து அகாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசும்பு செல்வோன் திலோத்தமை என்னும் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன்றினமையிற் சார குமாரன் என, அப்பெயர் பெற்ற குமாரன் இசையறிதற்குச் செய்த இசைநுணுக்கம்” - சிலப்பதிகார உரைப்பாயிரம், அடியார்க்கு நல்லார்.

இந்த இசைத்தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் சிகண்டி, அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் ஒருவர். அநாகுலன் என்ற பாண்டிய மன்னனுக்கும் திலோத்தமை என்னும் தேவருலகப் பெண்ணுக்கும் பிறந்த சாரகுமாரன் என்பவர் இசை குறித்து அறிவதற்காக இசைநுணுக்கம் என்னும் நூல் சிகண்டி முனிவரால் இயற்றப்பட்டது என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.

தனது உரையில் அடியார்க்கு நல்லார் வேனிற்காதை தொடக்கத்தில் மேற்கோள் காட்டும் பாடல்

”வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்

றிந்நான் கெல்லை தமிழது வழக்கே” என்றார் சிகண்டியாருமாகலின் - (வேனிற்காதை-வரி 1 - .சிலப்பதிகார உரைப்பாயிரம், அடியார்க்கு நல்லார்).

”தென்பாற்கெல்லை குமரிப்பௌவம்” என்பது கடைச்சங்ககாலத்துக்கு முந்தைய காக்கைப்பாடினியாரும் சிறுகாக்கைப்பாடினியாரும் பாடிய அதே கருத்து என்பதால் இது இடைச்சங்ககாலத்து இசைநுணுக்கத்தில் வரும் பாடலாக இருக்கலாம். மேலும் இவ்வரி ஆசிரியப்பாவில் அமைந்துள்ளதால் பழமையான பாடலாக இருக்கலாம்.

பிற்கால நூல் என்னும் பார்வை

சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் இசைநுணுக்கத்தில் இருந்து மேலும் சில பாடல்களை மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார்.

”இடைபிங்‌ கலையிரண்டு மேறும்‌ பிராணன்‌

புடைநின்ற பானன்மலம்‌ போக்கும்‌-தடையின்றி

உண்டனகீ ழாக்கு முதானன்‌ சமானன் எங்கும்‌

கொண்டெறியு மாறிரதக்‌ கூறு” எனவும்

”கூர்ம னிமைப்புவிழி கோணாகன்‌ விக்கலாம்‌
பேர்வில்‌ வியானன்‌ பெரிதியக்கும்‌-போர்மலியும்‌
கோபங்‌ கிருகரனாங்‌ கோப்பி னுடம்பெரிப்புத்‌
தேவதத்த னாகுமென்று தேர்” எனவும்‌,


“ஒழிந்த தனஞ்சயன்பே ரோதி லுயிர்போய்க்‌
கழிந்தாலும்‌ பின்னுடலைக்‌ கட்டி-அழிந்தழிய
முந்நா ளதிப்பித்து முன்னியவான்‌ மாவின்றிப்‌
பின்னா வெடித்துவிடும்‌ பேர்ந்து” எனவும்

இசைநுணுக்க முடைய சிகண்டியாரும்‌ கூறினாராகலின்‌” - (அரங்கேற்று காதை, 26ஆம் அடியில் வரும் மேற்கோள் - .சிலப்பதிகார உரைப்பாயிரம், அடியார்க்கு நல்லார்)

இம்மூன்று பாடல்களும் வெண்பாக்கள். சங்க காலப் பாடல்கள் வெண்பாவில் பாடப்பெறவில்லை. தொல்காப்பியர் நால்வகை பாக்களைக் குறிப்பிட்டிருந்தாலும் சங்கப் பாடல்களில் வெண்பா நூல்கள் இல்லை. மேலும் இப்பாடலில் உள்ள கருத்துக்கள் தசநாடிகள், தசவாயுக்களின் செயலை விளக்குவதாக உள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் இக்கருத்துக்கள் சமய நூல்கள் தோன்றிய பின்னர் பாடப்பட்ட கருத்துக்கள். அதனால் இது எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய இசைநுணுக்கம் என்னும் நூலாக இருக்கலாம் என ஆய்வறிஞர் மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்.

மற்றொரு மேற்கோளில், இசைப்பாக்களின்‌ வகைபற்றி அடியார்க்கு நல்லார்‌ உரையில் விளக்கும்போது,

“பாக்கள் இசைப்பா, இசையளவுபா என இருவகைப்படும்‌. இசையளவுபா விரியால்‌ பத்து வகைப்படும்‌. அவையாவன. செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம்‌, பெருவண்ணம்‌, ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண்‌, தலைபோகு, மண்டிலமென.

செந்துறை வெண்டுறை தேவ பாணிய்யிரண்டும்‌

வந்தன முத்தகமே வண்ணமே-கந்தருவத்‌

தாற்றுவரி கானல்‌ வரிமுரண்‌ மண்டிலமாத்‌

தோற்று மிசையிசைப்பாச்‌ சுட்டு என்றார்‌ இசைநுணுக்க முடைய சிகண்டியாரென்க” என்கிறார்.
(கடலாடு காதை, 35ஆம் அடியில் வரும் மேற்கோள் - .சிலப்பதிகார உரைப்பாயிரம், அடியார்க்கு நல்லார்)

இதுவும் வெண்பா பாடலாக பிற்கால செய்யுள் நடையில் அமைந்திருப்பதால் பிற்கால இசைநுணுக்கத்தை சேர்ந்த பாடலாக இருக்கலாம்.

ஆசிரியர்

இசைநுணுக்கத்தின் ஆசிரியர் சிகண்டி.

சிகண்டி என்பவரைப் பற்றி பௌத்த நூல்களில் ஒரு கதை வருகிறது:

சக்கன் (இந்திரன்) உடைய தேர்ப்பாகனான மாதலியின் மகன் சிகண்டி. இந்த சிகண்டியிடம் திம்பரு (தும்புரு) என்னும் கந்தர்வனுடைய மகள் பத்தா சூர்ய வச்சசா என்னும் பெண் காதல் கொண்டிருந்தாள்.

பஞ்சசிகா என்னும் பதினாறு வயதுடைய அழகிய கந்தர்வன் இசைக்கலை தேர்ச்சி பெற்றவன். சக்கனுடைய இசைப்புலவனாக இருந்தவன். பத்தா சூர்ய வச்சசா மீது காதல் கொண்டு அக்காதலைப் பற்றி இசைப்பாட்டு ஒன்றை இயற்றி அவளிடம் பாடினான். அதில் புத்தர் பிறந்த சாக்கிய குலத்தின் சிறப்புக் கூறப்பட்டிருந்ததால் தான் காதலித்த சிகண்டியை மணந்து கொள்ளாமல் பஞ்சசிகாவை மணந்து கொண்டாள்.

இந்தக் கதை இசைநுணுக்கம் இயற்றிய ஆசிரியர் சிகண்டி குறித்த தொன்மமா என்பது உறுதியாக இல்லை[3].

மேலும் அகத்தியர் சீடர்கள் பன்னிருவர் பட்டியலில் சிகண்டி என்ற பெயர் இல்லாததால் ”தேவவிருடியாகிய குறுமுனி பாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டி” (சிலப்பதிகார உரைப்பாயிரம், அடியார்க்கு நல்லார்) என்ற தகவலும் உறுதி செய்ய முடியவில்லை.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. தமிழ் இசை இலக்கண வரலாறு (தொகுதி 2) - மு. அருணாசலம், முதற் பதிப்பு, அக்டோபர் 2009, பக்கம் 17
  2. இடைச்சங்கத்தார்க்கு
  3. மறைந்து போன தமிழ் நூல்கள் - மயிலை. சீனி. வேங்கடசாமி, 2016, பக்கம் 142


✅Finalised Page