ஆ. சிவசுப்பிரமணியன்

From Tamil Wiki

// under construction//

தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர்.

தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர் நாட்டாரியல் ஆய்வாளர் நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டவர். மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்தவர். ஆகவே பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அமைந்த ஆய்வுகள் அவை.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற 'விளக்கு' விருது பெற்றவர்.

பிறப்பு, இளமை

ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் நெல்லை மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் 09.04.1943 இல் பிறந்தவர்.  இவரது தந்தையாரின் பணி நிமித்தம் காரணமாக இவரது இளமைக் காலமும் பள்ளிக் கல்வியும் ஓட்டப்பிடாரம், சென்னைச் சூளைமேடு, திருநெல்வேலி என்று தமிழகத்தின் பல ஊர்களில் அமைந்தது.  1963-67 நான்கு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துப், புலவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1967 இல் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் தமிழ்த்துறையில் ஆசிரியராக இணைந்தார். 2001 ஏப்ரல் மாதம் வரை இவர் இதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அப்போது இவருக்கு பொதுவுடைமைக் கொள்கைகளில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக பேராசிரியர் நா.வானமாமலையுடன் ஏற்பட்ட நட்பு இவரை ஒரு சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளராக மாற்றியது.

குடும்பம்

இலக்கியப் பங்களிப்பு

ஆய்வுகள்

பெரும்பாலும் வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த தன்னை ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது நா.வானமாமலை தான் என்று விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். நா.வா அவர்களின் 'ஆராய்ச்சி' எனும் இதழுக்காக 'நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அது, திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றியது. அதற்கடுத்து அதே இதழுக்காக 'பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை நிறைய கள ஆய்வுகள் செய்து எழுதியிருக்கிறார். இவ்விரு கட்டுரைகளுக்குப் பிறகு தான் தனக்கு நிறைய தொடர்புகள் கிட்ட ஆரம்பித்தன என்றும் அப்பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.


இவருடைய கட்டுரைகளும் நூல்களும் தமிழகத்தில் அறியப்படாமல் இருந்த வரலாற்றின் பக்கங்களை வெளிக்கொண்டு வந்தன. ஆஷ் கொலை குறித்தும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. குறித்தும் இவர் எழுதியுள்ள ஆய்வுரைகள் தமிழ்நாட்டு அறிஞர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றவை. நெல்லை மாவட்டத்தின் கிராமப் புறங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் மக்களிடையே இருந்த வாய்மொழி வழக்காறுகளைத் தொகுத்து, தமிழகத்தின் மக்கள் வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவர்.

நூல்கள்

ஆ.சிவசுப்ரமணியனின் வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும், பின்னி ஆலை வேலைநிறுத்தம் (இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி) ஆகிய இருநூல்களும் தமிழ்ச்சூழலில் தொழிலாளர் இயக்கம் உருவாகிவந்த சித்திரத்தை அளிப்பவை.

கிறித்தவமும் சாதியும் தமிழ்ச்சூழலில் அலைகளை உருவாக்கிய நூல். இந்தியாவுக்கு வந்த ஆரம்பகால கிறிஸ்தவம் இங்கே சாதியை ஒழிக்க முயலவில்லை, இங்கிருந்த சாதியமைப்புடன் சமரசமே செய்துகொண்டது என்று காட்டிய நூல். இங்கிருந்த கிறித்தவ ஆலயங்களில் சாதிகளை பிரித்து அமரச்செய்யும் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன, பல ஆலயங்களில் தலித்துக்கள் உள்ளே விடப்படவே இல்லை என்பதை சுட்டிக்காட்டியது.தொடர்ந்து வந்த கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் இன்னொரு ஆழ்ந்த பார்வையை முன்வைத்தது

இலக்கிய முக்கியத்துவம்

இவருடைய ஆய்வுமுறை மேலைநாட்டு நாட்டாரியல், சமூகவியல் ஆகிய அறிவுத்துறைகளின் முறைமைகளை ஒட்டியது. அந்த ஆய்வுமுறைக்கு உள்ளடக்கமாக சில நம்பிக்கைகள் உண்டு. அதை ஒருவகை ஐரோப்பியவாதம் எனலாம். அந்த ஐரோப்பியவாதத்துடன் வானமாமலை அவர்களிடமிருந்து ஆ.சிவசுப்ரமணியம் பெற்றுக்கொண்ட மார்க்ஸிய கண்ணோட்டமும் இணைகையில் அவருடைய பார்வை உருவாகிறது.

மார்க்சிய செவ்வியலை (அரசு, கலை போன்ற மேற்கட்டுமானங்கள் உற்பத்தி, உழைப்பு, சுரண்டல் போன்ற கீழ்கட்டுமானங்களால் மட்டுமே உருப்பெற்றவை) தன் ஆய்வுகளின் அடிப்படையாகக் கொண்டிருந்தவர், பிற்காலத்தில் அதிலிருந்து சற்று விலகி சாதி போன்ற பண்பாட்டுக் காரணிகளின் தோற்றத்தை பொருளியல் அடிப்படையில் மட்டுமே ஆராய்வது முழுமையாக இருக்க முடியாது என்றும் கண்டு கொண்டிருக்கிறார்.

விருதுகள்

விளக்கு விருது - 2018

படைப்புகள்

ஆய்வுநூல்கள்

1.      பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)

2.      அடிமை முறையும் தமிழகமும் (1984)

3.      வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986,2012)

4.      ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986, 2009)

5.      மந்திரமும் சடங்குகளும் (1988,1999,2010,2013)

6.  பின்னி ஆலை வேலைநிறுத்தம் (1921,1990) (இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)

7.      எந்தப் பாதை (2000)

8.      வ.உ.சி. ஓர் அறிமுகம் (2001)

9.      கிறித்தவமும் சாதியும் (2001,2001,2003,2006,2011)

10.    தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார் (2003)

11.    தமிழகத்தில் அடிமை முறை (2005,2007, 2010,2012)

12.    நாட்டார் வழக்காற்றியல் அரசியல் (2006)

13.   பஞ்சமனா பஞ்சயனா (2006)

14.   தோணி (2007)

15.   கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் (2007,2012)

16.   கோபுரத் தற்கொலைகள் (2007)

17.   வரலாறும் வழக்காறும் (2008,2010)

18.   ஆகஸ்ட் போராட்டம் (2008)

19.   வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி (2008)

20.   உப்பிட்டவரை…(2009)

21.   இனவரைவியலும் தமிழ் நாவல்களும் (2009)

22.   பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை (2010)

23.   படித்துப் பாருங்களேன்….(2014)

24. பனை மரமே! பனை மரமே! (2016)

சேகரித்து பதிப்பித்த நூல்கள்

1.      பூச்சியம்மன் வில்லுப்பாட்டு (1989, 2013)

2.      தமிழக நாட்டுப்புறப் பாடல்களஞ்சியம் (தொகுதி 10) (2003)

3.      தமிழக நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் (தொகுதி10) (2004)

4.      உபதேசியார் சவரிராய பிள்ளை 1801 -1874 (2006)

5.      கல்லறை வாசகப்பா – கூத்து நாடகம் (2007)

6.      பெரியநாயகம் பிள்ளை தன்வரலாறு (2008)

குறுநூல்கள்

உசாத்துணை

https://www.vikatan.com/arts/literature/142171-interview-with-writer-asivasubramanian

https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/535372-prof-a-interview-with-sivasubramanian.html

https://puthu.thinnai.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/

https://www.jeyamohan.in/127636/