under review

ஆண்டாள்

From Tamil Wiki
Revision as of 15:27, 24 January 2023 by Logamadevi (talk | contribs)
ஆண்டாள் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

ஆண்டாள் (பொ.யு. 7ஆம் நூற்றாண்டு) பக்தி இலக்கிய காலக் கவிஞர். பன்னிரெண்டு வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொ.யு. 7-ஆம் நூற்றாண்டில் பிறந்தார். வடபத்ரசாயி கோயிலில் பூஜை செய்து வந்த விஷ்ணுசித்தரின்(பெரியாழ்வார்) வளர்ப்பு மகள் ஆண்டாள். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் வடபத்ரசாயி கோயில் தோட்டத்தில் துளசிச் செடியின் அருகில் கண்டெடுத்த குழந்தையை குழற்கோதை எனப் பெயரிட்டு பெரியாழ்வார் வளர்த்தார்.

தொன்மம்

ஆண்டாள் பூமிபிராட்டியின் அவதாரமாக நம்பப்படுகிறார். பெரியாழ்வாரின் பக்திப் பாடல்கள் வழி திருவரங்கத்துறை திருவரங்க நாதரை தன் நாயகராக எண்ணி ஆண்டாள் வாழ்ந்தார். தினமும் அங்கிருந்த நந்தவனத்தில் பூக்கள் பறித்து மலர்மாலை கட்டி, பெரியாழ்வார் வடபத்ரசாயிக்கு அணிவிக்கும் மாலையை அவருக்குத் தெரியாமல் தாம் அணிந்து கண்ணாடியில் பார்த்த பின் அதைக் கோவிலுக்கு அனுப்பினார். இறைவன் ஆண்டாள் அணிந்த மாலையை அணிந்ததால் ஆண்டாள் ’சூடிக் கொடுத்த சுடர் கொடி’ என்று அழைக்கப்பட்டார். இதை ஒரு நாள் அறிந்த பெரியாழ்வார் ஆண்டாள் மீது கோபம் கொண்டு மானுடர் அணிந்த மாலையை இறைவனுக்கு அணிவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அன்று ஆண்டாள் சூடிய மாலையை இறைவனுக்கு அணிவிக்காமல் வருத்ததில் உறங்கினார். அவருடைய கனவில் வந்த வடபத்ரசாயி ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே தனக்கு உகந்தது என அறிவித்தார். அதன்பின் ஆண்டாள் மேலும் பெருமாள் மீது பக்தி கொண்டு அவரை மணம் செய்ய மதுரை அழகர் கோவிலில் நேர்ச்சை செய்தார்.

பிற பெயர்கள்
  • சூடிக் கொடுத்த சுடர்கொடி
  • கோதை நாச்சியார்
  • குழற்கோதை

ஆன்மிகம்

திருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு கோவில் உள்ளது. ஆண்டாளை தெய்வமாக வழிபடுகின்றனர். வைணவ சமயத்தின் முக்கியமான வழிபடுகடவுளாக ஆண்டாள் உள்ளார். பெரும்பாலான திருமாள் மூலவராக உள்ள கோவில்களில் ஆண்டாளுக்கான தனி சன்னிதி உள்ளது.

கோவில்
வழிபாடு
  • ஆண்டாள் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட தினமான ஆடி 8-ல் ஆடிப் பூரத் தேர்த்திருவிழா, ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்டாடப்படுகிறது.
  • மார்கழியில் பாவை நோன்பு நோற்கப்படுகிறது.
  • பங்குனி மாதத்தில் ஆண்டாள் திருக்கல்யாண விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இத்திருக்கல்யாணத்திற்கு திருப்பதி வெங்கடேஸ்வரர்ஆலயத்திலிருந்து மலர்மாலை வரும்.
  • மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காகத் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.
  • திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் ப்ரம்மோத்ஸவத்திற்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படும். கருட சேவையின் போது இந்த மலர்மாலை பயன்படும்.
ராமானுஜர்

"மாலிருஞ்சோலையில் வாழும் நம்பியே, என்னைக் கோவிந்தனோடு சேர்த்துவைத்தால் உனக்கு நூறு தடா அக்கார அடிசிலும், நூறு தடா வெண்ணெய்யும் நான் சமர்ப்பிக்கிறேன்" என ஆண்டாள் வேண்டிக் கொண்டதை முன்னூறு ஆண்டுகள் கழித்து வந்த ராமானுஜர் கூடாரவல்லி நாளில் படைத்தார். பக்தியால் ஆண்டாளை அண்ணனாகப் பெற்ற ராமானுஜர் ’கோயில் அண்ணன்’ என்றழைக்கப்பட்டார். மார்கழி மாதம் 27-ஆம் நாள் ’கூடாரவல்லி’ நாள் கொண்டாடப்படுகிறது. 27-வது திருப்பாவையின் முதல் வரி 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டாளின் கிளி

ஆண்டாளின் இடக்கையில் கிளி உள்ளது. ஆண்டாள் கோவிலில் மூலவறையிலுள்ள ஆண்டாளின் கையிலுள்ள கிளி தினமும் செய்யப்படும். மாதுளம் மரத்தின் பூக்கள், மூங்கில் குச்சிகள், வாழை மரம், நந்தியாவட்டை மரத்தின் இலைகள் ஆகியவை கொண்டு கிளி செய்யப்படும்.

கோதை மண்டலி

ஆண்டாள் இயற்றிய பாடல்களைத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நிகழ்ச்சிகளின் மூலம் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட ’கோதை மண்டலி’ அமைப்பு 1970-ல் தொடங்கப்பட்டு, 1982-ல் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக ஆனது.

இலக்கிய வாழ்க்கை

ஆண்டாள் பன்னிரெண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார். ரங்கமன்னாரைத் திருமணம் செய்வதற்காக மார்கழியில் நோன்பிருந்து ஆண்டாள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் பாடினார். இறைவனைக் காதலனாகப் பாவித்துப் பாடப்படும் நாயகன்-நாயகி பாவத்தைக் கைக்கொண்டு பாடப்பட்ட பக்தி இலக்கிய காலப் பாடல்கள் வகைமையில் ஆண்டாள் பாடினார். திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் நாதமுனிகள் தொகுத்த நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ளன.

இலக்கிய இடம்

மீரா, அக்கம்மாதேவி ஆகியோரின் பக்தியுடன் ”மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்ற ஆண்டாளின் பக்தி ஒப்பு நோக்கப்படுகிறது.

மறைவு

தொன்மம்

விஷ்ணுசித்தரின் கனவில் ஸ்ரீரங்கத்தின் ரங்கநாதர் ஒப்புதல் அளிக்க அவர் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு ஸ்ரீரங்கம் வரைச் சென்றார். பாண்டிய மன்னன் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்காரம் செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி நடந்த ஆண்டாள் பங்குனி உத்திர நாளில் திருவரங்கம் கோயிலை அடைந்து அங்கு மறைந்து விட்டதாக நம்பப்படுகிறது.

நூல்கள்

ஆண்டாள் பற்றிய நூல்

உசாத்துணை



✅Finalised Page