under review

ஆசிரியப்பா

From Tamil Wiki

தமிழ் யாப்பிலக்கணம் கூறும் நால்வகைப் பாக்களுள் ஒன்று ஆசிரியப்பா. மூன்றடிகள் முதல் அளவற்ற அடிகளைக் கொண்டு அமையும். அகவல் ஓசை கொண்டதால் அகவற்பா என்றும் அழைக்கப்படும். ஆசிரியப்பா நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என நான்கு வகைப்படும். சங்க இலக்கியம் தொடங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற காப்பியங்கள் பலவற்றில் பெருமளவு இடம் பெற்றிருப்பது ஆசிரியப்பா.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

சீர்: ஆசிரியப்பாவில் ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்து வரும். பிற சீர்களும் கலந்து வரும். ஆனால் கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய சீர்கள் வராது.

தளை: நேரொன்றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத் தளையும் மிகுந்து வரும். பிற தளைகளும் கலந்து வரும்.

அடி: ஆசிரியப்பா குறைந்த அளவு மூன்றடிகளைப் பெற்று வரும். அதிக அளவு அடிகளுக்கு வரம்பு இல்லை. எத்தனை அடிகள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் முதலடியும் ஈற்றடியும் அளவடிகளாக (நான்கு சீர்கள் கொண்ட அடி) இருத்தல் வேண்டும். பொதுவாக ஆசிரியப்பா அளவடியால் அமையும். ஆயினும் நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி சிந்தடி(முச்சீரடி)யாக வரும். இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையிடையே குறளடிகளும் சிந்தடிகளும் வரும்.

தொடை: ஆசிரியப்பாவில் பொழிப்பு மோனையும் (மோனை= முதல் எழுத்து ஒன்றி வருவது; பொழிப்பு மோனை = முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் அமையும் மோனை), அடி எதுகையும் (அடிதோறும் முதற்சீரில் அமையும் எதுகை) வருவது சிறப்புடையது. வேறுவகையான தொடைகளும் வரலாம்.

ஓசை: ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை.

முடிப்பு: ஆசிரியப்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ‘ஏ’ காரத்தில் முடிவது சிறப்பானது. நிலைமண்டில ஆசிரியப்பா ‘என்’ என்று முடிவது சிறப்பானது. அதே சமயம் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ‘ஓ’ என்றும், ‘ஈ’, என்றும் ‘ஆய்’ என்றும், ‘ஐ’ என்றும் முடியலாம்.

ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் குறித்து இலக்கண விளக்கம் நூல்,

“அகவல் இசையன அகவல் மற்றுஅவை
ஏஓ ஈஆய் எனஐஎன்று இறுமே.”

- என்று குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியப்பாவின் வகைகள்

  • ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை,
  • நேரிசை ஆசிரியப்பா
  • இணைக்குறள் ஆசிரியப்பா
  • நிலைமண்டில ஆசிரியப்பா
  • அடிமறி மண்டில ஆசிரியப்பா

நூற்பாக்கள்

ஆசிரியப்பாவின் வகைகள் குறித்து இலக்கண விளக்கம்,

“நேரிசை இணைக்குறள் நிலைமண் டிலமே
அடிமறி மண்டிலம் எனநான்கு அகவல்”

- என்று கூறுகிறது.

யாப்பருங்கலக்காரிகை இது குறித்து,

“கடைஅயற் பாதம்முச் சீர்வரின் நேரிசை; காமருசீர்
இடைபல குன்றின் இணைக்குறள் எல்லா அடியும்ஒத்து
நடைபெறு மாயின் நிலைமண் டிலம்நடு வாதிஅந்தத் தடைதரு
பாதத் தகவல் அடிமறி மண்டிலமே”

- என்கிறது.

இதன் பொருள்: ஈற்றயலடி முச்சீரடியாக வருவது நேரிசை ஆசிரியப்பா; இடையே பல அடிகள் குறளடியாகவும் சிந்தடியாகவும் குறுகிவருவது இணைக்குறள் ஆசிரியப்பா; எல்லா அடிகளும் அளவடிகளாக ஒத்து வருவது நிலைமண்டில ஆசிரியப்பா; நடு, முதல், இறுதி என அடிகளை முன்பின்னாக மாற்றி வைத்துப் பார்த்தாலும் ஓசையோ பொருளோ கெடாதிருப்பது அடிமறிமண்டில ஆசிரியப்பா.

உசாத்துணை


✅Finalised Page