under review

அ. மாதவையா

From Tamil Wiki
Revision as of 00:01, 5 October 2022 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

To read the article in English: A. Madhaviah. ‎

அ. மாதவையா
மாதவையா நூல் முதல்பக்கம்
குசிகர் கதைகள்
பஞ்சாமிர்தம்
அ.மாதவையா வாழ்க்கை
மாதவையா வாழ்க்கை
அ.மாதவையா சென்னை இல்லம் (பெருங்குளம் ஹவுஸ்)
அ.மாதவையா பெருங்குளத்திலுள்ள  இல்லம்
மாதவையா குடும்பப் புகைப்படம்

அ. மாதவையா [அ. மாதவையர்] (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். அ. மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம் தமிழில் வெளிவந்த முதற்காலகட்ட நாவல்களில் ஒன்று. பெண் கல்வி, பெண்களின் மறுமணம் ஆகியவற்றை முன்வைத்த சமூக சீர்திருத்தவாதி. ஆங்கிலத்திலும் கிளாரிந்தா போன்ற நாவல்களை எழுதியவர்.

பெயர் விவாதம்

அ.மாதவையாவின் பெயர் பிற்கால நூல்களில் மாதவையா என்று எழுதப்படுகிறது என்றும், ஆனால் அவர் தன் காலகட்டத்தில் வெளியிட்ட நூல்களில் மாதவையர் என்றே உள்ளது என்றும் எம். வேதசகாயகுமார் சொல்புதிது இதழில் 2000-த்தில் எழுதினார். அதை மறுத்து எழுதிய ஆய்வாளர் சு. தியடோர் பாஸ்கரன் மாதவையாவின் இல்லத்தின் முகப்பிலுள்ள பெயர்ப்பலகையில் அ.மாதவையா என்றே உள்ளது என்றும் அவர் தன் ஆங்கில நூல்களில் மாதவையா என்றே எழுதினார் என்றும் குறிப்பிட்டார். அ.மாதவையாவின் இறுதிக்காலத்தில் அவருடைய பஞ்சாமிர்தம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியான தமிழ் நூல்களில் மாதவையர் என்றே எழுதியிருக்கிறார் என ஆய்வாளர் அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்.

பிறப்பு, கல்வி

அ. மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் ஆகஸ்ட் 16, 1872-ல் பிறந்தார். அவர் தந்தை அனந்தராமையர். அன்னை மீனாட்சி அம்மாள். அவர் பெருங்குளம் ஊரைச்சேர்ந்தவரான அனந்த அவதானி என்னும் அறிஞரின் வழிவந்தவர். அ. மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணன் எழுதிய வம்ச வரலாற்றுக்குறிப்பின்படி அனந்த அவதானி, மகாதேவ பட்டர், அனந்தவன் அடிகள், யக்ஞநாராயணன், அனந்தநாராயணையர் அல்லது அப்பாவையர் அ. மாதவையா என்பது அவர்களின் குலமரபு.அவர் தெலுங்கு பிராமணர் குலத்தில் பிறந்து, பிற்காலத்தில் தமிழகத்தில் குடியேறிய வடமர் வகுப்பைச் சார்ந்தவர் என ஆய்வாளரான கால.சுப்ரமணியம் குறிப்பிடுகிறார் [முத்துமீனாட்சி நாவல், தமிழினி பதிப்புக்காக முன்னுரை] பெருங்குளம் யக்ஞநாராயணர் ஆலயத்தில் அ. மாதவையா குடும்பத்துக்கு உரிமை இருந்தது. சென்னையில் அ. மாதவையா கட்டிய இல்லத்துக்கு பெருங்குளம் இல்லம் என பெயரிட்டிருந்தார்.

அ. மாதவையா தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887-ஆம் ஆண்டில் முடித்தார். நெல்லையில் வீடுகளில் பணம் கொடுத்து தங்கி சாப்பிட்டு படித்தார். இந்த வாழ்க்கையை தன் நாவல்களில் அ. மாதவையா சித்தரித்துள்ளார். நெல்லையில் வாழ்ந்த லட்சுமண போத்தி என்பவரிடம் அ. மாதவையா மரபான முறையில் தமிழ் கற்றார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். அ. மாதவையா தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். அ. மாதவையா இளங்கலை படிப்பை (B.A) 1892-ல் முதல் மாணவராக முடித்தார்.

தனிவாழ்க்கை

தோற்றம், இயல்புகள்

அ.மாதவையா 171 செண்டிமீட்டர் உயரமும் 67 கிலோ எடையும் கொண்டிருந்தார், வலுவான மெலிந்த உடல்கொண்டவர் என அவர் மகன் மா.கிருஷ்ணன் பதிவுசெய்கிறார். மாநிறமானவர். உரத்தகுரல் கொண்டவர். மாதவையா சிறந்த நீச்சல் நிபுணர். சென்னை போலீஸ் துறையில் இருந்த பவானந்தம் பிள்ளை என்பவருடன் போட்டியிட்டு கடலில் நீந்தி வென்றார் என்று மா.கிருஷ்ணனின் பதிவு சொல்கிறது. மாதவையா குதிரையேற்றத்தில் விருப்பம் கொண்டவர். பணிக்காலத்தில் நெடுந்தொலைவு குதிரையில் பயணம் செய்தார். இரண்டு குதிரைகளை வைத்திருந்தார் என மா.கிருஷ்ணனின் நினைவுகளில் காணப்படுகிறது.

குடும்பம்

அ. மாதவையா பதினைந்தாம் வயதிலேயே (1887) நரசிங்கநல்லூரைச் சேர்ந்த பதினொரு வயதான மீனாட்சியை மணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், விசாலாக்ஷி அம்மாள், முத்துலக்ஷ்மி அம்மாள், சரஸ்வதி அம்மாள் என ஐந்து மகள்களும் மா.அனந்தநாராயணன், மா. யக்ஞ நாராயணன், மா. கிருஷ்ணன் என மூன்று மகன்களும் பிறந்தனர்.

மாதவையா தன் குழந்தைகளுடன் மிக அணுக்கமான உறவு கொண்டவர். அக்காலத்து ஆசாரங்களை எதிர்த்து தன் மகள் லட்சுமியை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்தார். அ.மாதவையா தன் இன்னொரு மகள் முத்துலட்சுமிக்கு முறையான ஆசிரியர்களைக் கொண்டு ஓவியம் கற்பித்தார்.

அ.மாதவையாவின் மகள் வி. விசாலாட்சி அம்மாள் காசினி என்னும் பெயரில் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர். இவருடைய மூன்றில் எது என்னும் சிறுகதை பஞ்சாமிர்தம் இதழில் வெளிவந்தது. மாதவையாவின் குடும்பத்தினர் சேர்ந்து எழுதிய கதைகளை, பி.ஸ்ரீ. ஆச்சார்யாவை பதிப்பாசிரியராகக் கொண்டிருந்த தினமணி பிரசுராலயம் 'முன்னிலா’ என்ற தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

மாதவையாவின் மகள் லட்சுமி அவர் கணவரின் குடும்பத்தால் கொடுமைப்படுத்தப்பட்டு. பின்னர் விலக்கி வைக்கப்பட்டார். மாதவையா தன் மகளை விவாகரத்து பெறச்செய்து மேற்படிப்புக்கு அனுப்பினார். அது அன்றைய பிராமணச் சாதியினரிடம் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. ஆனால் மாதவையா அதை பொருட்படுத்தவில்லை. (இக்காலத்தில் மாதவையா கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது பற்றி யோசித்ததாக சொல்லப்படுகிறது) லட்சுமி லண்டனில் மேற்படிப்பு முடித்து சென்னை குயீன்ஸ் மேரி கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராகவும் தலைவராகவும் திகழ்ந்தார். மாதவையாவின் மரணத்திற்குப்பின் அவருடைய பெரிய குடும்பத்தை லட்சுமிதான் பேணினார் என மா.கிருஷ்ணனின் தன்வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.

அ. மாதவையாவின் மகன் மா. கிருஷ்ணன் ஆங்கிலத்தில் கானியல், சூழலியல் சார்ந்த கட்டுரைகளை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர்.

அலுவல் வாழ்க்கை

அ. மாதவையா பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1893-ல் எம்.ஏ படித்துக்கொண்டிருக்கும்போது உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து உப்பு ஆய்வாளர் (Salt Inspector) ஆக பணியிலமர்ந்தார். பணிக்காலத்தில் அவருடைய மேலதிகாரியான வெர்னன் என்பவர் (H.A.B.Vernon) அவர் போதிய பணிவுடன் இல்லை என்று சொல்லி குறிப்புகள் எழுதியிருக்கிறார். ஆங்கில இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மூப்பை மீறி அ.மாதவையாவுக்கு கிடைக்கவேண்டிய பணி உயர்வை பெற்றார். அதற்கு எதிராக புகார் அளித்தமையால் மாதவையா ஆந்திராவிலுள்ள கள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டார். அங்கே மிக வலுவாக இருந்த போதைவணிகர்களின் குழுவை மாதவையா துணிச்சலாக கைத்துப்பாக்கியுடன் உள்ளே புகுந்து அடக்கினார். ஆகவே பரிசும் பதவி உயர்வும் பெற்றார்.

அ. மாதவையா 1917-ல் அரசு வேலையில் இருந்து முன்னரே ஓய்வுபெற்று சென்னைக்கு வந்தார். அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். அ. மாதவையா சென்னை பல்கலைக்கழக செனெட் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டார். இறுதிவரை அப்பதவியில் இருந்தார்.

இசையார்வம்

அ.மாதவையா கர்நாடக இசையில் ஆர்வம் கொண்டவர். பூச்சி ஐயங்கார் என அறியப்பட்ட ராமநாதபுரம் ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு அணுக்கமானவர். பாடகர் சண்முக வடிவு, பூங்காவனம், வீணை தனம்மாள் என பல இசைநிபுணர்களுடன் தொடர்பு இருந்தது.

இலக்கிய வாழ்க்கை

அ. மாதவையா
தொடக்ககால எழுத்துக்கள்

அ.மாதவையா தனது கல்லூரி நாட்களில் சென்னை தாம்பரம் கிறித்தவக்கல்லூரி சார்பில் வில்லியம் மில்லர் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மாகஸீன் இதழில் [Madras Christian College Magazine] ஆங்கிலத்தில் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். அ. மாதவையா ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதவேண்டும் என்னும் இலக்கு கொண்டிருந்தார். பெருங்குளம் அப்பாவையர் மாதவையர், பி.ஏ. என்பதன் சுருக்கமாக Pamba என்ற புனைபெயரை ஆங்கிலத்தில் பயன்படுத்தினார். [கால சுப்ரமணியம்]. அமாதவையா அமுதகவி, இந்துதாஸன், கோணக்கோபாலன் போன்ற புனைபெயர்களிலும் எழுதியிருக்கிறார்.

அ.மாதவையா அவருடைய நண்பரான சி. வி சுவாமிநாதையர் என்பவர் 1892-ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரை 1892-ல் எழுதத்தொடங்கினார். அதிலிருந்த கடுமையான விமர்சனங்களினால் அத்தொடர் அதன் ஆசிரியரால் நிறுத்தப்பட்டது. இருமாதங்களுக்கு ஒருமுறை என ஆறு அத்தியாயங்கள் மட்டுமே வெளிவந்தன. அவ்விதழின் மற்ற கட்டுரைகளுக்கு அ. மாதவையா என்ற இயற்பெயரையும் சாவித்திரியின் கதை தொடர்கதைக்கு 'சாவித்திரி’ என்ற புனைபெயரையும் பயன்படுத்தினார்.

நாவல்கள்

அ. மாதவையா முதலில் எழுத தொடங்கிய நாவல் சாவித்ரியின் கதை. அதை பாதியில் நிறுத்திவிட்டு 1898-ல் பத்மாவதி சரித்திரம் நாவலை எழுதினார். அந்நாவலுக்குக் கிடைத்த வரவேற்பால் ஊக்கம் பெற்று அ. மாதவையா சாவித்திரியின் கதை நாவலை முத்துமீனாட்சி என்ற பேரில் முழுமை செய்து வெளியிட்டார். 1903-ல் வெளிவந்த இந்நாவல் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. தி ஹிந்து இதழில் கடுமையான கண்டனங்கள் வெளிவந்தன என்று அ. மாதவையாவின் மகன் மா. கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அடுத்த ஆறாண்டுக்காலம் அ. மாதவையா தமிழில் ஏதும் எழுதவில்லை. ஆங்கிலத்தில் சென்னை கிறித்தவக்கல்லூரி இதழில் கவிதைகள் மட்டும் அக்காலகட்டத்தில் எழுதினார்.

1898-ஆம் ஆண்டு அ. மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம் நாவலின் முதற்பகுதி வெளிவந்தது. அதற்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையில் மாதவையா அந்நூல் வாசகர்களால் விரும்பப்படாமல் போகலாம் என்று எண்ணுவதாகவும் ஆகவே அதை தொடர்ந்து எழுதவில்லை என்றும் சொல்கிறார். அந்நாவலுக்கு பொதுவாக வரவேற்பு இருந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டு மதிப்புரைகள் வந்தன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பரிதிமாற்கலைஞர் என அழைக்கப்பட்ட தமிழறிஞரான வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி அந்நாவலை பாராட்டி, அ. மாதவையா கொண்டிருந்த அந்த தயக்கம் தேவையில்லை என எழுதினார். அதனால் ஊக்கம் பெற்ற மாதவையா 1899-ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியையும் எழுதினார். 1899-ல் இரண்டு பகுதிகளும் இணைந்து ஒரேநூலாக வெளிவந்தது. அதன் தொடர்ச்சியை அ. மாதவையா 1924-ல் பஞ்சாமிர்தம் இதழில் எழுத ஆரம்பித்தார். அதை முடிக்கும் முன்னரே உயிர்துறந்தார்.

கண்ணன் பெருந்தூது (சிறுகதை)
சிறுகதைகள்

1910-ல் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் குசிகர் என்னும் புனைபெயரில் குசிகர் குட்டிக்கதைகளை அ. மாதவையா எழுதினார். மொத்தம் 27 சிறுகதைகள். மாதவையா கௌசிக கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஆகவே குசிகர் என பெயர் சூட்டிக்கொண்டார். இக்கதைகள் சமூக விமர்சனத்தன்மை கொண்டிருந்தாலும் அங்கதச்சுவை மேலோங்கியவை. மேலும் இவற்றுக்கு தமிழில் புகழ்பெற்றிருந்த பரமார்த்த குரு கதைகளின் வடிவ ஒற்றுமையும் இருந்தது. இக்கதைகள் வாசகர் நடுவே புகழ்பெற்றன. அவற்றை இந்து நாளிதழே Kusika’s Short Stories என்ற பெரில் நூலாக வெளியிட்டது. பின்னர் அவற்றில் 22 கதைகள் மாதவையாவாலேயே தமிழில் குசிகர் குட்டிக்கதைகள் என்ற பேரில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டன. பஞ்சாமிர்தம் என்னும் தன் இலக்கிய இதழில் அ. மாதவையா கண்ணன் பெருந்தூது உட்பட நான்கு சிறுகதைகளை எழுதினார். முன்னர் தமிழர்நேசன் இதழில் ஒரு சிறுகதை எழுதியிருந்தார்.

கவிதைகள்

1914-ஆம் ஆண்டில் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார் என்னும் தகவல் அவருடைய வாழ்க்கை பற்றிய சில நூல்களில் காணக்கிடைக்கிறது. நேரடியாக அ.மாதவையா தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனால் தேசிய இயக்கத்தை ஆதரித்து கவிதைகள் எழுதியிருக்கிறார்.

நாடகங்கள்

அ. மாதவையா ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோவை தழுவி தமிழில் உதயலன் என்னும் நாடகத்தை எழுதினார். சிறிய ஓரங்கநாடகங்களையும் எழுதியிருக்கிறார்.

ஆங்கில படைப்புகள்

அ. மாதவையாவின் முதல் ஆங்கில நாவல் தில்லை கோவிந்தன் (1907) லண்டனில் வெளியிடப்பட்ட தொடக்ககால இந்திய நாவல்களில் ஒன்று. சத்யானந்தன் (1909), கிளாரிந்தா (1915) லெஃப்டினெண்ட் பஞ்சு (1915) ஆகிய ஆங்கில நாவல்களையும் எழுதியிருக்கிறார். Dox vs Dox என்ற பேரில் தொகுக்கப்பட்ட அவருடைய ஆங்கிலக் கவிதைகளின் தொகுதி இப்போது கிடைப்பதில்லை. அ. மாதவையா ஆங்கிலத்தில் குழந்தைகளுக்காக மார்க்கண்டேயன் கதை, நந்தனார் கதை, மணிமேகலை கதை ஆகியவற்றை எழுதினார்.

மரபிலக்கியம்

அ. மாதவையா சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்கு உரை எழுதினார். அவை இலக்கியச் செல்வம் என்னும் பேரில் தொகுக்கப்பட்டுள்ளன.

பாரதியும் மாதவையாவும்

சி.சுப்ரமணிய பாரதிக்கும் அ.மாதவையாவுக்குமான உறவு குறித்து ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணன் எழுதிய 'அ.மாதவையா - ஒரு விவரப்பதிவு’ (காலச்சுவடு) என்னும் இதழில் 1914-ஆம் ஆண்டில் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு மாதவையாவுக்கு கிடைத்தது என்றும் இப்போட்டியில் சி.சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார் என்றும், பாரதியாரின் கவிதை மூன்றாமிடத்தை பெற்றது என்றும் சொல்கிறார். ஆனால் இதைப்பற்றி பாரதி எதையும் குறிப்பிடவில்லை. அ.மாதவையாவின் கவிதையின் தொடக்கம் "இந்திய மாதாவின் சுந்தர பாதங்கள் வணங்கிடுவோம் வாருமே" அதிலுள்ள ஒரு கண்ணி "அன்னையும் முக்காடு போடலாச்சே! இனி ஆண்மையும் உண்டோ வெறும் பேச்சே!" .

பாரதியார் அ.மாதவையாவின் சமூகசீர்திருத்த நோக்கையும் செயல்பாடுகளையும் பற்றி அறிந்திருந்தார். சுதேசமித்திரன் இதழில் 1915-ல் எழுதிய குறிப்பொன்றில் ஒரு கிழவர் இளம்பெண்ணை மணப்பதற்கு அ.மாதவையா எழுதிய எதிர்ப்புக்குறிப்பை ஆதரித்து எழுதியிருக்கிறார். பாரதி தங்கள் இல்லத்துக்கு வந்ததாக அ.மாதவையாவின் மகள் மா.முத்துலட்சுமி இந்து ஆங்கில நாளிதழுக்காக ஜூன் 1, 2001-ல் வி.ஆர்.தேவிகாவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். (அறியப்படாத தமிழ் உலகம்)

இலக்கிய நண்பர்கள்

அ.மாதவையா ரா.ராகவையங்கார், மு. இராகவையங்கார், சி.வை. தாமோதரம் பிள்ளை, அனந்தராமையர், கா.சி.வேங்கடரமணி, உ.வே.சாமிநாதையர், பிரான்ஸிஸ் கிங்ஸ்பெரி போன்ற தமிழறிஞர்களுடன் தொடர்பில் இருந்தார்.

மாதவையா

நாட்டாரியல்

அ. மாதவையா தெலுங்கு நாட்டார் தெய்வமான மாதங்கி தமிழ் வழிபாட்டுமுறையில் உருமாறி நீடிப்பதைப்பற்றி எழுதிய ஆய்வுநூலான Mathangi: A Curious Religious Institution தமிழ் நாட்டாரியல் பற்றிய ஆய்வுகளில் முன்னோடியான ஒன்றாக கருதப்படுகிறது.

இதழியல்

பஞ்சாமிர்தம் இதழ் பக்கம்

அ. மாதவையா 1917-ல் சென்னைக்கு வந்தபோது கல்விப்பணியை பரப்பும்பொருட்டு Tamil Education Society என்னும் அமைப்பை ஒருங்கிணைத்தார். அதன் பொறுப்பில் தமிழர்நேசன் என்னும் இதழை தொடங்கினார். சில இதழ்களுக்குப்பின் அது அவருடைய மருமகனாகிய பெ.நா.அப்புஸ்வாமியின் பொறுப்புக்கு விடப்பட்டது.

அ. மாதவையா 1924 சித்திரையில் பஞ்சாமிர்தம் என்ற மாத இதழைத் தொடங்கினார். இவ்விதழ் இலக்கியத்துக்காக மட்டுமே நடத்தப்பட்டது. அ. மாதவையா பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை அவ்விதழில் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மரணமடைந்தார். 1925-ல் அ. மாதவையாவின் மரணத்துடன் பஞ்சாமிர்தம் இதழ் நின்றுவிட்டது. மொத்தம் 25 இதழ்கள் வெளிவந்தன.

சமூகசீர்திருத்தம்

அ. மாதவையா பெண்கல்வியிலும் குழந்தைமண தடையிலும் பெண்களின் மறுமணத்திலும் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார். அ. மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம், முத்துமீனாட்சி என்னும் இரு நாவல்களுமே பெண்கல்வியை அடிப்படைக் கருவாகக் கொண்டவை.

மதம்

ஆரம்பகட்ட நாவலாசிரியர்களில் அ. மாதவையாவுடன் ஒப்பிடத்தக்க பி.ஆர்.ராஜம் ஐயர் போலன்றி அ. மாதவையா இந்துமதப்பற்று அற்றவராகவே இருந்தார். சாஸ்தாபிரீதி, கண்ணன் பெருந்தூது (சிறுகதை)போன்ற கதைகளில் இந்து மரபுகளை விமர்சனமும் பகடியும் செய்கிறார். சத்யானந்தன், கிளாரிந்தா ஆகிய நாவல்களில் அ. மாதவையா கிறிஸ்தவ மதத்தை சமூக ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழியாகவே காட்டுகிறார். (தன் மகள் லட்சுமியை அவர் படிக்க வைத்தபோது பிராமணர் சமூகம் அவரை சாதிவிலக்கு செய்ய முயன்ற காலத்தில் சீர்திருத்த கிறிஸ்தவத்திற்கு மதம்மாற அவர் எண்ணியதாகவும் சொல்லப்படுகிறது)

ஆனால் பிற்கால நாவல்களில் அ. மாதவையா சீர்திருத்தக் கிறிஸ்தவ மதத்தின் மதமாற்ற உத்திகளை கண்டிக்கிறார். ஐரோப்பிய பார்வைகளில் இருந்து விடுபடவேண்டியதைப்பற்றிப் பேசுகிறார். அ.மாதவையாவின் மருமகனும், அவருடைய பஞ்சாமிர்தம் இதழின் ஆசிரியருமான பெ.நா.அப்புஸ்வாமி அ.மாதவையா இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுகொண்டவர், கிறிஸ்தவ மதத்தின் சமூகத்தொண்டு மீது மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார் என கிளாரிந்தா நாவலுக்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். கிளாரிந்தா நாவலின் தமிழ் மொழியாக்கத்துக்கு 1976ல் முன்னுரை வழங்கிய அ. மாதவையாவின் மகன் மா.அனந்தநாராயணன் மாதவையா உறுதியான இந்து மத நம்பிக்கை கொண்டவர் என்றும், அவருக்கு கிறிஸ்தவ மதத்தின்மேல் மதம்சார்ந்த ஈடுபாடு ஏதுமில்லை என்றும் கூறுகிறார்.

ஆய்வாளர் கிறிஸ்டின் பர்க்மான் மாதவையா கிறிஸ்தவ மதம் பற்றி இரட்டைநிலைபாடு கொண்டிருந்தார் என்கிறார். ஆய்வாளர் மானசீகன் அ. மாதவையாவின் எழுத்துக்களின்படி அவர் மதம் கடந்த சமூகப்பார்வை, அல்லது நாத்திகப்பார்வை கொண்டிருந்தவர் என்கிறார்.

இலக்கிய இடம்

அ. மாதவையா (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

அ. மாதவையா தமிழின் முன்னோடி நாவலாசிரியர் என்னும் இடத்தில் வைக்கப்படுபவர். 1892-ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல் அ. மாதவையா எழுதிய சாவித்திரியின் கதைதான். ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903-ல் முத்து மீனாட்சி என்ற பேரில் நூலாகியது. அதற்கு முன்னரே பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896-ல் வந்தது. அ. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் 1898-ல் வெளிவந்தது.

அ. மாதவையா நாவல் என்னும் கலைவடிவம் பற்றிய புரிதலுடன் எழுதியவர். ”நாவல் என்னும் ஆங்கிலச்சொல்லும் நவீனம் என்னும் வடமொழிப்பதமும் ஒரே தாதுவினின்றும் பிறந்து ஒரே பொருளைத் தரும் வார்த்தைகளாம்" என நாவல் என்னும் சொல்லைப்பற்றிய விளக்கத்துடன் பத்மாவதி சரித்திரத்துக்கான முன்னுரையை அ. மாதவையா தொடங்குகிறார். பெரும்பாலும் அற்புதச் சம்பவங்களும் வினோதமான நிகழ்வுகளும் கொண்ட நீண்ட கதைகளை ரொமான்ஸ் என்று மேலைநாட்டில் சொல்கிறார்கள். நாவல் என்பது அதிலிருந்து வேறுபட்டது என அதில் அ. மாதவையா விளக்குகிறார்.

"மற்றெல்லா உயர்தர கிரந்தங்களையும் போலவே நாவல் என்னும் கிரந்தமும் படிப்பவர் மனத்தைக் கவர்ந்து மகிழ்வூட்டலையே முதற்கருத்தாகவும் அத்துடன் நல்லறிவூட்டலை உட்கருத்தாகவும் கொண்டது” என வரையறை செய்யும் அ. மாதவையா தமிழில் அதுவரை வந்துள்ள நாவல்களை நாவல்கள் என கருதவில்லை என குறிப்பிடுகிறார். 'நாவல் என்னும் வடிவம் தமிழுக்கு நாவல்’ [புதிது] என்கிறார்.

அத்துடன் இம்முன்னுரையிலேயே நாவல் என்பது கல்வியறிவு பெற்றவர்கள் வாசிப்பதற்குரிய பழைய நூல்களில் இருந்து வேறுபட்டது என்றும், கற்பிப்பவர் எவருமில்லாமல் நேரடியாகவே மொழியறிந்த வாசகர்கள் வாசிப்பதற்குரியது என்றும் அ. மாதவையா சொல்கிறார். வாசிப்பு மக்கள் மயமானதன் விளைவாக உருவான கலைவடிவமே நாவல் என்னும் புரிதல் அவருக்கு இருந்ததை இது காட்டுகிறது. தெளிவான எளிய மொழியில், வர்ணனைகளும் அணிகளும் இல்லாமல் கதை சொல்லப்படவேண்டும் என்று சொல்லும் மாதவையா பண்படாத கதாபாத்திரங்கள் பேசுவதை அவ்வண்ணமே எழுதுவது இந்த வடிவின் வழக்கம் என்றும் குறிப்பிடுகிறார். இது நாவல் வடிவின் யதார்த்தவாத அழகியல் பற்றிய அ. மாதவையா கொண்டிருந்த புரிதலை காட்டுகிறது.

அ. மாதவையா எழுதிய நாவல்களில் முத்துமீனாட்சி மிகக்கடுமையாக பிராமண சாதியில் நிலவிய பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை கண்டிக்கிறது. தமிழில் வெளிவந்த அ. மாதவையா எழுதிய நாவல்களில் தமிழ்ச்சூழலுக்காக எழுதப்பட்ட நேரடியான விளக்கங்களும், கருத்துக்களும் உள்ளன. அவை இல்லாத ஆங்கில நாவலான கிளாரிந்தாவே அ. மாதவையா எழுதிய சிறந்த இலக்கியப்படைப்பு என விமர்சகர்கள் கருதுகிறார்கள். கிளாரிந்தா தமிழில் சரோஜினி பாக்கியமுத்து அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது நெல்லையில் ஒரு தாசிகுலத்துப் பெண் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதையும், ஊர்நன்மைக்காக ஒரு கிணறு வெட்டியதையும் பற்றிய உண்மைவரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல். அ. மாதவையாவின் தில்லை கோவிந்தன் நாவல் அவருடைய சகோதரன் வழி பேரனாகிய வே. நாராயணன் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் வெளிவந்தது.

அ. மாதவையா அக்காலத்தைய பொதுவான இலக்கியப்போக்குகள் அனைத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். மாத்யூ ஆர்னால்டின் Light of Asia அன்று மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்திய நூல். இந்தியாவெங்கும் புத்தர் ஓர் அலைபோல மீள்கண்டடைவு செய்யப்பட்டார். அதன் பாதிப்பால் சித்தார்த்தா என்ற பேரில் புத்தரின் வாழ்க்கையை அ. மாதவையா எழுதினார்.

அ. மாதவையா காலகட்டத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி எழுதுவதும், அந்தப்பாணியில் செய்யுள் நாடகங்களை எழுதுவதும் இலக்கியமரபாக இருந்தது. மாதவையாவின் உதயலன் ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தின் தழுவல். அவ்வகைப்பட்ட பல நூல்கள் தொடர்ச்சியாக தமிழில் பலரால் எழுதப்பட்டன. தமிழில் பண்டைய இலக்கியநூல்கள் அச்சேறிக்கொண்டிருந்த காலம் அது. அந்நூல்களின் இலக்கியநயத்தை பொதுவாசகர்களுக்கு புரியும்படி எழுதும் ஒரு புது உரைமரபு அன்று தொடங்கியது. மாதவையாவின் இலக்கியச் செல்வம் அந்த வகையில் ஒரு முன்னோடி நூல்.

அ.மாதவையா தமிழ் நாவல், சிறுகதை, மொழியாக்கம், வாழ்க்கை வரலாற்று எழுத்து, இதழியல் ஆகியவற்றில் முன்னோடிகளில் ஒருவர். இந்திய வாழ்க்கையை ஒட்டி ஆங்கிலத்தில் எழுதுவதிலும் அவரே முன்னோடியானவர்.

இறப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா அக்டோபர் 22, 1925 அன்று தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து அ. மாதவையா மரணமடைந்தார்.

வாழ்க்கை வரலாற்று நூல்கள், ஆய்வுகள்

அ. மாதவையா பற்றி அவருடைய மகன் மா.கிருஷ்ணன் விரிவான வாழ்க்கைக்குறிப்பு ஒன்றை எழுதினார். அது மா.கிருஷ்ணனின் மறைவுக்குப்பின் வெளியாகியது

  • சீதா ஏ ராமன் எழுதிய Madhaviah: A Biography and a Novel
  • Waha, Kristen Bergman (2018-03-26). "Synthesizing Hindu and Christian Ethics in A. Madhaviah's Indian English *Novelclarinda(1915)". Victorian Literature and Culture
  • Parameswaran, Uma (1986-03-01). "3. A. Madhaviah 1872 -1925: An Assessment". The Journal of Commonwealth Literature.
  • அ. மாதவையா பற்றி ராஜ் கௌதமன் எழுதிய 'அ. மாதவையா (1872-1925): வாழ்வும் படைப்பும்’ என்னும் நூல் விரிவான ஆய்வுநோக்கை முன்வைக்கிறது. இது அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும்
  • அ. மாதவையா. ஆசிரியர். வேங்கடராமன், சு. இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை.இணையநூலகம்.

படைப்புகள்

நாவல்
  • பத்மாவதி சரித்திரம் அ. மாதவையா (1898)
  • முத்துமீனாட்சி அ. மாதவையா (1903)
  • விஜயமார்த்தாண்டம் அ. மாதவையா (1903)
  • பத்மாவதி சரித்திரம் மூன்றாம் பாகம் (1928, முற்றுப்பெறாதது)
  • தில்லை கோவிந்தன் அ. மாதவையா [மொழியாக்கம் வே.நாராயணன்]
  • கிளாரிந்தா அ. மாதவையா [மொழியாக்கம். சரோஜினி பாக்கியமுத்து]
  • சத்யானந்தன் அ. மாதவையா [மொழியாக்கம் .ஜோசப் குமார்]
சிறுகதை
  • குசிகர் குட்டி கதைகள்.அ. மாதவையா (ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924)
நாடகம்
  • உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன் (ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஒத்தெல்லோ எனும் வெனிசு மோரியன்' நாடகத்தின் தமிழாக்கம்) (1903)
  • திருமலை சேதுபதி (1910)
  • மணிமேகலை துறவு (1918)
  • ராஜமார்த்தாண்டம் (1919)
  • பாரிஸ்டர் பஞ்சநதம் (1924)
கவிதை
  • Poems (20 கவிதைகள்) (1903)
  • பொது தர்ம சத்கீத மஞ்சரி (இரண்டு பாகங்கள், 1914)
  • The Ballad of the penniless bride (1915)
  • புது மாதிரிக் கல்யாணப் பாட்டு (1923)
  • இந்திய தேசிய கீதங்கள் (1925)
  • இந்தியக் கும்மி (1914)
கட்டுரை
  • ஆசாரச் சீர்திருத்தம் (1916)
  • சித்தார்த்தன் (1918)
  • பால வினோதக் கதைகள் (1923)
  • பால ராமாயணம் (1924)
  • குறள் நானூறு (1924)
  • தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924)
  • தட்சிண சரித்திர வீரர் (1925)
ஆங்கில நூல்கள்
  • Dox vs Dox poems (1903)
  • Thillai Govindan. Novel (1903)
  • Satyananda .Novel (1909)
  • The story of Ramanyana .Childrens Literature(1914)
  • Clarinda .Novel (1915)
  • Lt. Panju .Novel(1915)
  • Markandeya Childrens Literature (1922)
  • Nanda Childrens Literature(1923)
  • Thillai Govindan's Miscellany. Articles (1907)
  • Manimekalai. Childrens Literature (1923)
  • Kusika's short stories – 1916, 1923
  • Dalavai Mudaliar .Research(1924)
  • Mathangi: A Curious Religious Institution.Research (1924)

இதைத் தவிர அ. மாதவையா தமிழில் எழுதிய சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன. அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.

உசாத்துணைகள்


✅Finalised Page