under review

அறம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
அறம் : தமிழில் உள்ள ஒரு கலைச்சொல். சம்ஸ்கிருதத்தில் தர்மம், பிராகிருதத்திலும் பாலியிலும் தம்மம் ஆகிய சொற்களுக்கு ஏறத்தாழ இணையானது என்றாலும் தமிழுக்கே உரிய மேலதிக பொருள் கொண்டது. வெவ்வேறு காலகட்டங்களில் பொருளேற்றம் கொண்டு மாறிவந்தது. அறம் என்னும் சொல் பொதுவாக வாழ்க்கைநெறி, நீதி, விழுமியம், ஒழுக்கம், கொடை , நோன்பு ஆகியவற்றையும் வாழ்க்கையை இயக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்ச ஒழுங்கையும் சுட்டுவதாக தமிழில் கையாளப்படுகிறது. அறம்பாடுதல் என்றால் அறத்தை சான்றுக்கு அழைத்து சாபம் போடுதலாக பழங்காலத்தில் ஒரு மரபாக இருதது.
''To read the article in English:'' [[Aram]]
 
அறம்: தமிழில் உள்ள ஒரு கலைச்சொல். சம்ஸ்கிருதத்தில் தர்மம், பிராகிருதத்திலும் பாலியிலும் தம்மம் ஆகிய சொற்களுக்கு ஏறத்தாழ இணையானது என்றாலும் தமிழுக்கே உரிய மேலதிக பொருள் கொண்டது. வெவ்வேறு காலகட்டங்களில் பொருளேற்றம் கொண்டு மாறிவந்தது. அறம் என்னும் சொல் பொதுவாக வாழ்க்கைநெறி, நீதி, விழுமியம், ஒழுக்கம், கொடை , நோன்பு ஆகியவற்றையும் வாழ்க்கையை இயக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்ச ஒழுங்கையும் சுட்டுவதாக தமிழில் கையாளப்படுகிறது. அறம்பாடுதல் என்றால் அறத்தை சான்றுக்கு அழைத்து சாபம் போடுதலாக பழங்காலத்தில் ஒரு மரபாக இருதது.
== வேர்ச்சொல் ==
== வேர்ச்சொல் ==
[[எஸ். வையாபுரிப் பிள்ளை]]யின் சென்னைப் பல்கலைக் கழகத் [[தமிழ்ப் பேரகராதி]] அறம் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லாக அறு என்பதை அளிக்கிறது. அறு என்னும் சொல்லில் இருந்து அறுதல் , அறுதி போன்ற சொற்கள் உருவாகி வந்தன. மலையாள மொழியில் அற்றம் என்னும் சொல் இறுதியை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. பளியர், குறும்பர் முதலிய மலைக்குடிகளிடமும் அற்றம் என்னும் சொல் அறுதி என்னும் பொருளிலும் அறுதியாகச் சொல்லப்படுவது என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. அற்றம் குறுகி அறம் என ஆகியிருக்கலாம்.
[[எஸ். வையாபுரிப் பிள்ளை]]யின் சென்னைப் பல்கலைக் கழகத் [[தமிழ்ப் பேரகராதி]] அறம் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லாக அறு என்பதை அளிக்கிறது. அறு என்னும் சொல்லில் இருந்து அறுதல் , அறுதி போன்ற சொற்கள் உருவாகி வந்தன. மலையாள மொழியில் அற்றம் என்னும் சொல் இறுதியை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. பளியர், குறும்பர் முதலிய மலைக்குடிகளிடமும் அற்றம் என்னும் சொல் அறுதி என்னும் பொருளிலும் அறுதியாகச் சொல்லப்படுவது என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. அற்றம் குறுகி அறம் என ஆகியிருக்கலாம்.

Revision as of 10:45, 29 June 2022

To read the article in English: Aram

அறம்: தமிழில் உள்ள ஒரு கலைச்சொல். சம்ஸ்கிருதத்தில் தர்மம், பிராகிருதத்திலும் பாலியிலும் தம்மம் ஆகிய சொற்களுக்கு ஏறத்தாழ இணையானது என்றாலும் தமிழுக்கே உரிய மேலதிக பொருள் கொண்டது. வெவ்வேறு காலகட்டங்களில் பொருளேற்றம் கொண்டு மாறிவந்தது. அறம் என்னும் சொல் பொதுவாக வாழ்க்கைநெறி, நீதி, விழுமியம், ஒழுக்கம், கொடை , நோன்பு ஆகியவற்றையும் வாழ்க்கையை இயக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்ச ஒழுங்கையும் சுட்டுவதாக தமிழில் கையாளப்படுகிறது. அறம்பாடுதல் என்றால் அறத்தை சான்றுக்கு அழைத்து சாபம் போடுதலாக பழங்காலத்தில் ஒரு மரபாக இருதது.

வேர்ச்சொல்

எஸ். வையாபுரிப் பிள்ளையின் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி அறம் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லாக அறு என்பதை அளிக்கிறது. அறு என்னும் சொல்லில் இருந்து அறுதல் , அறுதி போன்ற சொற்கள் உருவாகி வந்தன. மலையாள மொழியில் அற்றம் என்னும் சொல் இறுதியை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. பளியர், குறும்பர் முதலிய மலைக்குடிகளிடமும் அற்றம் என்னும் சொல் அறுதி என்னும் பொருளிலும் அறுதியாகச் சொல்லப்படுவது என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. அற்றம் குறுகி அறம் என ஆகியிருக்கலாம்.

நிகண்டுப் பொருட்கள்

அறம் என்னும் சொல்லுக்கு பிங்கல நிகண்டு தருமம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையை பொருளாக அளிக்கிறது. இது பௌத்தம், சமணம் இரு மதங்களையும் சார்ந்த சொல். இந்த பிரபஞ்சத்தை இயக்கும் நெறி தருமம் எனப்படுகிறது. அதை மகாதர்மம் என பௌத்தம் வழிபடுகிறது. திவாகர நிகண்டு அறம் என்னும் சொல்லுக்கு நோன்பு என்னும் பொருளையும் அளிக்கிறது.

பொருள் வளர்ச்சி

அறம் என்னும் சொல்லின் பொருள் மூன்று வழிகளிலாக வளர்ச்சி அடைந்தது. அம்மூன்று தளப் பொருள்களிலும் பின்னர் வந்த நூல்களில் பயன்படுத்தப்படுகிறது.

முதல் பொருள்

முன்னோராலும் சமூகத்தாலும் வகுக்கப்பட்டு அறுதியாக உரைக்கப்பட்ட வாழ்க்கை நெறி என்னும் பொருளில் அறம் பயன்படுத்தப்பட்டது. இல்லறம், துறவறம் போன்ற சொற்களில் அறம் என்னும் சொல் நெறி என்னும் பொருளையே கொண்டுள்ளது. அறத்தொடு நிற்றல் என்னும் இலக்கியத் துறையில் அறம் என்னும் சொல் முன்னோர் வகுத்த வாழ்க்கை நெறி என்னும் பொருளியேயே கையாளப்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் System, Order, Rule ஆகிய பொருள்வரும்படி இச்சொல் கையாளப்பட்டுள்ளது.

இரண்டாம் பொருள்

மனிதர்களுக்கு அப்பாற்பட்ட இயற்கை அல்லது பிரபஞ்சநெறியின் நெறி என்னும் பொருளில் பிற்காலத்தில் அறம் வகுக்கப்பட்டது. சிலப்பதிகாரம் ’அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்று தன் நூல்முகத்தில் குறிப்பிடுகிறது. ஊழுக்கு சமானமான ஒன்றாக அறம் அதில் குறிப்பிடப்படுகிறது. அரசியல் நெறி தவறியவர்களுக்கு அறம் எமனாக வரும் என்னும் வரியானது அரசியல் நெறி என்பது அறம் அல்ல, அறம் அதற்கும் மேற்பட்ட மீறமுடியாத ஆணை என்னும் பொருளைக் கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் Devine Rule, Cosmic Order என்னும் பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

மூன்றாம் பொருள்

பௌத்த சமண மதங்களின் அறிவுறுத்தலாலும் பின்னர் வைதிகமதத்தில் அந்த அறிவுரைகள் ஏற்கப்பட்டதாலும் ஒருவன் தன் மற்பிறப்புச் சுழற்சியை நற்செயல்கள் வழியாக அறுத்து வீடுபேறு அடையமுடியும் என்னும் எண்ணம் உருவாகியது. அந்த நற்செயல்களுக்கு அறம் என்னும் சொல் புழக்கத்திற்கு வந்தது. ஈகை, கருணை ஆகியவையும் அறம் என்னும் சொல்லால் சுட்டப்பட்டன. ’அறம்செய விரும்பு’ என்னும் ஆத்திச்சூடி பாடலில் அறம் என்னும் சொல் ஈகை என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Charity. Virtue, Ethics, ஆகிய பொருள் வரும்படி இச்சொல் பயன்படுத்தப் படுகிறது. இந்த நெறிகளின் படி ஒழுகுபவர்களை அறத்தோர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. மதம் அல்லது சமயமும் அறம் என்னும் சொல்லால் சுட்டப்பட்டது.

இந்த மூன்று தளத்துப் பொருட்களும் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன. சங்க இலக்கியங்களிலேயே இந்த மூன்று பொருளிலும் அறம் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அறத்தொடு நிற்றல்

அறத்தொடு நிற்றல் என்னும் துறை சங்க இலக்கியத்தில் உள்ளது. அது தலைவனோ தலைவியோ களவுறவுக்கு முற்படுகையில் அவர்களை நல்வழிப்படுத்தி முறையான திருமணவாழ்க்கைக்கு பிறர் அறிவுறுத்தும் உள்ளடக்கம் கொண்டது. அங்கே அறம் என்பது முன்னோர் மரபுசார்ந்த நெறி என பொருள் படுகிறது.

(பார்க்க அறத்தொடு நிற்றல்)

அறம் பாடுதல்

ஒருவர் தனக்கு பெரும் அநீதியோ அவமதிப்போ இழைத்துவிட்டால் அறத்தைச் சான்றாக்கி அவன் அழிந்துபோகவேண்டும் என சாபமிடுவது அறம்பாடுதல் எனப்படுகிறது. பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மனை கொல்லும் நோக்குடன் அவன் தம்பி நந்தி கலம்பகம் என்னும் நூலை அறம்பாடல் முறைப்படி பாடினான் என்றும், பழியை அஞ்சி அவன் சிதையேறி இறந்தான் என்றும் தொன்மக்கதை உள்ளது.

அறம்படுதல்

ஒருவர் தானே பேசும் பேச்சிலோ, அல்லது பிறர் அவரிடம் பேசும் பேச்சிலோ தவறுதலாக ஓர் அவச்சொல்லை உரைத்துவிடும்போது அச்சொல் அறத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு அது அவருக்கு தீங்கை உருவாக்கும் என்னும் நம்பிக்கை நாட்டார் மரபில் உண்டு. இது குழந்தைகளின் நோய், சாவு பற்றிய சொற்களுக்கு பொதுவாக கருத்தில் கொள்ளப்படுகிறது. இக்காரணத்தால் குழந்தைகள் கண்மூடுதல் என்று சொல்லாமல் கண்வளர்தல் என்று சொல்லும் வழக்கம் உள்ளது. இவ்வாறு ஒரு சொல் அறத்தால் ஒப்பப்பட்டு எதிர்விளைவை உருவாக்குதலை அறம்படுதல் என்பார்கள்.

இலக்கியச் சுட்டுகள்

  • ’அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய்  (குறுந்தொகை 209) .குறுந்தொகையில் இவ்வரியில் வழிநடையாளர்களுக்கு குடிநீருடன் நெல்லிக்காய் வழங்குவது அறம் என சுட்டப்படுகிறது.
  • ’திறவோர் செய்வினை அறவது ஆகும்’ (நற்றிணை) என்னும் வரியில் முன்னோர், சான்றோர் சொல்லும் செயலுமே அறம் எனக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
  • ’அறம்புரி அருமறை நவின்ற நாவின்’ (ஐங்குறுநூறு) என்னும் வரி வேதங்நெறியை அறம் என்னும் சொல்லால் சுட்டுகிறது.
  • ’இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்.. ’(தொல்காப்பியம் களவியல்) இந்த தொல்காப்பிய சூத்திரம் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வாழ்க்கைவிழுமியங்கள் என்னும் பொருளில் அறம் என்னும் சொல்லை பயன்படுத்துகிறது.
  • ’அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’ (தொல்காப்பியம்) என்னும் வரியில் அறம் என்பது ஒரு குடிச்சமூகத்தின் நெறிகளைச் சுட்டுவதாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • ’அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ (திருக்குறள் ) என்னும் குறள் பாடலில் அறம் ஒழுக்கம் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
  • ’அறத்தாறிது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ ( திருக்குறள் ) என்னும் பாடலில் அறம் மனிதர்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் இயற்கையையும் ஆட்சிசெய்யும் முழுமுற்றான நெறியாக உருவகிக்கப்பட்டுள்ளது.
  • ’அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை’ (திருவாசகம்) இந்தப்பாடலில் பாவம் என்பதற்கு நேர் எதிர்ச்சொல்லாக புண்ணியம் என்னும் பொருளில் அறம் பயன்படுத்தப்பட்டுள்ளது
  • ‘அறம் எனக்கு இலையோ எனும் ஆவி நைந்து இற அடுத்தது என் தெய்தங்காள்! எனும். பிற உரைப்பது என்? -(கம்பராமாயணம்) இப்பாடலில் அறம் என்னும் சொல் நீதி என்னும் பொருளில் கையாளப்படுகிறது.
  • ’அறத்தைச் சீறும் கொல், அருளையே சீறும் கொல் திறத்தைச் சீறும் கொல், முனிவரைச் சீறும் கொல்?’ (கம்பராமாயணம்) இப்பாடலில்அறம் என்னும் சொல் இறையாணை, இறைநெறி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அறம் என்பது இறையருள், முனிவரின் தவம் ஆகியவற்றுக்கு நிகராக வைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page