அம்மன் நெசவு (நாவல்)

From Tamil Wiki

அம்மன் நெசவு (2002) எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய நாவல். அவினாசி உமயஞ்செட்டிபாளையத்தின் தேவாங்க செட்டியார்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.

எழுத்து,பிரசுரம்

அம்மன் நெசவு 2002ல் தமிழினி பதிப்பகம் வெளியீடாக வந்தது. பின் இருபது வருடம் கழித்து அதே பதிப்பகத்தால் 2021ல் மறுபதிப்பு வெளிவந்தது.

கதைச்சுருக்கம்

நெசவாளர்களில் ஒருவனான நஞ்சப்பன் தறியில் அம்மன் நெசவு விழுகிறது. அதனால் தங்கள் குலதெய்வம் செளடேஸ்வரியை பூசாரியப்பன் வீட்டிலிருந்து அவன் வீட்டிற்கு மாற்றி எழுந்தருளப்பண்ணுகிறார்கள். தேவாங்க செட்டி சமூகம் தன் பக்கத்தூரில் இருக்கும் கவுண்டர்களிடம் கடனுக்கும், ஒவ்வொரு சின்ன தேவைக்கும் அவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அப்போது சின்ன பிரச்சினையினால் நெசவாளர்கள் கவுண்டர்களிடன் முரண்பட நேர்கிறது. அது பெரும் பிரச்சனைக்கு சென்று சேர்கிறது. இரு தரப்பிலும் சேதம் ஏற்படுகிறது. கடைசியில் கவுண்டர்களின் தொல்லை தாங்காமலும், தொழில் தேடியும் நெசவாளச் சமூகம்  திருப்பூர் நகரத்திற்கு குடிபெயர்கிறது.

இலக்கிய இடம்

இந்திய நிலப்பரப்பு முழுக்க மனிதர்கள் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள் போராலும், பஞ்சங்களாலும், தொழில் தேடியும் அந்தம் குடிப்பெயர்தலை இலக்கியத்தில் பெரிதாகப் பதிவு செய்யப்படவில்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் கி.ராஜநாராயனனின் கோப்பல்ல கிராமமும் சு.வேணுகோபாலின் நுண்வெளிகிரணங்கள் ஆகிய படைப்புகள் பேசியுள்ளன. அந்த வகையில் எம்.கோபாலகிருஷ்ணனின் அம்மன் நெசவு நாவல் மக்கள் குடிபெயர்தலைப் பற்றி பேசிய முக்கியமான நாவல்களில் ஒன்று.