under review

அம்பை

From Tamil Wiki
Revision as of 20:25, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
அம்பை
அம்பை
அம்பை மகாஸ்வேதாதேவியுடன்

To read the article in English: Ambai. ‎


அம்பை (நவம்பர் 17, 1944) அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்.

அம்பை இயல் விருது

பிறப்பு, இளமை

அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. கோயம்புத்தூரில் நவம்பர் 17, 1944 அன்று பிறந்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலையும் , வரலாற்றில் முதுகலைப் பட்டமும் டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கன் ஸ்டடீசில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியும், கன்னடமும் அறிந்தவர்

அம்பை சிறுமியாக(நன்றி சொல்வனம்)

தனி வாழ்க்கை

தமிழகத்தில் பள்ளி ஆசிரியராகவும், டெல்லியில் இரண்டு ஆண்டுகள் கல்லூரி விரிவுரையாளராகவும் பணி புரிந்தார். 1976-இல் ஆவணப்பட இயக்குனர் விஷ்ணு மாத்தூரை திருமணம் செய்து கொண்டார்.

அம்பை

இலக்கிய வாழ்க்கை

அம்பை அப்பெயரைச் சூட்டிக்கொண்டதைப்பற்றி ’அமுதசுரபி’ 2013 தீபாவளி மலரில் ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார். "லக்ஷ்மி என்னும் புனைபெயரைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் வெள்ளிக்கிழமை பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் லக்ஷ்மி என்றுதான் பெயர் சூட்டுவார்கள். 'தேவன்’ எழுதிய பார்வதியின் சங்கல்பம் என்னும் நாவலில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாகிய பார்வதி 'அம்பை’ என்ற பெயரில்தான் எழுத ஆரம்பிப்பாள் என்பதாலும் மற்றும் மகாபாரத அம்பையின் ஆணுமற்ற பெண்ணுமற்ற ஆண் பெண் இரண்டுமான பால் விளக்கமற்ற தன்மையை விரும்பியதால் அப்பெயரையே தனக்குச் சூட்டிக்கொள்ள முடிவெடுத்தேன்"[1]

அம்பையின் முதல் படைப்பு நந்திமலைச்சாரலிலே (1960) என்ற சிறுவர்களுக்கான துப்பறியும் சாகச நாவல். குழந்தைகள் பத்திரிகையான "கண்ணன்" பத்திரிகையில் வெளியானது. பிறகு ஆனந்த விகடன் பத்திரிகையில் சில சிறுகதைகளை எழுதினார். அம்பையின் இரண்டாவது நாவலான அந்திமாலை கலைமகள் நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. இந்தச் சிறுகதைகளும், அந்திமாலை நாவலும் அன்று ஆணுக்கு உதவியாக இருப்பவளே லட்சியப் பெண் என்ற பிம்பத்தை ஒட்டியே அமைந்திருந்தன என்று அம்பை குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு 1967-இல் கணையாழி பத்திரிகையில் வெளியான சிறகுகள் முறியும்[2] என்ற சிறுகதையே அவரது முதல் சிறுகதையாக அவரால் முன்வைக்கப்படுகிறது

அம்பையின் சிறுகதைகள் அனேகமாக பெண்களின் பார்வையிலிருந்து எழுதப்படுபவை. ஆனால் அவை பிரச்சாரக் கதைகள் அல்ல. பாரம்பரியமும், பண்பாடும் பெண்களை காலம் காலமாக எப்படி நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கி வந்திருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். பெண்களின் வாழ்க்கையில் உள்ள சமூக ஆதிக்கம், கருத்தியல் ஆதிக்கத்தையே முதன்மை பேசுபொருளாக அம்பை கொண்டிருக்கிறார். தொடக்ககாலக் கதைகளில் மார்க்சியச் செல்வாக்கும் உண்டு. அண்மையில் துப்பறியும் கதைகளின் பாணியிலும் கதைகளை எழுதியிருக்கிறார்.

அம்பை வாசகர் சந்திப்பு

ஆய்வுகள்

அம்பையின் ஆய்வுகள் இரண்டு களங்களைச் சார்ந்தவை . சமூகவியல், இலக்கியம். அம்பை சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு சமூகவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலையை பரிவுடன் ஆராய்பவை அம்பையின் கட்டுரைகள். பெண் இசைக்கலைஞர்கள், பெண் நடனக்கலைஞர்கள் பற்றிய அவருடைய ஆய்வுப்பதிவுகள் முக்கியமானவை.

அம்பை தமிழிலக்கியத்தின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்கள் பற்றி விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிருடன் இருந்த எண்பதுகளில் அவர்களில் பலரை நேரில் கண்டு பேசி பதிவுசெய்துள்ளார். அந்த ஆய்வுகள் தமிழில் பெண் எழுத்து தொடங்கிய வரலாற்றைக் காட்டும் முக்கியமான ஆவணப்பதிவுகள்.

சமூகப் பணிகள்

SPARROW (Sound and Picture Archives for Research on Women)[3] என்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர். அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு பெண்களின் ஒலிப்பதிவுகள், வாய்மொழி வரலாறுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.

திரைப்படங்கள்

  • 'தங்கராஜ் எங்கே' சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
  • 'முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையை திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

விருதுகள்

  • 2008 க்கான கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது
  • 2021-க்கான சாகித்ய அகாடெமி விருது(சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்புக்காக).

இலக்கிய இடம்

அம்பையை இந்திய இலக்கியத்தில் வங்காளப் படைப்பாளியான மகாஸ்வேதா தேவியுடன் ஒப்பிட முடியும். சமூகக்கோபமும் தனிப்பட்ட உணர்வுகளும் இணைந்து கலையாகும்போது சற்றே தூக்கலான குரல் இக்கதைகளில் உருவாகிறது "அம்பையின் சிறுகதைகளை பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம். வாழ்வின்மீது கவியும் துன்பங்களை தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம். நுட்பமும் கலை அழகும் கொண்டவர் என்றாலும் வாழ்வு பற்றிய இவரது அறிவுப்பூர்வமான புரிதல்கள் அனுபவங்களை வழிநடத்துவதில் கதைகளின் உணர்வு நிலைகள் பாதிக்கப்படுகின்றன" என்று சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார்.

வெகுஜனப் பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன என்று விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார் *

அம்பை7

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அம்மா ஒரு கொலை செய்தாள், கறுப்பு குதிரை சதுக்கம், ஆகிய சிறுகதைகளை தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில்[4] விமர்சகர் ஜெயமோகன் சேர்க்கிறார். விமர்சகர் எஸ். ராமகிருஷ்ணன் அம்மா ஒரு கொலை செய்தாள், காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைகளை தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்[5] பட்டியலில் சேர்க்கிறார்.

பெண்கல்வி, பெண் விடுதலைக்கான குரல்கள் தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலம் முதலே இருந்து வருகின்றன. வை.மு.கோதைநாயகி அம்மாள் முதல் தொடர்ச்சியாக பெண் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களில் ஆர்.சூடாமணி முக்கியமானவர். அம்பை, ஆர்.சூடாமணியை வாழ்க்கை குறித்தும் இலக்கியம் குறித்தும் திறந்த மனதுடன் உரையாடும் நல்ல தோழியாக கருதுபவர். (மனதுக்கினியவள், அம்பை)[6]. ஆனால் பெண்ணியக் கொள்கைகள் பற்றிய புரிதலுடன், உலகளாவிய வரலாற்று அணுகுமுறையுடன் பெண்விடுதலை பற்றி தமிழில் பேசியவர் அம்பை. களச்செயல்பாட்டளராகவும், பெண்விடுதலைக்காகப் பணியாற்றியவர். அவருடைய படைப்புகளில் பெண்மைய நோக்கு ஒரு முன்சட்டகமாக அமைந்து கலைக்குறைபாட்டை உருவாக்குகிறது என்னும் விமர்சனம் விமர்சகர்களிடம் இருந்தாலும் அவருடைய படைப்புகள் ஆழமான உரையாடலை உருவாக்குபவை, அறிவார்ந்த நெருக்கடிகளை அளிப்பவை என்பதனால் அம்பை தமிழின் முக்கியமான முன்னோடி இலக்கியவாதியாகக் கருதப்படுகிறார்.

அம்பை தன் பார்வையை இவ்வாறாக முன்வைக்கிறார் "என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ’உண்மைகளை’ பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த ’உண்மை’யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம்." (இயல்விருது ஏற்புவிழா[7])

படைப்புகள்

அம்பை முழுத்தொகுதி
நாவல்கள்
  • அந்திமாலை (1966)
சிறுகதைத் தொகுப்புகள்
  • சிறகுகள் முறியும் (1976)
  • அம்மா ஒரு கொலை செய்தாள்
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988)
  • காட்டில் ஒரு மான் (2000)
  • சக்கர நாற்காலி
  • ஸஞ்சாரி
  • வற்றும் ஏரியின் மீன்கள் (2007)
  • ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்-சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள்
  • ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
  • சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சாகித்ய அகாடெமி விருது)
சிறார் நூல்கள்
  • நந்திமலைச்சாரலிலே (1960)
தொகுப்புகள்
  • பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு)
  • சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு)
  • செல்லம்மாள்-நினைவுக் குறிப்புகள் 1993
ஆய்வு நூல்கள்
  • உடலெனும் வெளி-பெண்ணும் மொழியும் வெளிப்பாடும்
  • The Face behind the Mask: Women in Tamil Literature
  • Seven Seas & Seven Mountains series: (2 volumes)
  • Volume 1: The Singer and the Song – Conversations with Women Musicians
  • Volume 2: Mirrors and Gestures – Conversations with Women Dancers (ed.)
  • The Unhurried City – Writings on Chennai.
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • A Purple Sea (லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்)
  • A Deer In the Forest (லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்)
  • Fish in a Dwindling Lake (லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்)
  • A Night with A Black Spider Stories (Aniruddhan Vasudevan)
  • A Meeting on the Andheri Overbridge.
மொழியாக்க படைப்புகள்
  • ஸைபீரியப் பனியில் நடனக் காலனியுடன்-ஸான்ட்ரா கால்னியடே
  • அமைதியின் நறுமணம்- இரோம் ஷர்மிளா

உசாத்துணை

குறிப்புகள்


✅Finalised Page