under review

அனந்தமங்கலம் குன்று

From Tamil Wiki
Revision as of 12:05, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

To read the article in English: Ananthamangalam Hills. ‎

அனந்தமங்கலம் பாறைச் சிற்பக் கோயில்

அனந்தமங்கலம் (பொ.யு. 10-ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) பாறைச் சிற்பக் கோயில். சமண தீர்த்தங்கரர்கள் சிற்பமும், முதல் பராந்தக சோழனது சாசனம் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் காணப்படுகிறது. சிற்பத்தொகுதிகளடங்கிய இப்பாறை ஜினகிரிபள்ளி எனப்பெயர் கொண்டிருந்ததற்கான சான்றுகள் காணப்படுகிறது.

இடம்

திண்டிவனத்திலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் வடக்கிலும், ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள சிற்றூர் அனந்தமங்கலம். இவ்வூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிறிய அளவிலான மலை காணப்படுகிறது.

அமைப்பு

10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் காணப்படும் பாறையின் அடிப்பகுதியில் சிறிய குகைத்தளம் ஒன்று உள்ளது. இதற்கு முன்பாகவுள்ள பாறைப் பகுதியில் தூண்கள் நிறுவுவதற்கேற்ற வகையில் துவாரங்கள் வரிசையாகக் காணப்படுகின்றன. குகைத்தளத்தை ஒட்டி முன் பகுதியில் பந்தல் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு துறவியர் இந்த குகைத் தளத்தில் அமர்ந்திருந்து அறவுரை பகர்ந்திருக்க வேண்டும். இந்த குகைத் தளம் துறவியர் உறைவதற்கு ஏற்றதாகவுள்ள குகைப் பள்ளியில்லை எனினும், இங்குள்ள கல்வெட்டொன்று சிற்பங்களையும், குகைத்தளத்தினையும் சேர்த்து ஜினகிரி பள்ளி என அழைக்கிறது. ஆனால் இக்குகைத்தளம் மிகவும் சிறியதாகவும், ஓரிரு துறவியர் உட்கார்ந்திருப்பதற்கு மட்டும் ஏற்றவையாகவும் இருப்பதால், இதனைப் பாறைச் சிற்பக் கோயில் என்று வகைப் படுத்தலாம்.

சிற்பங்கள்

அனந்தநாதர் மற்றும் யஷி (நன்றி பத்மராஜ்)

இங்குள்ள இரண்டு பாறைகளில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள பாறையில் அம்பிகா யக்ஷி, மூன்று தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன. முதலாவது சிற்பம் நேமிநாதரின் யஷியாகிய அம்பிகா சிங்கத்தின் மீது ஒயிலாக நின்று இடது காலை நன்றாக ஊன்றியும், வலது காலைச் சிறிது மடக்கிய நிலையிலும் வைத்து ஒருபுறம் சாய்ந்து காணப்படுகிறாள். இவளது வலதுகை அருகில் நிற்கும் கமுக மரத்தினைத் தொட்டவாறும், இடதுகை பணிப்பெண்ணின் தலையைத் தொட்ட நிலையிலும் உள்ளன. இத்தேவியின் வலது புறத்தில் இவளது மைந்தர் இருவரும் சிறுவர்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றனர். யக்ஷியின் தோள்களுக்கு இணையாக இரு சாமரங்களும் வடிக்கப் பெற்றிருக்கின்றன. அம்பிகாவின் சிற்பத்தில் கரண்ட மகுடம், கழுத்தணிகள், கேயூரங்கள், கை வளைகள், மேகலை முதலிய அணிகலன்கள் உள்ளன.

இப்பாறையில் நடுநாயகமாக பதினான்காவது தீர்த்தங்கரராகிய அனந்தநாதர் இருக்கிறார். இத்தீர்த்தங்கரரது பெயரடிப்படையில் தான் இந்த ஊருக்கு அனந்த மங்கலம் எனும் ஏற்படலாயிற்று என்றும் கூறுவர். ஆனால் இதை இவ்வூரிலுள்ள அழிந்த நிலையிலிருக்கும் சிவன் கோயிலில் காணப் பெறும் சில சாசனங்கள் இத்தலத்தினை அரங்கமங்கலம் எனக் குறிப்பிடுகின்றன.

சற்று உயரமான பீடத்தில் தியான நிலையிலிருக்கும் இத்தேவரின் தலையைச் சுற்றி அரை வட்ட வடிவப் பிரபையும் அதற்கு மேல் முக்குடையும் வடிக்கப்பட்டிருக்கின்றன. ஆசனத்தை ஒட்டி இருபுறமும் இரு சிங்கங்கள் முன்காலைத் தூக்கியவாறுள்ளன. இவற்றிற்கு மேலாக மகரங்களின் தலைப்பகுதியும் செதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் பகுதியில் அனந்தநாதரின் இருபுறமும் இரு சாமரம் வீசுவோர் சிற்பங்களும் இரண்டு கந்தர்வர் சிற்பங்களும் புன்புடைப்புச் சிற்பங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. பிற சிற்பங்களை விட அனந்தநாதர் சிற்பம் சற்றுப் பெரியதாகவும் சிங்கங்கள், மகரங்கள் சாமரம் வீசுவோர் கந்தர்வர் முதலிய சிற்றுருவச் சிலைகளையும் தொண்டு தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இதனால் பிறரைக்காட்டிலும் இவருக்கு இத்தலத்தில் முதன்மை அளிக்கப்பட்டிருக்கிறதென்பது தெரியவருகிறது.

அனந்தநாதரின் இடது புறத்தில் நேமிநாதரும், பார்சுவநாதரும் காணப்படுகின்றனர். தாமரை மலர் மீது நின்றவாறுள்ள நேமிநாதரின் தலையைச் சுற்றி அரைவட்ட பிரபையும், அதற்கு மேலாக முக்குடையும் உள்ளன. தலையின் இருமருங்கிலும் இரண்டு சாமரைகளைத் தனியாகக் காணலாம். பன்னாக நீழலில் தவம் புரியும் இவரின் பாதங்கள் பங்கய மலர்ப்பீடத்தில் உறுதியாக ஊன்றப்பட்டிருக்கின்றன. படம் விரித்த நிலையிலிருக்கும் பாம்பின் உடல் தீர்த்தங்கரரது கால்வரையிலும் வளைந்து செல்கிறது. இங்குள்ள தீர்த்தங்கரர் சிற்பங்களுக்கடியில் இலாஞ்சனைகள் எவையும் காட்டப்படவில்லை.

பார்சுவநாதர்

வடக்கு நோக்கி அமைந்துள்ள சிறிய பாறையில் தனியாக பார்சுவநாத தீர்த்தங்கரர் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. தாமரை மலராலாகிய பீடத்தில் நின்றவாறு பார்சுவநாதர் சிற்பம் உள்ளது. இவரது தலைக்கு மேற்பகுதியில் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையிலுள்ளது. பாம்பின் உடல் பகுதி வளைந்து வளைந்து தீர்த்தங்கரரின் கால்வரையிலும் செல்கிறது. பார்சுவதேவரின் வலதுபுறம் பத்மாவதி யக்ஷி இடது கையை மேலே தூக்கி வழிபடுவதாகவும், இடது புறம் தரணேந்திரன் மண்டியிட்டு வணங்குவதாகவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டு

இங்குள்ள பாறையில் முதல் பராந்தக சோழனது முப்பத்தைந்தாவது ஆட்சியாண்டில் (பொ.யு. 944) பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது. இது வினையபாசுர குரவடிகள் என்னும் அறவோரின் சீடராகிய வர்த்தமானப்பெரியடிகள் என்பவர் இங்குள்ள ஜினகிரிபள்ளியில் தினமும் ஒரு அடியவருக்கு உணவு அளிக்கும் வகையில் ஐந்து கழஞ்சு பொன்னைத் தானமாகக் கொடுத்த செய்தியினைக் கொண்டுள்ளது. இதிலிருந்து அனந்தமங்கலத்திலுள்ள சிற்பத்தொகுதிகளடங்கிய பாறை ஜினகிரிபள்ளி எனப்பெயர் கொண்டிருந்ததை அறியலாம். இதனை வினையபாசுர குரவடிகளோ அல்லது அவரது சீடராகிய வர்த்தமானப்பெரிய அடிகளோ கண்காணித்து வந்திருக்கலாம்.

வழிபாடு

இன்றும் அருகிலுள்ள சமண ஊர்களிலுள்ளவர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் முக்கிய நாட்களில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page