under review

அகிலன்

From Tamil Wiki
Revision as of 15:35, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)
அகிலன்
அகிலன்2
அகிலன்
அகிலன் மு.கருணாநிதி
அகிலன் இந்திரா காந்தி
அகிலன்
அகிலன்,நா.பார்த்தசாரதி, க.நா.சு
அகிலன் வானொலியில்
அகிலன் ஜெயகாந்தன் ஒரு வாசகருடன்

அகிலன் (1922-1988 ) பி.வி.அகிலாண்டம். தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நாவலுக்காக ஞானபீடப் பரிசு பெற்றவர். பொதுவாசிப்புக்குரிய புகழ்பெற்ற நாவல்களை எழுதியிருக்கிறார். இந்திய தேசியவாத அரசியல் சார்புகொண்டிருந்தார்.

பிறப்பு, கல்வி

அகிலன் இளமையில்

அகிலனின் இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். ஜூன் 27, 1922- ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்களூரில் வைத்திலிங்கம்- அமிர்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். அகிலனின் தந்தையும் முன்னோர்களும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வனத்துறை, வரிவசூல் துறை, கலால் துறை ஆகியவற்றில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள். பெருங்களூர் கிராமத்து சிவன் கோயிலின் பரம்பரை கணக்குப்பிள்ளைகள்.

அகிலனின் உடன்பிறந்தவர் ஒரு தங்கை. பெருங்களூரிலேயே திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றார். அகிலனுக்கு பத்து வயது இருக்கையில் குடும்பச்சிக்கல்களால் வழக்குகள் உருவாகி தந்தை பதவி இழந்தார். குடும்பத்துடன் கரூருக்குச் சென்று அன்னையின் உடலுழைப்பால் வாழநேர்ந்தது. செல்வநிலையில் இருந்து கொடிய வறுமையை நோக்கி அகிலனின் இளமைக்காலம் சென்றது.

அகிலனின் ஆரம்பக் கல்வி கரூரில் தொடங்கியது. ஆறாம் வகுப்பிலிருந்து தான் கல்வியை புதுக்கோட்டை மகாராஜா கிளைக் கல்லூரியிலும், உயர் நிலைக் கல்வியை மகாராஜா கல்லூரியிலும் தொடர்ந்தார். அமிர்தலிங்கம் அகிலன் பள்ளியிறுதி முடிப்பதற்குள் மறைந்தார். தந்தையின் நினைவுகள் அகிலன் எழுதிய கொள்ளைக்காரன் என்னும் கதையில் உள்ளன.

தனிவாழ்க்கை

அகிலன் எம்ஜிஆர்

தன் தாயையும் தங்கையையும் பேணும்பொருட்டு அகிலன் படிப்பை நிறுத்திவிட்டு பெருங்களுர் கிராமத்திலேயே பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் எடுக்கும் வேலையில் சேர்ந்தார். அந்த வேலையை பின்பு புதுக்கோட்டை பொன்னமராவதி, கீரனூர் போன்ற ஊர்களிலும் தற்காலிகமாக செய்துவந்தார். 1944-ல் ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்.எம்.எஸ்)ஸில் பணிக்குச் சேர்ந்தார். பயிற்சிக்குப்பின் தென்காசியில் பணியாற்றினார். தென்காசியில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தபின் திருநெல்வேலிக்கும் பிறகு திருச்சிக்கும் மாற்றலானார்.

ஏப்ரல் 1944-ல் மாதம் அகிலன் தன் ஒன்றுவிட்ட மாமனின் மகளான பட்டம்மாளை கரூரை அடுத்த தான்தோன்றி மலை என்னும் ஊரில் மணம்புரிந்துகொண்டார்.

அகில்ன் மேடையில்

திருச்சியில் சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆர்.எம்.எஸ்.ஸில் வேலை பார்த்த அகிலன் முழுநேர இலக்கியவாதியாக வாழும் பொருட்டு 1958-ல் அவ்வேலையை துறந்தார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தார். அவருடைய பாவை விளக்கு எனும் நாவல் அப்போது கல்கியில் தொடராக வெளிவந்துகொண்டிருந்தது. அதை திரைப்பட தயாரிப்பாளர் ஜூபிட்டர் கே.சோமு படமாக்க விரும்பியதனால் திரைப்படத்தை தொழிலாகச் செய்யும்பொருட்டு சென்னையில் குடியேறினார். 1966 வரை எழுத்தாளராகவே வாழ்ந்தார்.

பின்னர் கி. வா. ஜகந்நாதனின் பரிந்துரையால் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து சொற்பொழிவுத் தயாரிப்பாளராக பணியாற்றி 1982-ல் ஓய்வு பெற்றார். அகிலனின் மகன் அகிலன் கண்ணன் ஓர் எழுத்தாளர். அகிலனின் நூல்களை பதிப்பித்த தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணனால் நடத்தப்படுகிறது.

அரசியல் வாழ்க்கை

அகிலன் காமராஜுடன்

அகிலன் பள்ளிநாட்களிலேயே இந்திய விடுதலைப்போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். 'சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார். கரூருக்கு அருகில் திருஆநிலையூர் என்னும் சிற்றூரில் கள்ளுக்கடை மறியலில் அகிலன் பங்கெடுத்தார். கரூரில் காந்தியின் உரையை கேட்டதும் புதுக்கோட்டை ரயில்நிலையத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலைச் சந்தித்து பேசியதும் அவரிடம் தேசிய அரசியல் ஈடுபாட்டை வளர்த்தன. இறுதிவரை இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவாளராக நீடித்தார்.

இலக்கியவாழ்க்கை

தொடக்கம்

அகிலன் 19 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளை எழுதியிருக்கிறார்.

1938-ல் பள்ளியின் காலாண்டு இதழுக்காக 'அவன் ஏழை’ என்ற கதையை முதன்முதலாக எழுதினார். இதை அகிலன் தன் 'எழுத்தும் வாழ்க்கையும் ' என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பள்ளி இதழில் அக்கதையை ஆசிரியர் ’மிடியால் மடிதல்’ என பெயர் மாற்றி வெளியிட்டார். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த இந்திரா, தாய்நாடு, அணிகலம், இன்பம் போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக கதைகள் எழுதினார். பி.வி.அகிலாண்டம் என்ற பெயரில் அக்கதைகள் வெளிவந்தன. இன்பம் இதழில் அகிலன் உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தாலும் அதன்மீது காவல்துறை கண்காணிப்பு இருந்தமையால் குடும்பச்சூழல் கருதி அதிலிருந்து விலகினார்.

1940-ல் அகிலன் எழுதிய 'சாவிலே வாழ்வு' என்னும் சிறுகதை இந்திரா இதழில் பரிசுபெற்றது. அகிலன் எழுதி பெரிய இதழில் வெளிவந்த முதல் சிறுகதை 1942-ல் கல்கியில் வெளிவந்த 'சரஸியின் ஜாதகம்’. அக்கதையை கல்கி வெகுவாக மாற்றி வெளியிட்டது. அதனால் அகிலன் அவ்விதழ் அனுப்பிய சன்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நெடுங்காலம் கல்கி இதழில் எழுதவுமில்லை.

1942-ல் 'காசு மரம்’ என்ற சிறுகதை, இலக்கியப் பத்திரிகையான கலைமகளில் பிரசுரமாகியது. இதுவே அகிலன் என்ற பெயரில் அவர் எழுதிய முதல் கதை. பின்னர் தொடர்ந்து கலைமகளில் எழுதினார்.

நாவல்கள்

1944-ல் அகிலனின் முதல் நாவல் 'மங்கிய நிலவு' நேரடியாகப் புத்தகமாக வெளிவந்தது. பின்னர் 1949-ல் 'இன்ப நினைவு' எனும் தலைப்பில் சில மாற்றங்களுடன் வெளிவந்தது.

அகிலன், தொடர்கதை அறிவிப்பு

1946-ல் அகிலன் எழுதிய பெண் எனும் நாவல் கலைமகள் இதழ் நடத்திய முதலாவது நாராயணசாமி ஐயர் நாவல்போட்டியில் பரிசு பெற்றது. கலைமகளில் தொடராக வெளிவந்த அந்நாவல் 1947-ல் நூலாக வெளிவந்தது. அந்நாவல் அகிலனை பொதுவாசகர் நடுவே புகழ்பெற்ற எழுத்தாளர் ஆக்கியது. கலைமகள் இதழில் தொடராக வெளிவந்த அகிலனின் நெஞ்சின் அலைகள் இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூர், மலாயா பர்மாவை கைப்பற்றியதன் பின்னணியில் அமைந்தது. அந்நாவல் அவரை அன்றைய முன்னணி எழுத்தாளராக நிலைநிறுத்தியது. அகிலனின் நாவல்களில் வேங்கையின் மைந்தன், கயல்விழி ஆகிய வரலாற்று புனைவுகளும் சித்திரப்பாவை, பாவை விளக்கு ஆகிய சமூகநாவல்களும் பெரும்புகழ் பெற்றவை.

அகிலன் வாழ்க்கை வரலாறு

அகிலனின் பொன்மலர் என்னும் நாவல் ராணி முத்து முதல் வெளியீடாக வந்து ஐம்பதாயிரம் பிரதிகள் விற்று ஓர் அலையை உருவாக்கியது. கலைமகள் இதழில் ஜனவரி 1982-ல் அகிலன் தன் இறுதிப்படைப்பான 'வானமா பூமியா' எனும் நாவலை எழுதத் தொடங்கினார். அந்நாவல் முடிவடைவதற்குள் மறைந்தார். அவர் மகன் அகிலன் கண்ணன் அந்நாவலை எழுதி முடித்தார்.

அகிலன் 19 நாவல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் சமூகநாவல்கள் 16, வரலாற்று நாவல்கள் 3

சிறுகதைகள்

அகிலனின் முதல் சிறுகதைத் தொகுதி சக்திவேல் 1946 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1941 முதல் 1945 வரை அவர் எழுதிய கதைகள் அவை. அகிலன் 17 சிறுகதை தொகுதிகளிலாக 200 சிறுகதைகள் எழுதியிருக்கிறார்

பயண இலக்கியம்

அகிலன் இந்திய சோவியத் நட்புறவுக்கழகத்தில் பணியாற்றினார். அரசு அழைப்பின் பேரில் 1973-ல் முதல்முறையாக சோவியத் ரஷ்யா சென்றார். மூன்று முறை அவர் ரஷ்யா சென்றுள்ளார். 'சோவியத் நாட்டில்’, 'நான் கண்ட ரஷ்யா’ ஆகிய நூல்களை எழுதினார். அவை அன்றைய சோவியத் ரஷ்யாவின் அரசுமுறையான நிலைபாட்டுக்கு இணங்க கருத்துக்களையும் காட்சிகளையும் முன்வைப்பவை.

அகிலன்

மலேசியாவில் பயணம் செய்து 'பால்மரக்காட்டினிலே’ என்னும் நாவலை எழுதினார். இது மலேயாவின் ரப்பர்த்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை துயர்களைச் சொல்லும் நாவல்.

சிறுவர் இலக்கியம்

அகிலன் எழுதிய 'தங்க நகரம்', 'கண்ணான கண்ணன்', 'நல்ல பையன்' ஆகிய சிறுவர் இலக்கியங்கள் புகழ்பெற்றிருந்தன.

தன்வரலாறு

அகிலன் தன் வாழ்க்கை அனுபவங்களை' எழுத்தும் வாழ்க்கையும்' என்னும் தலைப்பில் 1978-ல் நூலாக எழுதினார்.

அமைப்புப்பணிகள்

அகிலன் ரயில்வே தபால் நிறுவன ஊழியராக திருச்சியில் பணியாற்றியபோது திருச்சி வானொலியில் வேலை பார்த்து வந்த எழுத்தாளர் சுகி சுப்ரமணியம் மற்றும் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், ஏ.எஸ். ராகவன் போன்றோரிருடன் இணைந்து திருச்சி எழுத்தாளர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்

அகிலன் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்களுக்கும் அணுக்கமானவராக இருந்தார். சாகித்ய அக்காதமி தேர்வுக்குழு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் தேர்வுக்குழு ஆகியவற்றில் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

திரைப்படங்கள்

அகிலன் ப.நீலகண்டன் இயக்கிய ஒரு படத்தில் மலையாள மூலக்கதையை தமிழாக்கம் செய்தார். பட்டினத்தார் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதினார். அகிலன் தன் 'சினேகிதி' நாவலை தழுவி எடுக்கப்பட்டது என ஒரு படம் மீது வழக்கு தொடுத்தார், அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

திரைப்படமான அகிலனின் நாவல்கள் மூன்று.

  • 1960 பாவை விளக்கு
  • 1963 வாழ்வு எங்கே(குலமகள் ராதை)
  • 1978 கயல்விழி (மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்)

விருதுகள்

  • 1946 கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது (பெண்)
  • 1963 சாகித்ய அக்காதமி விருது (வேங்கையின் மைந்தன்)
  • 1963 தமிழக அரசின் சிறுவர் இலக்கிய விருது (கண்ணான கண்ணன்)
  • 1965 தமிழ் வளர்ச்சித்துறை விருது (கயல்விழி)
  • 1972 தமிழ் வளர்ச்சித்துறை விருது (எரிமலை, சிறுகதைத் தொகுதி)
  • 1973 ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது (எங்கே போகிறோம்?)
  • 1975 ஞானபீட விருது (சித்திரப்பாவை)

மறைவு

  • அகிலன் 66-வது வயதில் 1988-ஆம் வருடம் காலமானார்.

நினைவுகள் வாழ்க்கை வரலாறுகள்

அகிலன் வாழ்க்கை வரலாறு .கி.வேங்கடராமன். இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை

அகிலன் நினைவு நாவல் போட்டி 1990 முதல் ஐந்தாண்டுகள் நடத்தப்பட்டது. அகிலனின் மகன் அகிலன் கண்ணன் அதை நடத்தினார்.

விவாதங்கள்

அகிலனுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டபோது அது தமிழ் நவீன இலக்கியச் சூழலில் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்டது. எந்தவகையிலும் இலக்கியத்தகுதி இல்லாத வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் என்று அகிலன் விமர்சிக்கப்பட்டார். அதற்கு முன்னரும் பின்னரும் அகிலன் எந்த இலக்கியப் பட்டியலிலும் நவீன இலக்கிய விமர்சகர்களால் சேர்க்கப்பட்டதில்லை. சுந்தர ராமசாமி எழுதிய 'அகிலனுக்கு ஞானபீடம்-போலி முகங்கள்’ (1975) என்னும் கட்டுரை ஞானபீடப்பரிசையும் அதற்கு அகிலனை பரிந்துரைத்தவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்கிறது. "அகிலனின் எழுத்து புகைமூட்டமான காதல்கதைக்கு போலியான ஓர் இலட்சியவாத பாவனையை அளிப்பது" என்று சுந்தர ராமசாமி எழுதினார். "எந்த சுரண்டலும் அதற்குரிய முத்திரைகளுடன்தான் வரும்" என்றார்.

இலக்கிய இடம்

இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தின் இறுதியில் இலட்சியவாத அலை உச்சத்தில் இருந்தபோது இரண்டுவகை எழுத்தாளர்கள் உருவானார்கள். அந்த இலட்சியவாதத்தை வாழ்க்கையின் எல்லா பக்கங்களுக்கும் விரித்தெடுத்து எழுதியவர்கள், இலட்சியவாதத்தின் கனவைக் கடந்து யதார்த்தத்தை முன்வைத்தவர்கள். அகிலன் முதல்வகை எழுத்தாளர். ஆண்பெண் உறவு, குடும்பம், சமூகச்சூழல் அனைத்திலுமே இலட்சியக் கனவை உள்ளடக்கியவை அகிலனின் படைப்புகள்.

அகிலனின் படைப்புகள் குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த அல்லது வாழ்க்கைச்சூழல் சார்ந்த தனித்தன்மைகள் ஏதுமில்லாமல் பொதுவான களத்தில் நிகழ்பவை. ஆசிரியரின் எண்ணத்திற்கு ஏற்ப பேசிப்புழங்கும் கதைமாந்தர்களால் ஆனவை. பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளையே அகிலன் எழுதியிருக்கிறார். பொதுவாசகர்களுக்குரிய காதல், உறவுச்சிக்கல் ஆகியவற்றையே பெரும்பாலும் விவாதிப்பவை. அகிலன் சித்திரப்பாவை போன்ற நாவல்களில் அன்றைய பாலியல் நெறிசார்ந்த எல்லையை சற்று மீறியிருக்கிறார்.

க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் எம். வேதசகாயகுமார், ஜெயமோகன் போன்ற நான்கு தலைமுறை இலக்கிய விமர்சகர்களால் அகிலன் பொதுவாசிப்புக்குரிய படைப்புகளை எழுதியவராக மட்டுமே மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

நாவல்
  • மங்கியநிலவு (இன்பநினைவு)
  • பெண்
  • துணைவி
  • சினேகிதி
  • சந்திப்பு
  • நெஞ்சின் அலைகள்
  • செல்வம்
  • வாழ்வு எங்கே?
  • பாவை விளக்கு
  • வேங்கையின் மைந்தன்
  • புதுவெள்ளம்
  • பொன்மலர்
  • கயல்விழி
  • வெற்றித்திருநகர்
  • சித்திரப்பாவை
  • கொள்ளைக்காரன்
  • எங்கே போகிறோம்?
  • பால்மரக் காட்டினிலே
  • வானமா பூமியா?
பயணநூல்கள்
  • மலேசியா சிங்கப்பூரில்
  • நான்கண்ட ரஷ்யா
  • சோவியத் நாட்டில்
நாடகம்
  • வாழ்வில் இன்பம்
சிறுவர் இலக்கியம்
  • தங்கநகரம்
  • சிவப்பு விளக்கு
  • கண்ணான கண்ணன்
  • நல்ல பையன்
கட்டுரை
  • கலையும் வயிறும்
  • இளைஞருக்கு
  • கதைக்கலை
  • எழுத்தும் வாழ்க்கையும்
  • வெற்றியின் ரகசியங்கள்
  • புதிய விழிப்பு
  • நாடு நாம் தலைவர்கள் கட்டுரைகள்
  • வெற்றியின் ரகசியங்கள்
சிறுகதை
  • சக்திவேல்
  • நிலவினிலே
  • ஆண்-பெண்
  • அமராவதிக்கரையில்
  • செங்கரும்பு
  • வழி பிறந்தது
  • மின்னுவதெல்லாம்
  • குழந்தை சிரித்தது
  • சகோதரர் அன்றோ
  • நெல்லூர் அரிசி
  • ஒருவேளைச்சோறு
  • எரிமலை
  • சத்திய ஆவேசம்
  • ஊர்வலம்
  • பசியும் ருசியும்
  • வேலியும் பயிரும்
  • விடுதலை
  • அகிலன் சிறுகதைகள்
மொழியாக்கம்
  • தாகம்
  • எழுதாத கதை
  • முழுநிலவு
  • மாபசான் சிறுகதைகள்.

உசாத்துணை



✅Finalised Page