under review

அம்மானை

From Tamil Wiki
Revision as of 16:54, 25 February 2023 by Logamadevi (talk | contribs)
vallamai.com

அம்மானை பண்டைத் தமிழ் மகளிர் விளையாட்டுகளின் அடிப்படையில் அமைந்த சிற்றிலக்கியம். பெண்கள் அம்மானை ஆடுகையில் பாடப்படுபவை அம்மானைப் பாடல்கள். பெண்களின் நுண்ணறிவு, சமயோசிதம்,வாக்கு வன்மையையும், பாடல்களைப் புனைந்து, இசையோடு பாடும் ஆற்றலையும், கண், கைகள், ஒத்திசையையும் வளர்க்கும் விளையாட்டு. அம்மானைப் பாடல்கள் இலக்கிய வடிவம் பெற்று கலம்பகத்தின் உறுப்பாக அமைகின்றன. பெண் குழந்தைகளைப் பாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் 'அம்மானைப்பருவம்' இடம்பெறுகிறது.

அம்மானை விளையாட்டு

அம்மனைக்காய் நன்றி: முதுசொம்

அம்மானை இரண்டு அல்லது மூன்று பெண்கள்  அம்மானைக் காய்கள் எனப்படும் மரத்தால் ஆக்கி வண்ணம் இடப்பட்ட சிறு உருண்டைகளை மேலே எறிந்து அவை கீழே விழுங்கால் அவற்றில் ஒன்றைக் கழித்து அல்லது கூட்டிப் பிடிப்பதாக அமைந்த விளையாட்டு. மரக்காய்களுக்குப் பதிலாகக் கற்களையோ, மணிகளையோ பயன்படுத்துவதும் உண்டு.

இன்றும் மூன்று கல்  , ஐந்து கல் (அஞ்சாம்கல்), ஏழு கற்கள்(ஏழாம்கல்) என்று கற்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து ,  பெண்கள் ஆடும் வழக்கம் உள்ளது. பழங்காலத்தில் இப்படி விளையாடும்போது புதிர் அல்லது விடுகதை போன்ற கேள்வி பதில் முறையில் பாடல்களைப்  பாடி விளையாடியதால்  இந்தப் பாடல் முறை அம்மானை வரி என்று அழைக்கப்பட்டது. இந்த மக்கள் இலக்கியத்தைப் பின்பற்றி புலவர்கள் இலக்கியத்தில் அம்மானைப் பாடல்களை அமைத்தனர்.

முதல் பெண் ஒரு இறைவனையோ, பாட்டுடைத்தலைவனையோ பற்றிய ஒரு செய்தியைப்  பாட்டாகக்  கூறிவிட்டு,    கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று முடிப்பார்.

இரண்டாவது பெண் ,  முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைப் பாடலாகச் சொல்லி, ‘அம்மானை’ என்று முடித்து கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள்.

மூன்றாவது பெண் அந்தக் கேள்விக்கு பாடல் மூலம் பதில் தந்து, ‘அம்மானை’ என்று சொல்லி கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப் பாட்டை முடிப்பாள்.

தமிழ் இலக்கியத்தில் அம்மானை

தமிழ்நாட்டில் சைவ, வைணவ சமயங்கள் வேகம் பெற்று வளர்ந்து உயர்ந்து உன்னத நிலையை அடைந்தபோது மாந்தர்களின் வாழ்வில்  பிறப்பு, இறப்பு, ஆடல், பாடல், விளையாடல், கல்வி, கேள்வி என்ற எல்லா நிகழ்வுகளிலும் இறைவனின் புகழ் ஒரு அங்கமாகவே இசைக்கப்பட்டது.  அங்கதமாக, விடுகதையாக, புராணங்களாக, பக்தி இலக்கியங்களாக இவை தழைத்து வளர்ந்து தனிச் சிறப்புப் பெற்றன. சிறப்பாக, மகளிர் தம்முடைய தினசரி நடவடிக்கைகளான நீராடல், விளையாடுதல் போன்ற தம்முடைய தினசரி நடவடிக்கைகளிலும் இறைவன் தொடர்பான பாடல்களைப் பலவிதமாகப் பாடும் வழக்கம் வந்தது.

சிலப்பதிகாரம்

தமிழில் முதன் முதலில் அம்மானைப் பாடல்கள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. வாழ்த்துக் காதையில் 'அம்மானை வரி' என்ற பகுதியில் கண்ணகி அம்மனை ஆடும் ஐந்து பாடல்கள் மனுநீதிச் சோழன், கரிகால் சோழன், சிபி மன்னன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகிய சோழ மன்னர்களில் புகழைப் பாடுபவை . இதன்காரணமாக இன்றும் அனேக கண்ணகி அம்மன் ஆலயங்களில் அம்மானைக்காய் ஒரு சடங்குப் பொருளாகக் காணப்படுகின்றது. இலங்கையில் கண்ணகி அம்மன் ஆலயங்களில் அம்மானைய்க்காய் குலுக்குதல் ஒரு புனித சடங்காக நடைபெறுகிறது.

வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த உரவோன்யார் அம்மானை?
ஓங்கரணங் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை;
சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை"

மிக்க நீரைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆட்சி செய்து  விண்ணவர் கோனாகிய இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்தவன் யார் சொல்? அம்மானை!

இந்திரனின் உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன், விண்ணில் அசைந்து கொண்டிருந்த மூன்று ஊர்களையும் அழித்த சோழ மன்னன் பாரடி, அம்மானை

மூன்றாமவள் முத்தாய்ப்பாகக் கூறுகிறாள்: “அவ்வாறாயின், நாம் அந்தச் சோழனின் புகார் நகரத்தின் பெருமையைப் பாடுவோம் அம்மானை!”

திருவாசகம்

அரசர்களையன்றி, இறைவன் மேல் பாடப்பட்ட முதல் அம்மானை மாணிக்கவாசகரின் 'திருவம்மானை'

கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
    திIட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
    காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
    தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி
    நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
    ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்

தோழி, மதில்சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமான் செய்த மாயங்களைக் கேட்டாயா?

காட்டவொண்ணாத உண்மைப் பொருள்கள் எல்லாவற்றையும் காட்டி, சிவமாகிய தன்னையே காட்டி, திருவடித்தாமரைகளைக் காட்டி, தன் அருளாகிய தேனைக் காட்டி

நாட்டிலுள்ளோர் நகைக்க நாம் மேன்மையாகிய வீட்டினை அடைய என்னைத் தான் அடிமைகொண்டு, ஆட்கொண்ட விதத்தை, அம்மானைப் பாட்டாகப் பாடுவோம்

குமரகுருபரர் (காசிக் கலம்பகம்)

கலைமதியின் கீற்றணிந்த காசியகிலேசர்
சிலைமதனைக் கண்ணழலால் செற்றனர்காண் அம்மானை
சிலைமதனைக் கண்ணழலால் செற்றனரேயாமாகில்
மலைமகட்கு பாகம் அருளுவதேன் அம்மானை
வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை

பிறைமதியின் கீற்றை அணிந்திருக்கும் காசி விஸ்வேசர் கரும்புவில்லைக் கொண்ட மன்மதனைத் தன் நெற்றிக் கண் நெருப்பால் எரித்தனர் கண்டாயோ, அம்மானை!

வில்லேந்திய மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தார் என்றால், மலைமகளான உமையவளுக்குத் தன் உடலில் ஒரு பாகத்தை எதற்காகக் கொடுத்தார்?

அடியே! இறைவர் காதல் மயக்கம் கொண்டு விட்டதனால் தமது உடம்பில் பாதியை மலைமகளுக்குத் தர மாட்டாரோ?

பிள்ளைத்தமிழில் அம்மானைப் பருவம்

பெண்பாற் பிள்ளைத்தமிழின் பருவங்களில் பெண் குழந்தைகள் கழங்கு(அம்மானை) ஆடுவதைக் காட்சிப்படுத்தும் பருவமான அம்மானைப் பருமும் ஒன்று. .

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தடாதகை தோழியரோடு அம்மானை ஆடும் காட்சி:

         தமரான நின்துணைச் சேடியரில் ஒருசிலர்
                            தடக்கையின் எடுத்தாடுநின்
         தரளஅம்மனைபிடித்து எதிர்வீசிவீசி இட
                            சாரிவல சாரிதிரியா
         நிமிராமுன் அம்மனையொர்ஆயிரம் எடுத்தெறிய
                            நிரைநிரைய வாய்க்ககனமேல்
             நிற்கின்றது அம்மைநீ பெற்ற அகிலாண்டமும்
                            நிரைத்துவைத் ததுகடுப்ப
         இமிரா வரிச்சுரும்பு ஆர்த்தெழப்பொழிலூடு
                            எழுந்தபைந் தாதுலகெலாம்
             இருள்செயச் செய்துநின்சேனாபராக மெனும்
                            ஏக்கமள காபுரிக்கும்
         அமரா வதிக்கும்செய் மதுராபுரித்தலைவி
                            அம்மானை ஆடியருளே
             ஆகம் கலந்தொருவர் பாகம்பகிர்ந்தபெண்
                            அம்மானை ஆடியருளே!

தடாதகை, தோழியருடன் அரண்மனை நந்தவனத்தில் அம்மானை ஆடிக்கொண்டிருக்கிறாள். தோழியர் அவள் வீசும் முத்தம்மானையைப் பிடித்துத் திரும்ப வீசி நிமிர்வதற்குள் மீனாட்சியோ ஓராயிரம் அம்மானைகளை எடுத்து வீசுகிறாள். அவை வரிசைப்பட வானில் அணிவகுத்து நிற்கின்றன அன்னையே! நீ பெற்றெடுத்த எல்லா அண்டங்களையும் எடுத்து வரிசையாக வானில் நிறுத்திவைத்து உலகத்தோருக்குக் காண்பிப்பது போல உள்ளது,’ என்கிறார். மீனாட்சி ‘விறுவிறு’வென்று அம்மானை ஆடியபோழ்தில் நந்தவனத்து மலர்களில் மதுவுண்ணும் வண்டுகள் அலைபட்டு, மகரந்தப் பொடி தூசியாகப் பரந்து உலகை இருளடையச் செய்கின்றது. அதனைக் கண்டு அமராவதியில் வாழும் தேவர்களும் கின்னரர்களும் அம்மையின் சேனை திரும்பவும் ஒரு போருக்குப் புறப்பட்டு விட்டதோ என்று கலங்குகிறார்கள். இவ்வாறு அவர்களைக் கலக்கம் கொள்ளச் செய்யும் மதுராபுரித் தலைவியே! அம்மானை ஆடியருளுக!

மற்றும் சில அம்மானை இலக்கியங்கள்

  • ‘மூவர் அம்மானை’ என்ற நூலில் (1861) பல அம்மானைப் பாடல்கள் காணப்படுகின்றன. இவை பெண்கள் அம்மானை ஆடுவதாகக் கருதியோ, அம்மானை ஆடுவதற்காகவோ புலவர்களால் இயற்றப்பட்டவையாக இருக்கலாம்.
  • இராமப்பையன் என்பவர் எழுதிய அம்மானைப் பாடல்களால்[1] நாயக்கர் வம்சத்தைப்பற்றித்   தெரிந்துகொள்ள முடிகிறது.
  • வீரமாமுனிவர் ‘கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை’ என்ற நூலை எழுதியுள்ளார்.
  • உமறுப்புலவர் மகன் கவிக்களஞ்சியப் புலவர்  சையத் மீராப் புலவர் காலிப் அலியைத் தலைவனாகக்கொண்டு ‘பரத்தியர் அம்மானை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
புகழேந்திப் புலவர் பாடிய அம்மானைகள்

தமிழி அதிகம் அம்மானை நூல்களை இயற்றியவர் பொ.யு. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் (ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல). இருபதுக்கும் மேற்பட்ட அம்மானை நூல்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. புகழேந்திப்புலவர் பேரில் உள்ள அம்மானை வரிசைப் பாடல்களில் கோவிலன் கதை காலத்தால் முற்பட்டது[2]. இது 3184 வரிகளைக் கொண்டது. 1894-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது . அவரது மற்ற அம்மானைகள் பெரும்பாலும் மகாபாரதத்தின் பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் ஒட்டியே அமைந்தன (அல்லி அரசாணி மாலை, சுபத்திரை மாலை, திரௌபதி குறம்). தேசிங்கு ராஜன் கதை, செஞ்சி குறம் போன்றவையும் அம்மானைப் பாடல்களாக அமைந்தவை.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page