under review

சொல்வளர்காடு (வெண்முரசு நாவலின் பகுதி - 11)

From Tamil Wiki
Revision as of 14:50, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
சொல்வளர்காடு ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 11)

சொல்வளர்காடு[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 11) பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்கிறது. நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு, பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையைக் கண்டடைவதுடனும் நிறைவுபெறுகிறது. பல்வேறு காடுகளில் அமைந்த, வெவ்வேறு அறுதி முடிவுகளை முன்வைக்கும் வேதக்கல்விக் குருகுலங்களின் பெருங்கூட்டமே 'சொல்வளர்காடு’.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 11-ஆம் பகுதியான 'சொல்வளர்காடு’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு செப்டம்பர் 2016-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் சொல்வளர்காட்டை அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

சொல்வளர்காட்டில் பாண்டவரின் வனவாசம், சூதாட்டத்திற்குப் பின்னர் அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை, இளைய யாதவரின் குருகுலக்கல்வியும் சூதாட்டத்தின் போது துவாரகையில் நடந்தவையும் என மாறி மாறி கதை நகர்த்தப்பட்டுள்ளது. இளைய யாதவரின் குருகுலக்கல்வி மற்றும் துவாரகை சார்ந்தவையும் அஸ்தினபுரி நிகழ்வுகள் சார்ந்தவையும் பிறரின் கண்ணோட்டத்தில் தொகுத்துச் சொல்லப்படுவதாக மாறி மாறி அமைக்கப்பட்டுள்ளன. பாண்டவரின் 'வனவாசம்’ ஒவ்வொரு காடாகச் சொற்களைத் தொகுத்துக்கொள்வதன் வழியாகவே நிகழ்கிறது.

யாதவர்களின் குடிப் பூசல், துவாரகை சார்ந்த நிகழ்வுகள், யாதவர்களை ஒன்றிணைக்க இளைய யாதவர் செய்யும் பெருங்கொலைகள், அதன் வழியாகப் பலராமர் இளைய யாதவரின் மீது கொள்ளும் அகப்பகை ஆகியவை துவாரகை சார்ந்த நிகழ்வுகளாகக் காட்டப்படுகின்றன.

சூதாட்டக் களம் அமைக்கப்படுதல், அதற்கு வருகை தரும் அரசர்கள், அதற்கான ஒருக்கங்கள், ஆகியவை விரிவாகப் பேசப்படுகின்றன. சூதாட்டத்தில் தருமர் தோற்பது, அதன் விளைவாக திரெளபதி அவை நடுவே அவமானப்படுத்தப்படுவது, அதிலிருந்து மீட்கப்படும் தருணம் ஆகியவற்றுடன் விதுரர் கணிகரைச் சந்திக்கும் சூழல். சகுனி சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய பகடைகளை எரித்துவிடுவது, கணிகர் விதுரரிடம் பாண்டவர்களை அஸ்தினபுரியின் தொழும்பர்களாக்காமல் இருப்பதற்கு மாற்றுத் தண்டனையாக 'வனவாசம்’ குறித்துப் பேசும் உரையாடல்கள், பிதாமகர் பீஷ்மர் சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய ஆயுதசாலையில் துரியோதனனைத் தண்டிப்பது, அஸ்தினபுரியைவிட்டுச் செல்லும் விதுரரின் மனவோட்டம் என பன்னிரு படைக்களம் சம்பவங்களின் கோர்வையாக அமைந்திருக்கிறது.

பாண்டவர்கள் நகர் நீங்கிய பின் அஸ்தினபுரி சார்ந்த நிகழ்வுகள் 'காலன்’ என்பவரின் வழியாக அவர் கண்டவற்றை, தனக்கு எதிர் நின்று உரையாடியவர்களின் உளவியல் சார்ந்த மெய்ப்பாடுகளோடும் அப்போது அங்கிருந்த புறச்சூழலோடும் கலந்தே பாண்டவர்களிடம் உரைப்பதாக நாவலில் காட்டப்படுகிறது. தருமனுக்கும் திரெளபதிக்குமான மனப்போராட்டம், திரெளபதிக்கும் இளைய யாதவருக்குமான உரையாடல்,யாதவர் குலப் பூசல் சார்ந்து பலராமருக்கும் இளைய யாதவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்,யுவனாஸ்வன் மாந்தாஸ்யதியைப் பெற்றெடுத்து, தாயுமானவனாக மாறுவது. பாண்டவர்களின் இருப்பினைக் கௌரவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காக குந்திதேவி அஸ்தினபுரியிலேயே தங்கிவிடுவது, வனவாசத்திற்குப் புறப்படும் முன்பாகத் திரௌபதி தம் பிள்ளைகளைத் துரியோதனனின் மனைவி பானுமதியிடம் ஒப்படைப்பது, இளைய யாதவருக்கும் சால்வனுக்கும் இடையே நடக்கும் போரில் இளைய யாதவரின் படையினர் இளைய யாதவருக்கு மாறுபாடாகச் செயல்படுவது, அந்தச் சூழலையும் இளைய யாதவர் வெற்றிகொண்டு, சால்வனை வெற்றிகொள்ளுதல். என சொல்வளர்க்காடு நாடகீயமான பகுதிகளையும் கொண்டிருக்கிறது.

கானக வாழ்வில் புகும் பாண்டவர்கள் ஒவ்வொரு காடாக பயணிப்பதும் அந்தந்தக் காடுகளோடு தொடர்புடைய மெய்மைச் சிந்தனைப் பள்ளிகளில் உரையாடுவதும் என விரியும் நாவல் அதன் வழியே இந்திய நிலத்தில் உருவாகி வந்த வெவ்வேறு மெய்மை தரிசனங்களைக் காட்டுகிறது.

சொல்வளர்காட்டின் 'வேதக்கல்வியில் பெண்களின் இடம்’ குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. திரௌபதி வைரோசனரிடம் கேட்கும் வினாவிலிருந்து, 'வேதக்கல்வியின் பெண்களின் பங்களிப்பு’ குறித்து பேசும் நாவல் கார்க்கி, வதவா பிரதித்தேயி, அம்பை காத்யாயனி, சுலஃபை மைத்ரேயி எனத் தொடர்கிறது.

சொல்வளர்காட்டில் முக்கியமான கதை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சுஃபர கௌசிகர் என்ற 'ஆசுர வேள்வி’ செய்யும் அந்தணர் பற்றிய நிகழ்வு வழியே அவருக்கு உதவும் பொருட்டு அரணிக் கட்டைகளைத் தேடிச்செல்லும் பாண்டவர்கள் மாண்டு (தருமனைத் தவிர) மீண்டும் உயிர் பெறுதல், அவர்கள் மூத்த யட்சர் மணிபத்மரைத் தம் மூதாதையர்களுள் ஒருவராக ஏற்றல் ஆகியவை விவரிக்கப்படுகின்றன.

சொல்வளர்காட்டிற்குள் உபகதையாக விரியும் அரசர் சோமகன் பற்றிய கதை, கோபானர் தருமருக்கு ஹரிசந்திரன் வாழ்க்கையைக் கூறுவது, கிரிஷ்மன் மூன்று தந்தையர் கதையைக் கூறுவது, மிதிலையில் அரசமுனிவர் ஜனகர் தன்னுடைய அமைச்சர் அஸ்வலனரின் ஆலோசனையின்படி, 'பகுதட்சிணைப் பெருவேள்வி’யை நடத்துவது, அதில் பங்கேற்றும் யாக்ஞவல்கியர் தன்னுடைய மெய்யியல் சிந்தனைகளால் கார்க்கி உள்பட அனைவரையும் வெற்றிகொண்டு, 'பாரதவர்ஷத்தின் அந்தண முதல்வர்’ என்று அறியப்படுவது ஆகிய நிகழ்வுகளும் மையஓட்டத்திற்கு இணைக்கதைகளாக வருகின்றன.

தருமர் இறுதியில் கந்தமாதான மலையில் பிரபஞ்சப் பெருநெருப்பினை எதிர்கொண்டு, அதற்குத் தன்னையே உவந்தளித்து, அகத்திலும் புறத்திலும் எரிந்து, புடம்போடப்பட்ட தங்கமாக மீண்டு வருகிறார்.

கதை மாந்தர்

இளைய யாதவர், தருமர், திரௌபதி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் விதுரர், சகுனி, துரியோதனன், குந்தி, பானுமதி, சால்வன், பலராமர், பீஷ்மர், ஹரிசந்திரன், னைகர், கிரிஷ்மன், யுவனாஷ்வன், யாக்ஞவல்கியர் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page