under review

சிவக்கொழுந்து தேசிகர்

From Tamil Wiki
Revision as of 19:30, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)

சிவக்கொழுந்து தேசிகர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். பதிப்பாசிரியர். இவர் முயற்சியால் திருவாசகம் முதன் முறையாக அச்சில் பதிப்பிக்கப்பட்டது.

உ.வே.சாமிநாதையர் இவருடைய சிற்றிலக்கிய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.

(பார்க்க : சிவக்கொழுந்து சிவாச்சாரியார்)

பிறப்பு, கல்வி

சிவக்கொழுந்து தேசிகரின் நூல்களை பதிப்பித்த உ.வே.சாமிநாதையர் பதிவு செய்துள்ள செய்திகளைக் கொண்டே சிவக்கொழுந்து தேசிகரின் வாழ்க்கை பற்றி செய்திகளை அறியமுடிகிறது

சிவக்கொழுந்து தேசிகர் கும்பகோணம் என அழைக்கப்படும் திருகுடந்தைக்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தார். கொட்டையூரின் இன்னொரு பெயர் எரண்டையூர். சிவக்கொழுந்து தேசிகரின் தந்தை தண்டபாணி தேசிகர். இவர்கள் பரம்பரை சிவாச்சாரியார்கள். (பூர்ணேசுவர கோத்திரம்)

சிவக்கொழுந்து தேசிகர் வைத்தியநாத தேசிகரின் வழிவந்தோரிடம் கல்வி பயின்றார். கொட்டையூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

சிவக்கொழுந்து தேசிகருக்கு இரு மனைவியர். இரு ஆண்மக்கள் ஐந்து பெண்மக்கள் என ஏழு குழந்தைகள். இவருடைய முதல் மனைவிக்குப் பிறந்த வடுகநாத தேசிகரின் பெயரரான சிவக்கொழுந்து தேசிகரின் மகன்தான் திருப்பனந்தாள் காசிமடத்தின் தலைவர் காசிவாசி சுவாமிநாத தேசிகர். உ.வே.சாமிநாதையருக்கு நிதியுதவி செய்து சிவக்கொழுந்து தேசிகரின் நூல்களை பதிப்பித்தவர் சுவாமிநாத தேசிகர்தான். இரண்டாம் மனைவியில் பிறந்தவரான ஸ்ரீ சாமிநாத தேசிகர் மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக தமிழ் பயின்று, 1864-ல் கும்பகோணம் கல்லூரியிலும் பின்னர் திருவனந்தபுரம் கல்லூரியிலும் தமிழாசிரியராக பணிபுரிந்தார்.

சிவக்கொழுந்து தேசிகரின் பிறப்பு ,மறைவு வருடங்கள் தெளிவாக அறியப்படவில்லை.

இசை

சிவக்கொழுந்து தேசிகர் குறவஞ்சி நாடகம் இசைப்பாடல்களை எழுதினார். அவற்றுக்குரிய இசையமைப்பை தஞ்சாவூரில் வாழ்ந்த பொன்னையா பிள்ளை என்னும் இசையறிஞரின் உதவியுடன் அமைத்தார். அவற்றில் 39 கீர்த்தனைகள் ,3 வெண்பாக்கள் , 2 அகவல்கள், 25 விருத்தங்கள், 2 கொச்சகலிப்பாக்கள் அடங்கியிருக்கின்றன.

இலக்கியப் பங்களிப்பு

சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையில் சரபோஜி மன்னரின் ஆட்சியின் போது, அமைக்கப்பட்ட நூலாராய்ச்சிக்குழுவில் பணியாற்றினார். பின்னர் சென்னையில் தாண்டவராய முதலியார் தலைமையில் அமைந்த சென்னை கல்வி சங்கத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றினார்.

உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தங்கள் தொகுப்பில் கோடீச்சுரக்கோவை, சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம், தஞ்சைப் பெருவுடையார் உலா ஆகியவை இடம்பெற்றுள்ளன. கொட்டையூர் உலா கிடைக்கவில்லை. சரசக்கழிநெடில் என்னும் தலைப்பில் இவர் எழுதிய அகத்துறைப் பாடல்களும் கிடைக்கவில்லை என்று உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

புராணங்கள்

சிவக்கொழுந்து தேசிகர் 'திருவிடைமருதூர் புராணம்' என்னும் நூலை தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் விருப்பத்திற்கிணங்க எழுதினார். காவிய இலக்கணங்கள் அமைந்த அந்நூல் 1387 பாடல்கள் அடங்கியது. ஆச்சாபுரம் எனப்படும் திருமணநல்லூர் பற்றியும் ஒரு புராணம் எழுதியிருக்கிறார். அதில் 533 செய்யுள்கள் உள்ளன.

திருவாசகம் பதிப்பு

1834-ல் திருவாசகத்தின் ஒரு பதிப்பை முதல்முறையாக கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் அச்சிட்டு வெளியிட்டதாக உ.வே.சாமிநாதையர் எழுதிய குறிப்பில் குறிப்பிடுகிறார்.

ஆன்மிகப் பணிகள்

கொட்டையூர் ஆலயத்தில் சந்திரசேகர மூர்த்தி சிற்பம் பழுதடைந்திருந்ததை அகற்றி புதியசிலை செய்து அச்சிலை ஊர்வலமாகச் செல்ல தேர் ஒன்றும் செய்து கொடுத்தார்.

மறைவு

சிவக்கொழுந்து தேசிகர் 96-ஆம் வயதில் இறந்தார்.

இலக்கிய இடம்

’சொல்லணிகளை அமைப்பதிலும் பலவகையான தொனிகளை அழகுபெற அமைப்பதிலும் இவர் மிக ஆற்றல் உடையவர். ஒரு தொகுதியாகவுள்ள பல பொருட்களின் பெயர்களை தொனியில் ஆங்காங்கே அமைத்திருத்தல் அறிந்து பாராட்டுடுதற்குரியது. கோடீசுரக்கோவையில் காணப்படும் மிகுதியான தொனிகளைப்போல் வேறெந்த தமிழ் நூலிலும் காணற்கரிது’ என்று உ.வே.சாமிநாதையர் தஞ்சை பெருவுடையார் உலா நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

சரசக்கழிநெடில் என்னும் நூலில் உள்ள கீழ்க்கண்ட பாடல் சிவக்கொழுந்து தேசிகரின் தொனி முறைமைக்கு உதாரணம். சூரியனின் பெயர்களை சிலேடையாகப் பயன்படுத்தி எழுதப்பட்டது இப்பாடல். தஞ்சை சரபோஜி மன்னர்மேல் காதல் கொண்ட பெண் மன்மதனைப் பழிப்பது போல் எழுதப்பட்டது

பிரபவன் ஆகி பிரஜோத்பத்தி செய்கின்ற மன்மதா இன்று

பேதையேன் என்னை பரிதாபி ஆக்கல் என் மன்மதா

பரவும் கடலினை துந்துபியாகக் கொண்ட மன்மதா நீயும்

பாவைமார்களுக்கு விரோதி ஆயினதேன் மன்மதா

வானின்மேல் கோடும் துன்மதியை குடையாக்கி மன்மதா காற்றாம்

வடக்கோடும் நேர்கொண்டாய் இது என்ன காலயுத்தி மன்மதா?

மீனகேதனத்தினால் விஜயம் பெறலாமோ மன்மதா யார்க்கும்

விகுர்தி ஆகாதிருத்தல் மிகவும் ஐயமாமே மன்மதா

நூல் பட்டியல்

  • கொட்டையூர் உலா
  • சரபேந்திரர் வைத்திய முறைகள்
  • சரபேந்திரர் சன்னிரோக சிகிச்சைகள்
  • சரபேந்திரர் வைத்தியம்
  • சரபேந்திரர் பூபாலக் குறவஞ்சி நாடகம்
  • கோடீச்சுரக்கோவை
  • திருவிடைமருதூர்ப் புராணம்
  • தஞ்சைப் பெருவுடையார் உலா
  • ஆச்சாபுரத் தலபுராணம்
  • சரசக்கழிநெடில்

உசாத்துணை


✅Finalised Page