சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு
சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு (1939-40) : இலங்கைத் தமிழ் எழுத்தாளர் எச்.நெல்லையா எழுதிய நாவல். இலங்கைத்தமிழருக்கும் இந்தியாவுக்குமான நட்பை வலியுறுத்தும் தொடக்ககால நாவல் இது. பிற்கால அரசியல் சூழலில் இது கவனிக்கப்பட்டது
எழுத்து -பிரசுரம்
வீரகேசரியின் ஆசிரியராக இருந்த எச்.நெல்லையா இந்நாவலை வீரகேசரியில் 1939ல் தொடராக வெளியிட்டார். 1940ல் நூலாகியது. ‘சமீபகாலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதை எல்லாரும் அறிவார்கள். விரும்பத்தகாத இம்மனஸ்தாபத்தை நீக்கி இரண்டு நாடுகளையும் அன்பினால் இணைப்பதற்கு முயற்சிகள் செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்நூலை வெளியிட்டுள்ளேன். இந்தியா இலங்கை தொடர்பு அன்பு நிறைந்த சினேகமாகத்தான் இருக்கமுடியும் என்ற அசைக்கமுடியாதநம்பிக்கையுடன் வரையப்பட்டுள்ளது இக்கதை’ என்று முன்னுரையில் நெல்லையா குறிப்பிடுகிறார்
1931-1940 காலகட்டத்தில் ஏ.ஈ.குணசிங்க என்னும் சிங்கள அரசியல்வாதி கடுமையான தமிழ் எதிர்ப்பு பேச்சுக்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார். நடேசய்யர் தொழிற்சங்க உறவுகளை முறித்துக்கொண்டு சிங்கள அரசியல்கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். இலங்கையின் முதல் பிரதமர் டி.எல்.சேனாநாயகா இலங்கையின் அதிகாரம் தமிழர்களிடம் செல்ல அனுமதிக்கப்போவதில்லை என அறிவித்திருந்தார். அச்சூழலில் இந்நாவல் வெளிவந்தது என்று தெளிவத்தை ஜோசப் குறிப்பிடுகிறார்.
கதைச்சுருக்கம்
120 பக்கம் கொண்ட சிறிய நாவல் இது. இதுஇல் கண்டியைச் சேர்ந்த சோமாவதி என்னும் சிங்களப்பெண் சந்திரசேகரன் என்னும் இந்தியத் தமிழ் இளைஞனைக் காதலிக்கிறாள். சிங்கள அரசியல்வாதியான அவள் அண்ணன் விஜயரட்ணவுக்கும் தந்தைக்கும் இது தெரியவர கடுமையான எதிர்ப்பு உருவாகிறது. மேடைப்பேச்சு வழியாகவும் துண்டுப்பிரசுரம் வழியாகவும் விஜயரட்ண வெறுப்பை வளர்க்கிறான். அந்த வெறுப்பை கடந்து காதலர் இணைகிறார்கள்
இலக்கிய இடம்
இலங்கையில் சிங்களர் நடுவே தமிழர் வெறுப்பு உருவாகி வந்த சூழலைச் சித்தரிக்கும் நாவல் இது.
உசாத்துணை
- மலையகச் சிறுகதை வரலாறு- தெளிவத்தை ஜோசப்
- தமிழ் நாவல் சிட்டி சிவபாதசுந்தரம்
- ஈழத்துப் புதின இலக்கியம்