first review completed

சுகிர்தராணி

From Tamil Wiki
சுகிர்தராணி

சுகிர்தராணி (பிறப்பு: 1973) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

பிறப்பு, கல்வி

கவிஞர் சுகிர்தராணி இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்திற்கு அருகில் உள்ள லாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் 1973ல் பிறந்தவர். தாய் -தவமணி, தந்தை - சண்முகம். தந்தை இராணிப்பேட்டையில் உள்ள EID Parry நிறுவனத்தில் பணி புரிந்தவர். சுகிர்தராணி 1-10 வகுப்புவரை இலாலாப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்தார். 11 -12 வகுப்புகளை இராணிப்பேட்டையில் படித்தார். பின்னர் இராணிப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். பிற படிப்புகள்: எம்.ஏ. - தமிழ் இலக்கியம், எம்.ஏ. - பொருளாதாரம், பி.எட்.- தமிழ்

தனிவாழ்க்கை

சுகிர்தராணி காவேரிப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகின்றார்.

இலக்கிய வாழ்க்கை

அவளை மொழிபெயர்த்தல்
கவிதைகள்

கவிஞர் சுகிர்தராணி 1990களின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறார். சுகிர்தராணியின் ஆறாவது தொகுப்பு வரையிலான மொத்தத் தொகுப்பும் “சூடிய பூ சூடுக” என்ற தலைப்பில் வெளியாகியது. . 1996-2016 வரை சுகிர்தராணி எழுதிய கவிதைகளை காலச்சுவடு பதிப்பகம் முழுத்தொகுப்பாக 'சுகிர்தராணி கவிதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டது.

இலக்கிய அழகியல்

பெண்ணுடல் விடுதலை பெறாமல் பெண்விடுதலை சாத்தியமில்லை, பெண்விடுதலை அடையாமல் தலித்விடுதலை சாத்தியமில்லை என்று எண்ணும் சுகிர்தராணி தான் ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் இருக்கச்சொல்லி சமூகம் வற்புறுத்தியதாலேயே எழுத வந்தேன் என்று கூறுகிறார். “பெண் உடலரசியல் இயக்கம் 2000க்கு பிறகு தீவிரமடைந்திருந்தது. பாலினச் சமத்துவமின்மை, பெண்கள் மீதான கலாசாரப் பண்பாட்டு சமூக அழுத்தங்களை பூடகமாகச் சொல்லி ஆணாதிக்கத்தை இன்னும் வலுப்படுத்தாமல் கவிதை எனும் ஆயுதத்தை இன்னும் கூர்மையாக வைக்க வேண்டிய தேவை எழுந்தது. ஆனால் உடலரசியல் என்றாலே இங்கே காமத்தை எழுதுகிறார்கள் என்று தட்டையாகத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண் உடலைச் சிதைக்கும் மனப்பான்மை உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. பெண்ணுடைய உடல் போகத்திற்கானது அல்ல, அவள் உடலும் உள்ளமும் ஒருசேர விடுதலை அடைவதுதான் சமூக மாற்றத்திற்கான வழி என்பதால் இவற்றை வெளிப்படையாகப் பேச வேண்டிய தேவை எழுகிறது. சாதித் தூய்மை, குடும்பத் தூய்மை அனைத்தும் பெண் உடலில் இருப்பதாக இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.” என்று தன் அழகியல்நோக்கை சுகிர்தராணி முன்வைக்கிறார்.

விவாதங்கள்

டெல்லிப் பல்கலைக் கழகத்தில் மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்ட உலக அளவில் பெரும் சர்ச்சையானது. பல எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் குரல் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்றத்தில் அறிக்கை வெளியிட்டார்.

விருதுகள்

  • தேவமகள் கவித்தூவி விருது 2002 -கோவை. (விருது ரூ 2000)
  • பாவலர் எழுஞாயிறு விருது, சேலம். (விருது ரூ 5000)
  • சாதனைப் பெண் விருது, பெண்கள் முன்னணி - எழுத்தாளர் சிவகாமி IAS அமைப்பு.
  • புதுமைப் பித்தன் நினைவு விருது – காலச்சுவடு
  • அம்பேத்கர் பேரொளி விருது, அம்பேத்கர் 125 வது ஆண்டு நிறைவு விழா, தலித் பண்பாட்டுக் கூடல், சென்னை.
  • The Vibrant Voice of Subalterns Award, 2018, திருவள்ளுவர் பல்கலைக் கழகம், வேலூர். விருது ரூ.10,000
  • குத்தூசி குருசாமி நினைவு விருது - இப்படிக்கு ஏவாள், கோவை.
  • அன்னை மீனாம்பாள் சிவராஜ் விருது, இந்தியக் குடியரசுக் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு
  • அவ்வை விருது, மீறல் இலக்கியக் கழகம், புதுச்சேரி. விருது ரூ 10,000
  • எழுத்துச் செம்மல் விருது, அம்பேத்கர் இலக்கியக் கழகம், சென்னை.
  • சுந்தர ராமசாமி விருது, நெய்தல் இலக்கிய அமைப்பு, நாகர்கோயில்.
  • காரைக்கால் அம்மையார் விருது, பன்னாட்டு பெண்கள் அமைப்பு, சென்னை.

இலக்கிய இடம்

"பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இக்கவிதைகள். காதல்,காமம்,வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண், சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது" என கவிஞர் சுகுமாரன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

சுகிர்தராணி
கவிதைத் தொகுப்பு
  • கைப்பிடித்து என் கவிதை கேள் (பூங்குயில் பதிப்பகம்: 2002)
  • இரவு மிருகம் (காலச்சுவடு பதிப்பகம்: 2004)
  • அவளை மொழிபெயர்த்தல் (காலச்சுவடு பதிப்பகம்: 2006)
  • தீண்டப்படாத முத்தம் (காலச்சுவடு பதிப்பகம்: 2010)
  • காமத்திப்பூ (காலச்சுவடு பதிப்பகம்: 2012)
  • இப்படிக்கு ஏவாள் (காலச்சுவடு பதிப்பகம்: 2016)

இணைப்புகள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.