under review

நாராயண குருகுலம்

From Tamil Wiki
Revision as of 06:25, 7 May 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஃபெர்ன்ஹில் நாராயண குருகுலம் ஊட்டி
நாராயண குருகுலம் வர்க்கலா
நித்ய சைதன்ய யதி சமாதி ஊட்டி
ஊட்டி குருகுலம் பிரார்த்தனையிடம்

நாராயண குருகுலம் (1923) நடராஜ குரு நிறுவிய குருகுலம். நடராஜ குரு தன் கல்விமுறையை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் தொடங்கிய கல்விநிறுவனம் பின்னர் ஆன்மிகப் பயிற்சிநிலையமாக ஆக்கப்பட்டது. நடராஜகுருவுக்குப் பின் நித்ய சைதன்ய யதி, அவருக்குப்பின் முனி நாராயணப் பிரசாத் ஆகியோர் தலைமையேற்றனர். உலகமெங்கும் பல கிளைகள் கொண்ட அமைப்பு. தலைமையகம் கேரளத்தில் வற்கலாவில் உள்ளது. தமிழகத்தில் ஊட்டியில் ஃபெர்ன்ஹில் பகுதியில் உள்ளது

வரலாறு

கேரளத்தின் ஆன்மிகஞானியான நாராயணகுருவின் முதன்மை மாணவரான நடராஜகுரு 1924ல் நாராயணகுருகுலத்தின் முதல் வடிவை நிறுவினார்.

நீலகிரி

1923-ல் நீலகிரியில் குன்னூரில் நாராயண குருவின் மாணவரான போதானந்தருடன் வந்து தங்கினார். 8 ஜூன் 1923ல் குன்னூரில் மாணவர்களுடன் உண்டு உறையும் ஒரு குருகுல அமைப்பை உருவாக்கி வேதாந்த குருகுலம் என பெயரிட்டார். அங்கே மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார். அவ்வமைப்பே பின்னாளில் நாராயணகுருகுலம் என உருமாறியது.

ஊட்டி

நடராஜ குரு 1924 முதல் நாராயணகுருகுலத்தை ஊட்டியில் நடத்த ஆரம்பித்தார் கடும் நிதிநெருக்கடி நடுவே நடைபெற்றது. மாணவர்களுடன் சந்தையில் நன்கொடை வசூலித்து குருகுலத்தில் உணவு ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருந்தது.

8 ஜூன் 1924-ல் இக்குருகுலத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது. அமைச்சர் ஏ.பி.பத்ரோ (A. P Patro) விழாவுக்கு தலைமை வகித்தார். திவான் பகதூர் ராமசாமி சாஸ்திரி ஆகியோர் பங்கெடுத்தனர். அவ்விழா குறித்த செய்தி இந்து நாளிதழிலும் வெளிவந்தது. ஆயினும் குருகுலத்தின் நிதிநிலைமை மேம்படவில்லை.

நாராயண குருவிடம் பக்தி கொண்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த ராமசாமிப்பிள்ளை என்னும் தமிழ் வணிகரிடமிருந்து கிளீவ்லேண்ட் எஸ்டேட் என்னும் தேயிலைத் தொழிற்சாலைக்குள் ஓர் இடத்தை அன்பளிப்பாகப் பெற்று அங்கே குருகுலத்தை நடத்தினார்.

1926ல் அரசிடமிருந்து ஃபெர்ன்ஹில் பகுதியில் நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பெற்று சிறிது சிறிதாக அதன் தொகையை கட்டி நிரந்தர உறைவிடமாக ஆக்கிக்கொண்டார். 13 ஜூன் 1926,ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா ஶ்ரீசித்திரைத் திருநாள் பாலராம வர்மா புதிய குருகுலத்திற்கு அடிக்கல் இட்டார். மூன்றாமாண்டு நிறைவு விழாவில் திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமஸ்வாமி ஐயர் தலைமை வகித்தார். பொப்பிலி அரசர், அவருடைய ஆங்கிலப்பயிற்றுநர் திரு டாட்வெல் ஆகியோர் பங்கெடுத்தனர்.

ஆயினும் குருகுலம் கடும் பொருளியல் நெருக்கடியில் இருந்தது. நடுவே சின்னம்மை நோயும் தாக்கவே குருகுலம் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் போதானந்தரின் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். 1926ல் நடராஜ குரு வர்க்கலாவுக்கு சென்றார்

சார்போனில் தத்துவக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்று திரும்பி வந்த நடராஜகுரு 1935ல் ஊட்டிக்கு வந்தார். ஊட்டி ஃபெர்ன் ஹில் நிலத்தில் தன் கையாலேயே மண்ணாலும் தகரத்தாலும் கட்டப்பட்ட குடிசையில் நாராயணகுருகுலத்தை மீண்டும் தொடங்கினார். தத்துவப் பயிற்சி, தியானம் ஆகியவற்றுடன் மாணவர்களுக்கு இலவசக் கல்வியும் அளித்தார்.

நடராஜ குரு 1936 முதல் தன் கையாலேயே கட்டிய ஊட்டி ஃபெர்ன் ஹில் குருகுலத்தில் தனியாக வாழ்ந்தார்.1952-ல் ஹென்றி பெர்க்ஸனின் மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் நடராஜ குருவின் மாணவரானார். 1953ல் அவருடன் நித்ய சைதன்ய யதி வந்து சேர்ந்துகொண்டார். நடராஜ குருவின் நூல்கள் ஐரோப்பாவில் புகழ்பெறத்தொடங்கின. அவர் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஏராளமான மாணவர்கள் அமைந்தனர்.

ஊட்டி குருகுலத்தில் நாராயணகுருவின் சிலையும் நித்ய சைதன்ய யதியின் சமாதியும் அமைந்துள்ளன.

நடராஜகுரு சமாதி வர்க்கலை
குரு நித்யா காவிய அரங்கு
வர்க்கலா
நூற்றாண்டுவிழா தொடக்கம்

நாராயண குருகுலம் அமைப்பு வர்க்கலாவை தலைமையிடமாகக் கொண்டு 24 பிப்ரவரி 1959-ம் ஆண்டு முறையாகத் தொடங்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது. மங்கலானந்தர், ஜான் ஸ்பியர்ஸ், நித்ய சைதன்ய யதி, முனி நாராயண பிரசாத் ஆகியோர் ஆசிரியர்நிரை என அறிவிக்கப்பட்டனர்.

வர்க்கலா குருகுலத்தில் நடராஜ குருவின் சமாதியிடம் உள்ளது. அது ஒரு நூலகம், சந்திப்புக்கூடம் ஆகியவை அடங்கிய கட்டிடமாக உள்ளது.

குரு வரிசை

தியான மண்டபம், ஊட்டி

நடராஜ குருவுக்குப்பின் மங்கலானந்தர், ஜான் ஸ்பியர்ஸ், நித்ய சைதன்ய யதி, முனி நாராயண பிரசாத் ஆகியோர் குருவரிசையாக அறிவிக்கப்பட்டனர். மங்கலானந்தர் நடராஜ குரு இருக்கையிலேயே மறைந்தார். ஜான் ஸ்பியர்ஸ் தனக்கான தனி இடம் அமைத்துக்கொண்டு விலகிச் சென்றார். ஆகவே முனி நித்ய சைதன்ய யதி குருகுலங்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். அவருக்குபின் முனி நாராயண பிரசாத் குருகுலத் தலைவர் ஆனார். அவருக்கு பின் சுவாமி தியாகீஸ்வரன் குருகுலத்தை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளைகள்

நாராயண குருகுலத்தின் கிளைகள் கீழ்க்கண்ட ஊர்களில் உள்ளன

இந்தியா
  • வர்கலா (தலைமையிடம்)
  • ஊட்டி ஃபெர்ன்ஹில் தமிழ்நாடு
  • சோமனஹள்ளி, பெங்களூர்
கேரளத்தில்
  • தோல்பெட்டி
  • வைத்திரி
  • கனகமல
  • குய்யாலி
  • செறுவத்தூர்
  • எடப்பள்ளி
  • மலையாற்றூர்
  • தோட்டுவா
  • திருப்பணித்துறை
  • எங்கடியூர்
  • பாலக்காடு
  • வீசுமலை
  • வாளையாறு
  • ஓச்சிறை
வெளிநாடு
  • போர்ட்லாண்ட், அமெரிக்கா
  • ஓரிகன், அமெரிக்கா
  • ஃபிஜி
  • இலங்கை

துறவியர்

நாராயண குருகுலத்தில் தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் என பல துறவிகள் குறிப்பிடும்படி உள்ளனர்

  • சுவாமி வினய சைதன்யா
  • சுவாமி வியாசப்பிரசாத்
  • சுவாமி மந்த்ரசைதன்யா
  • சுவாமி தன்மயா

நூற்றாண்டு

நாராயண குருகுலத்தின் நூற்றாண்டு 2023-2024 ஆண்டில் கொண்டாடப்பட்டது. 21 ஆகஸ்ட் 2023-ல் வர்க்கலா நாராயண குருகுலத்தில் நிகழ்ந்த விழாவில் இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் , கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

பணிகள்

பதிப்புப்பணிகள்
  • 1942-ல் நடராஜ குரு எழுதிய The Way of The Guru என்னும் முதல்நூல் நாராயண குருகுலம் சார்பில் சிறுநூலாக வெளியிடப்பட்டது. அதுவே குருகுல வெளியீட்டின் தொடக்கமாகும்.
  • 1969-ல் நாராயண குருகுலம் சார்பில் பதிப்பகம் தொடங்கப்பட்டுதழ் நடராஜ குருவின் ஆத்மோபதேச சதகம் வெளியிடப்பட்டது.
  • 1974ல் வர்க்கலா குருகுலத்தில் பிரசுரத்திற்கான அச்சகம் நிறுவப்பட்டது.
இதழ்கள்
  • வேல்யூஸ்: ஜான் ஸ்பியர்ஸ் முன்னெடுப்பில் Valyues என்னும் ஆங்கில மாத இதழ் 195-ல் தொடங்கப்பட்டது. ஜான் ஸ்பியர்ஸ் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தபோது 1961-1962 காலகட்டத்தில் இதழை நித்ய சைதன்ய யதி நடத்தினார். 1974 வரை இதழ் தொடர்ச்சியாக வெளிவந்தது
  • குருகுலம் : 1953 ஜனவரி முதல் வர்க்கலா குருகுலத்தில் இருந்து நாராயண குருகுலம் இதழ் வெளிவரத்தொடங்கியது. தொடக்கத்தில் மங்கலானந்தர் அதன் ஆசிரியராக இருந்தார். நித்ய சைதன்ய யதி, சுவாமி மந்த்ரசைதன்யா, கே.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். பின்னர் முனி நாராயணப் பிரசாத் ஆசிரியரானார். இப்போது சுவாமி தியாகீஸ்வரன் ஆசிரியராக உள்ளார்
  • குருகுலம் ஆங்கிலம்: 1985 முதல் போர்ட்லண்ட் குருகுலத்தில் இருந்து டெபோரா புக்கானன் ஆசிரியத்துவத்தில் குருகுலம் ஆங்கில இதழ் வெளிவருகிறது.

உசாத்துணை


✅Finalised Page